Exclusive - திருமணம் வேண்டாம் என்றேன்.. அம்மாதான் எல்லாமே.. உருகிய கிங் காங்
சென்னை: நடிகர் கிங் காங்கின் மகள் திருமணம் சமீபத்தில்தான் முடிவடைந்தது. முதலமைச்சர் முதல் நடிகர்கள்வரை பலரும் மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம், வரவேற்பில் கலந்துகொள்ளாத சிவகார்த்திகேயன் நேற்று கிங் காங்கின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு கிங் காங் அளித்த பிரத்யேக நேர்காணலை பார்க்கலாம்.
கிங் காங் மகள் கீர்த்தனாவின் திருமணம்தான் கடந்த சில வாரங்களாக கோலிவுட்டின் ஹாட் டாபிக்குளில் ஒன்றாக இருந்தது. கோலிவுட்டில் பெரும்பாலான நட்சத்திங்கள் தொடங்கி முதலமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள்வரை பத்திரிகை வைத்த கிங் காங்; பெங்களூருவுக்கு சென்று சிவராஜ்குமாருக்கும் நேரடியாக பத்திரிகை வைத்தார். அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்திருந்ததால் பலரிடமும் அவருக்கு பழக்கம் இருக்கிறது.
சிம்ப்பிளாக நடந்த திருமணம்: கிங் காங் திருமணம் செய்துகொண்டபோதே பலரும் அவரை விமர்சித்தார்கள். அப்படிப்பட்டவர்கள் அவரது மகள் திருமணத்தையா விடுவார்கள். பிரபலங்கள் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்து இந்தத் திருமணத்தில் கல்லா கட்ட அவர் முடிவு செய்துவிட்டார் வரம்பு மீறி பேசினார்கள். ஆனால் அவரோ எதிலும் கவனத்தை செலுத்தாமல் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்தார்.

முதலமைச்சர் என்ட்ரி: பெசன்ட் நகர் முருகன் கோயிலில் சிம்ப்பிளாக திருமணம் நடந்தது. இதில் குறிப்பிட்டோர் மட்டும் கலந்துகொண்டார்கள். பிறகு தனியார் மண்டபத்தில் ரிசப்ஷனை வைத்தார் கிங். அதில் திடீர் ட்விஸ்ட்டாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் மட்டுமின்றி விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா என பலரும் கலந்துகொண்டார்கள்.
சிவகார்த்திகேயனின் வருகை: அதேசமயம் கிங் காங் பத்திரிகை வைத்த பல திரை நட்சத்திரங்கள் வரவில்லை. அவர்கள் வராததற்கு திருமணத்தில் கூடிய அதிகப்படியான கூட்டம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. தேவயானிகூட மண்டபத்தின் வாசல்வரை வந்துவிட்டு திரும்ப சென்றிருக்கிறார். சூழல் இப்படி இருக்க திருமணம் மற்றும் ரிசப்ஷன் ஆகியவற்றில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் நேற்று சிவகார்த்திகேயன் கிங் காங்கின் வீட்டுக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார். அதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
எக்ஸ்க்ளூசிவ் பேட்டி: இந்நிலையில் கிங் காங் ஃபில்மிபீட் தமிழுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், "எனது அம்மாதான் எனக்கு எல்லாமே. பொதுவாக ஒரு குழந்தை மாற்று திறனாளியாக பிறந்தால் அதனை பலரும் ஒதுக்கத்தான் பார்ப்பார்கள். ஆனால் என்னுடைய அம்மாவோ எனக்காக அத்தனை விஷயங்களை செய்துகொடுத்தார். எனக்கு என்னென்ன தேவையோ அவ்வளவையும் செய்து வைத்தார்.
திருமணமே வேண்டாம் என்றேன்: எனக்கு திருமணமே வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னேன். ஆனால் அவர்தான் என்னிடம், 'நான் போன பிறகு உனக்கு ஒரு துணை கண்டிப்பாக வேண்டும்' என சொல்லி பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். எனது மகளின் திருமணத்துக்குக்கூட அவ்வளவு செய்து வைத்திருந்தார். என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 18ஆம் தேதி. அன்றைய தேதி எனக்கு இரவு 12 மணிக்கு ஃபோன் செய்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்; 1.45 மணிக்கு இறந்துவிட்டார். அவரது ஆன்மாதான் எங்களை வழிநடத்தும்" என்றார். முன்னதாக கிங் காங்கின் மகளான கீர்த்தனா தான் காதலிப்பதாக முதலில் கிங் காங் அம்மாவிடம் சொல்லி அவர் மூலம்தான் க்ரீன் சிக்னல் வாங்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











