கேப்டன்... என்ன ரெண்டு அடி அடிங்க என்று மன்சூர் அலி கான் ஏன் கூறினார் தெரியுமா?
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர், நடன கலைஞர் என்ற பன்முகங்களைக் கொண்டவர் மன்சூர் அலி கான்.
கடைசியாக தி லெஜன்ட் படத்தில் நடித்திருந்தார். தற்சமயம் வாஸ்கோடகாமா, மெடிக்கல் மிராக்கிள் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த்திற்கும் மன்சூர் அலி கானிற்கும் இடையே நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

மன்சூர் அலி கான்
தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பாடல்களில் பின்னால் ஆடும் நடன கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் மன்சூர் அலி கான். ஹிந்தி நடிகர் அனுப்பம் கேர் நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்று அதன் பின்னர் நடிகரானார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற கேப்டன் பிரபாகரன் படத்தில்தான் முக்கிய வில்லனாக அறிமுகமானார்.

இசையமைப்பாளர் மன்சூர்
அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்ற மன்சூர் அலி கான் அதில் சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். பின்னர் படங்களை தயாரிப்பது, அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தல் களத்தை சந்திப்பது தனியாக கட்சி தொடங்குவது என்று தன்னை பிசியாகவே வைத்துக் கொண்ட ஒரு நபர் மன்சூர் அலி கான்.

விஜயகாந்த் மீது மரியாதை
வழக்கமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கொடுக்கும் பதில்கள் தக் லைஃப் வகையைச் சேர்ந்தவை. அதன் காரணமாகவே இப்போது முக்கியமான இயக்குநராக விளங்கும் லோகேஷ் கனகராஜ் அவரது ரசிகராக மாறினார். தற்சமயம் அவர் விஜய்யை வைத்து எடுக்கும் படத்தில் முதல் முறையாக மன்சூர் அலி கானை ஒப்பந்தம் செய்துள்ளார். அப்படிப்பட்ட மன்சூர் அலி கான் விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். காரணம் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் அவர் அறிமுகம் செய்ததால்.

தேர்தல்
ஒருமுறை நடிகர் சங்கம் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது பிரச்சார நேரத்தை தாண்டி தேர்தல் நேரத்திலும் உள்ளே இருந்து எனக்கு வாக்களியுங்கள் என்று அனைவரிடமும் கூறியிருக்கிறார். அதனை கண்ட சரத்குமார் மன்சூர் அலி கானை தடுக்க, அவரது பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருந்தாராம். உடனே விஜயகாந்த்திற்கு கால் செய்து விஷயத்தை கூறியிருக்கிறார் சரத்குமார். அடுத்த இருபதாவது நிமிடத்தில் அங்கு வந்து விஜயகாந்த்,"ஏய் மன்சூர்... இங்க மாதிரிலாம் பண்ண கூடாது என்னய்யா பண்ற" என்று தனக்கே உரிய அதட்டலான தொணியில் கேட்க,"கேப்டன், ஒன்னுல்ல... அவங்க ஏதோ சும்மா சொல்றாங்க. வேணும்னா என்ன ரெண்டு அடி அடிங்க... நீங்க என்ன கேக்கலாம் ஆனா மத்தவங்க சொன்னா கேட்க மாட்டேன்" என்பதுபோல் மன்சூர் அலி கானும் தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார் என்று மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications