பழமைகளை உடைத்து.. பகுத்தறிவு புகுத்திய கலைஞன்.. அழிவில்லாத கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

சென்னை: தமிழ் சினிமா எத்தனையோ காமெடி நடிகர்கள் கண்டிருக்கிறது, கண்டுகொண்டிருக்கிறது, காணவிருக்கிறது. எத்தனை பேரிலும் தனித்து தெரியக்கூடியவர் கவுண்டமணி. ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று இந்த தலைமுறையிலும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரது காமெடி போட்டால் சேனலை மாத்தாமல் பார்த்து ரசிக்கும் கூட்டம் அவருக்கென்று நிலைத்து நிற்கிறது. மற்றவர்களை உருவ கேலி செய்கிறார், மட்டமாக பேசுகிறார் என்று அவரது காமெடி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் அவரின் காமெடி எப்போதுமே தனி ரகம்தான். அதற்கு கவுண்ட்டர்களும், டைமிங்குகளும் மட்டும் காரணமில்லை. தன்னுடைய பெரும்பாலான நகைச்சுவைகளில் பல உலக நடப்புகளையும் பகுத்தறிவையும் பேசியிருக்கிறார் அவர்.

கவுண்டமணி என்ற பெயரை சொன்னாலே போதும் கேட்பவரும், சொல்பவரும் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். அந்த பெயருக்குள்ளேயே அத்தனை விஷயங்களும் இருக்கின்றன. நாடக கம்பெனியில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி திரைத்துறையில் அசுர வேகத்தில் சென்று வென்று காட்டியவர். தனக்கு சின்ன ரோல்கள் கிடைத்தபோதுகூட அதில் எவ்வாறெல்லாம் ஸ்கோர் செய்யலாம் என்பதைத்தான் தனது முழு நேர எண்ணமாக வைத்துக்கொண்டார் அவர். அதன் வெளிப்பாடாக அவர் தலைமுறைகள் கடந்தும் கொண்டாடப்படுகிறார். 500க்கும் மேற்பட்ட படங்கள்வரை நடித்த கவுண்டமணி இப்போது வயோதிகம் காரணமாக ஒதுங்கியிருந்தாலும் அவரது நகைச்சுவைகளுக்கு வயது என்பதே ஆகவில்லை.

என்ன ஸ்பெஷல்?: பொதுவாக ஒரு காமெடி நடிகர் என்றால் தன்னை தாழ்த்திக்கொண்டு நடிக்கும் கேட்டகிரி இல்லை அடுத்தவரை கிண்டல் செய்யும் கேட்டகிரி என்ற இரண்டு கேட்டகிரிக்களில் இருப்பார்கள். கவுண்டமணி இதில் இரண்டாவது கேட்டகிரிதான்; அதனால் அவர் விமர்சனங்களை சந்தித்தார்தான். ஆனால் அவர் அடுத்தவரை கிண்டல் செய்யும் விதம்தான் தவறாக இருக்குமே பெரும்பாலான படங்களில் அவர் செய்த கிண்டல்கள் எதிரில் இருப்பவர் செய்த தவறையோ இல்லை அறிவிலியான செயலையோ கண்டிக்கும் நோக்கத்தில்தான் இருக்கும். சொல்லப்போனால் பிரம்பை எடுத்து அடித்து சொல்லிக்கொடுக்காமல் சிரிப்பை வரவழைத்து சிந்திக்க வைத்த வாத்தியாராகவே தமிழ் திரைப்பட நகைச்சுவை உலகத்தில் அவரை பலரும் பார்ப்பார்கள்.

பழமைகள் உடைத்த கவுண்டமணி: உதாரணமாக செந்தில் கவுண்டமணியிடம் சில பழமொழிகளை சொல்லிக்கொண்டிருக்க, 'கற்பூரம் ஒரு கெமிக்கல். அதை கொண்டு போய் ஏன் கழுதையிடம் காட்டுறீங்க', பனைமரத்துக்கு கீழே நின்னு பால குடிச்சாலும் கள் என்று சொல்றாங்கனு தெரியும்ல; அப்புறம் ஏன் அங்க போய் நின்னு பாலை குடிக்கிறீங்க' என கவுண்ட்டர் வசனத்துக்குள் அவர் பழமைகளை சுக்கு நூறாக உடைத்திருக்கிறார். 80களில் வந்த சினிமாக்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை போற்றிக்கொண்டிருந்த நிலைமையில்தான் கவுண்டமணியின் வருகையும், அவரது இது மாதிரியான கவுண்ட்டர்களும் புதிய உத்வேகத்தை அளித்தது என்பதுதான் உண்மை. அதுவும் அந்த சமயத்தில் அவர் தைரியமாக அதிகார வர்க்கத்தினரை, அரசியல்வாதிகளை தனது காமெடியில் வெளுத்து வாங்கியதெல்லாம் தைரியத்தின் உச்சம்.

