இந்தியாவிலேயே வீடுகளின் விலை கிடுகிடுவென அதிகரிக்கும் நகரங்கள் எவை தெரியுமா? இதோ லிஸ்ட்
சென்னை: நைட் ஃபிராங்கின் பிரைம் குளோபல் சிட்டிஸ் இன்டெக்ஸ் 2024ம் ஆண்டுக்கான காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிக ரியல் எஸ்டேட் விலைவாசி கொண்ட உலகளவில் 44 நகரங்களை அதில் பட்டியலிட்டுள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் இடையேயான இந்த காலாண்டு கால அறிக்கையின்படி, வீடுகளின் விலைவாசி உயர்வில் மும்பை மற்றும் டெல்லி முறையே மூன்றாவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
2023ம் ஆண்டு ஜனவரி-மார்ச் காலகட்டம் உடன் ஒப்பிடும்போது, மும்பை ஆறாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. அதே நேரத்தில் டெல்லி 17வது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரு நகரங்களிலும் வீடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதை இதை வைத்து புரிந்துகொள்ள முடிகிறது.

2024 முதல் காலாண்டில் ஐடி தலைநகர் என வர்ணிக்கப்படும், ரியல் எஸ்டேட்டின் சொர்க்கபுரியான பெங்களூர் 17வது இடத்திற்கு போயுள்ளது. முன்பு பெங்களூர் நகரம் 16வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களில் பெங்களூர் நகரில் வீடுகளின் ரேட், 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மிகவும் விலையுயர்ந்த வீடுகளுக்கான 44 நகரங்களின் லிஸ்டில், பிலிப்பைன்ஸ் தலைநகர், மணிலா முதலிடத்தில் உள்ளது. மணிலாவில் வீடுகளின் விலை ஆண்டுதோறும் 26.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜப்பான் தலைநகர், டோக்கியோ இரண்டாவது இடத்தில் உள்ளது, வீட்டு விலைகள் ஆண்டுதோறும் 12.5 சதவீதம் உயருகின்றன.
நைட் ஃபிராங்கின் பிரைம் குளோபல் சிட்டிஸ் இன்டெக்ஸ், உலகம் முழுவதும் உள்ள நகரங்களிலுள்ள வீடுக்கான விலை குறியீட்டை கண்காணிக்க உலகளாவிய ஆராய்ச்சி நெட்வொர்க்கை பயன்படுத்துகிறதாம். நைட் ஃபிராங்கின், இந்தியாவுக்கான ஆராய்ச்சி இயக்குனர் விவேக் ரதி கூறுகையில், உலகளவில் சொத்துக்கள் வாங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வீடுகள் விலை உயர காரணம், அவை ப்ரீமியம் சிட்டிகளில் அமைந்துள்ளதும், அங்கு மக்கள் அதிகம் குடி பெயருவதுமாகும்.
வணிக ரியல் எஸ்டேட் வலுவாக இருக்க காரணம், இந்தியாவில், 10 வருடங்கள் தொடர்ந்து ஒரே அரசு ஸ்திரமாக இருப்பதும், இனிமேலும் அதே அரசு இருக்கும் என்பதும், ஒரு காரணம் என்று விவேக் ரதி சுட்டிக் காட்டுகிறார். சென்னை நகரம் பற்றி இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் சென்னையின் ஆபீஸ் ஸ்பேஸ் விலைவாசி உயர்வதாக வேறு பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











