எனக்கு காமெடி பண்ண கத்துக் குடுத்ததே அந்த இயக்குநர்தான்... தனுஷ் யார சொல்றாரு தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள ஆங்கிலத் திரைப்படமான "தி கிரே மேன்" நேற்று வெளியானது. அடுத்ததாக நான்காவது முறையாக ஒரு இந்தி படத்தில் நடிக்கப் போகிறார்.
தமிழில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். வாத்தி திரைப்படம் தெலுங்கில் 'சார்' என்கிற பெயருடன் இரு மொழுகளில் உருவாகிறது.
இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் நான்கு இயக்குநர்கள் தன்னுடைய கேரியரில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறியுள்ளார். முதல் மூன்று இயக்குநர்கள் அனைவராலும் கண்டுபிடிக்கக் கூடியவர்கள். ஆனால் யார் அந்த நான்காவது இயக்குநர்...

ஆல்ஃபபெட் செல்வராகவன்
இயக்குநரும் என் அண்ணனுமான செல்வராகவன் தான் என்னுடைய ஆல்ஃபபெட்ஸ். அது தெரிந்தால்தானே ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும் என்று தனுஷ் கூறியுள்ளார். உண்மைதானே, துள்ளுவதோ இளமை தொடங்கி, காதல் கொன்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என்று அவர்கள் கூட்டணியில் வந்த திரைப்படங்களே தனுஷின் கூற்றை உண்மை என்று நிரூபித்து விடும். தற்சமயம் நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தகப்பன் பாலு மகேந்திரா
காதல் கொண்டேன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலு மகேந்திரா அவர்கள் அந்த நிகழ்ச்சியில், தான் அடுத்து தனுஷை இயக்கப் போவதாக அறிவித்தார். அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் நடிக்கும்போதுதான் நடிப்பின் இரண்டாவது பரிமாணத்தை கற்றுக் கொண்டதாகவும், அவரை ஒரு தந்தையை போல் பார்ப்பதாகவும், அவர் மீது மரியாதை மற்றும் பக்தி இருப்பதாகவும், அந்தப் படத்தின் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பொற்காலம் எனவும் தனுஷ் கூறியுள்ளார்.

தோழன் வெற்றிமாறன்
அது ஒரு கனா காலம் படத்தில் துணை இயக்குநராக இருந்த காலக்கட்டத்திலிருந்து இன்று வரை தனுஷின் வளர்ச்சியில் முக்கிய பங்குடையவர் இயக்குநர் வெற்றிமாறன். அதனை எப்போதுமே தனுஷ் கூறியுள்ளார். இயக்கம், நடிப்பு தாண்டி இருவரும் சேர்ந்து திரைப்படங்களையும் தயாரித்துள்ளனர். தனுஷ் நடிக்கும் படத்தை வெற்றியும், வெற்றி இயக்கும் படங்களை தனுஷும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூபதி பாண்டியன்
எத்தனை பேருக்கு இயக்குநர் பூபதி பாண்டியனை தெரியும் என தெரியவில்லை. ஆனால் வின்னர் படத்தின் கைப்புள்ள வடிவேலு காமெடி டிராக்கையும், கிரி பேக்கரி காமெடி டிராக்கையும் எழுதியவர் தான் பூபதி பாண்டியன். தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தேசிய விருது வென்றுள்ள தனுஷ் இன்று வரை நடிப்பில் சவாலாக நினைப்பது நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதுதானாம். அதனை முதன் முதலில் தேவதையைக் கண்டேன் திரைப்படத்தில் பூபதிதான் கற்றுக் கொடுத்து உத்வேகம் கொடுத்ததாக தனுஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