Goundamani Birthday Today Here are Deep analysis about his Comedy

சமத்துவம் பேசிய கலைஞன்: பழமைகளை உடைத்த கையோடு தனது காமெடிகளில் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் புகுத்தியவரும் கவுண்டமணிதான். உதாரணமாக மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் கவுண்டமணியை பார்த்து எஸ்.எஸ்.சந்திரன், 'ஏன் ப்பா உன் பிள்ளை படிக்க போய்விட்டால் வெட்டியான் வேலையை யார் பார்ப்பது?' என்று கேட்க; அதற்கு சற்றும் தாமதிக்காமல், 'ஏன் கொஞ்ச நாள் நீயும் உன் புள்ளையும் பாருங்க' என்று சொல்லிவிட்டு செல்வதெல்லாம் செம தக் லைஃப். அந்த வசனத்தில் குல தொழிலை வெறுத்தல், சாதி திமிருடன் திரிபவர்களுக்கான சம்மட்டி அடி, அடுத்த தலைமுறைக்கு கல்வியின் முக்கியம் என சமத்துவம் உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் வைத்து அசத்தியவர்.

சீரியஸான ரியாக்‌ஷன்; ஆனால் சிரிப்பு வரும்: ஒரு நகைச்சுவை கலைஞன் என்றாலே அவரது முகம் எப்போதும் ஏதோ ஒரு விசித்திரமான பாவனைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற விதிகள் இருந்தன. அதனை சீரியஸான ரியாக்‌ஷனை வைத்துக்கொண்டும் காமெடி செய்யலாம் என நாகேஷ் மாற்றிக்காட்டினார். நாகேஷ் மாற்றிய அந்த விஷயத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றவர்களில் முதன்மையானவர் கவுண்டமணி. அவரது நிறைய காட்சிகளில் தன்னுடைய முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு தன்னுடைய டயலாக் மாடுலேஷன், பாடி லாங்குவேஜ், பேசும் வசனங்கள் ஆகியவைகளை கொண்டு பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். அந்த கலையை அவர் அளவுக்கு பின்னால் வந்தவர்களால் செய்ய முடியவில்லை. இதனை வைத்தே புரிந்துகொள்ளலாம் அவர் எவ்வளவு சீரியஸான காமெடியன் என்று.

அஞ்சாமை கவுண்டமணி உடைமை: திரைத்துறையில் ஒரு நிலை இருக்கிறது. அதாவது ஹீரோக்களையோ, இயக்குநர்களையோ, தயாரிப்பாளர்களையோ காக்கா பிடித்தால் தொடர்ந்து வாய்ப்பு வரும் என்பதுதான் அது. அதையெல்லாம் கொஞ்சம்கூட மதிக்காதவர் கவுண்டமணி. அவரைப் பொறுத்தவரை தனது மனதில் பட்டதை கமலாக இருந்தாலும் ரஜினியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நேரடியாக சொல்லிவிடுவார். இதன் காரணமாகத்தான் கமலுக்கும் அவருக்கும் சில காலம் ஒத்துப்போகாமல் இருந்தது என்றெல்லாம் திரைத்துறையில் இன்றுவரை பேச்சு உண்டு. ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை திறமையாளன், நேர்மையானவன் எதற்காக வளைந்துகொடுத்து போக வேண்டும் என்ற அஞ்சாமை கொள்கையை பின்பற்றியவர்.

Goundamani Birthday Today Here are Deep analysis about his Comedy

சினிமா என்பது தொழில் மட்டுமே: அதேபோல் இப்போதைக்கு அஜித்குமார் ஊடகங்கள், ரசிகர்களிடம் எப்படி நடந்துகொள்கிறாரோ அதற்கும் விதை போட்டவர் கவுண்டமணிதான். ஒருமுறை அவரிடம் ஏன் அதிகம் பேட்டிகள் கொடுப்பதில்லை என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், 'சினிமாவுல நடிக்கறேன் பிடித்தால் பார்க்கிறார்கள். சிரிக்கிறார்கள். இதற்கு மேல் என்னைய பற்றி தெரிந்துகொண்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள். அவர்களிடம் என்னை பற்றி சொல்லி நான் என்ன செய்யப்போகிறேன். அவர்கள் அவர்கள் வேலையை பார்க்கட்டும். நான் என்னுடைய வேலையை பார்க்கப்போகிறேன்' என்று ஒரே போடாக போட்டவர். அப்போது சொன்னபடியே இப்போதும் இருக்கிறார். அதுதான் அவரது தனி ஸ்பெஷல்.

காலத்துக்கும் அழிவில்லை: ஒரு நகைச்சுவை நடிகர் தனது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பார். அப்படித்தான் கவுண்டமணியும் காலம் முழுவதும் உழைத்தார். அவரது காமெடிகள் மீது ஒருதரப்பினர் விமர்சனங்கள் வைக்கலாம். யாரும் இங்கே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. உலகமே கொண்டாடும் சார்லி சாப்ளினை ஹிட்லருக்கு பிடிக்காது. அதனால் சாப்ளின் ஒன்றும் குறைந்துவிடவில்லை. அதேபோல்தான் கவுண்டமணியும். அவர் மீது உருவ கேலி, அடுத்தவரை மட்டமாக பேசுதல், செந்திலை தொடர்ந்து தாக்குவது போன்ற காட்சிகளில் நடித்தது என்ற விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் இன்னும் பல வருடங்கள் கழித்து எடுத்து பார்த்தாலும் நகைச்சுவை காட்சிகளில் பழமைகளை உடைத்து பகுத்தறிவு, உலக அறிவு, சமத்துவம் என நிறைய நிறைய நல்ல விஷயங்களை பேசிய காமெடி கலைஞர்களில் கவுண்டமணிக்கு தனியான இடம் எப்போதும் இருக்கும். லெஜெண்ட் கவுண்டமணிக்கு ஃபில்மிபீட் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X