twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவுண்டமணியிடம் உதை வாங்கியும் உதவாமல் போனது யார்க்கு?

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    பதினாறு வயதினிலே படத்தில் கவுண்டமணியைப் பார்த்த மக்கள் அவரைக் குழு நடிகரில் ஒருவராகத்தான் எண்ணியிருப்பார்கள். பரட்டைக்கு ஒத்தூதி அண்டித் திரியும் பாத்திரம். அப்படத்தில் அவர் ஒரு காட்சியைத் தூக்கிச் சாப்பிடுவதற்கு வாய்க்கவேயில்லை. ஆனாலும் அதே படத்தில் இரண்டோ மூன்றோ இடங்களில் அவருடைய பின்னாள் வளர்ச்சிக்கு அச்சாரம் தென்பட்டது. இரண்டும் நொடிக்கணக்கில் தோன்றி மறையும் சுடுவுகள்தாம். அதிலேயே கவுண்டமணி தனித்துத் தெரிந்தார்.

    'மஞ்சக் குளிச்சி அள்ளி முடிச்சி...' என்ற பாடலில் ஊர்க்குமரிகள் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவார்கள். பாடல் முடிய முடியக் காணும் ஆண்களின் மீதெல்லாம் மஞ்சள் நீரை மழையாகப் பொழிவார்கள். அந்நீராட்டில் சிக்கிக்கொள்ளும் கவுண்டமணியைப் பார்த்திருப்பீர்கள். வேட்டி அவிழ தட்டுத்தடுமாறி முன்னும் பின்னுமாய் அலைபாய்ந்து பிறகு வேட்டியைத் தேடியெடுத்து அள்ளிக்கொண்டு ஓடுவார். முதற்பாட்டுபோல் முதலாட்டம்போல் முதற்கவிதைபோல்தான் நாம் கடைசிவரை பாடவும் ஆடவும் எழுதவும் செய்கிறோம். வேட்டி அவிழத் துன்புறுதல் என்னும் அந்த நகைச்சுவை உத்தியை அவருடைய பிற்காலப் படங்கள் பலவற்றிலும் காணலாம்.

    Goundamani and Kaja Sherif

    அதே பதினாறு வயதினிலே படத்தில் கவுண்டமணியின் மீது இளக்கம் தோன்றும் ஒரு காட்சியும் இடம்பெற்றது. மயிலைப் பெண்கேட்டு வரும் கோகிலாபுரத்துக்காரரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதற்கு முயல்கின்ற பரட்டையை முடிந்தவரை அமர்த்தப் பார்ப்பார். 'பரட்ட பரட்ட' என்று இழுப்பார். கவுண்டமணியின் முயற்சிகள் பொய்த்துவிட, பரட்டை இட்டுக் கட்டிக் கூறிவிடுவார். "பத்தவெச்சிட்டியே பரட்ட..." என்று மனமிரங்கிக் கூறுமிடத்தில் கவுண்டமணி நினைவில் தங்கிவிடுகிறார்.

    படத்தில் அவர்க்கு நகைச்சுவை செய்வதற்கும் சில வாய்ப்புகள் அமைந்தன. ஊர்க்கு வந்த புதிய கால்நடை மருத்துவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாற்றும் காட்சி.

    "மை டியர் புவர் அண்ட் ப்ரெட்டி வில்லேஜ் பீப்புள்..." என்று தொடங்குவார்.

    கூத்து வாத்தியிடம் பரட்டை கேட்பார் "டாக்டர் என்ன சொல்றாரு?"

    அதற்குக் கவுண்டமணியின் பதில் "இப்பத்தான் ஊர்ல இருந்து பெட்டி படுக்கையோடு வந்திருக்கேன்னு சொல்றார்."

    Goundamani and Kaja Sherif

    முதற்படத்தில் தமக்கு அமைந்த காட்சிகளுக்குள்ளேயே தம் திறனை வளர்த்தெடுத்த கவுண்டமணி அடுத்த ஐந்தாறாண்டுகளுக்கு எல்லாவகைக் கதைகளிலும் நடித்தார். ஒரு நடிகரின் நகைச்சுவை எடுபடுவது அவ்வளவு எளிதில்லை. நகைச்சுவை எடுபட்ட பிற்பாடு அது ஓரிரு படங்களால் நிறைவுறுவதுமில்லை. தொடர்ந்து அந்நடிகரின் நகைச்சுவையால் திளைத்துத் தீர்த்தபிறகுதான் அவரை ஓய்வெடுக்க விடுவார்கள். தொடக்கக் காலத்தில் கவுண்டமணி மட்டுமே தனியாய்ச் செய்த நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக அமைந்தன. இன்றுவரை தொடர்ந்து காணத்தக்க செவ்வியல் தன்மைகளோடு அக்காட்சிகள் துலங்குகின்றன என்றால் மிகையில்லை.

    பதினாறு வயதினிலே படத்திற்குப் பிறகு கிழக்கே போகும் இரயிலில் "பாஞ்சாலி... நான் உன்னத் தூக்கி வுடுவனாம்... நீ அதை எடுத்துத் தருவியாம்..." என்று பாஞ்சாலியைப் பரண்மீதேற்றி உடல்தழுவும் கதாபாத்திரம். அந்தப் பாத்திரத்தின் வேறொரு நீட்சியாகத்தான் ஆவாரம்பூ திரைப்படத்தின் 'ஆசாரி' என்பதையும் உணரலாம். அடுத்து 'புதிய வார்ப்புகள்'வரை பாரதிராஜாவின் வாய்ப்பு. அம்மூன்று படங்கள் வழியாகவே கவுண்டமணி தம்மை மக்கள் மனத்தில் பதிய வைத்துவிட்டார்.

    Goundamani and Kaja Sherif

    தனி நகைச்சுவை நடிப்பில் கவுண்டமணி தம்மை வெளிப்படுத்திக்கொண்ட படம் 'சுவர் இல்லாத சித்திரங்கள்.' வாய்ப்பு தேடிய காலங்களில் பாக்கியராஜும் கவுண்டமணியும் அறைத் தோழர்கள். ஒருவர் நடிப்பதற்கும் மற்றவர் எழுதுவதற்கும் வாய்ப்புகள் தேடி அலைந்தவர்கள். தம் முதற்படத்தில் கவுண்டமணிக்கு வாய்ப்பு வழங்கியதன் வழியாக அவர்க்கு மிகப்பெரிய சந்தைத் திறப்பினை ஓர் இயக்குநராக பாக்கியராஜ் ஏற்படுத்தித் தந்தார் எனலாம்.

    நாயகியைக் கண்ணோக்க வரும் நாயகன். நாயகியின் வீட்டுக்கு எதிரிலேயே பெட்டிக்கடை அமைத்திருப்பவர் கவுண்டமணி. பெட்டித் தையற்கடையை முற்காலத்தில் எல்லாத் தெருக்களிலும் பார்க்கலாம். மரத்தால் பெட்டியடித்து அதில் ஒருவரோ இருவரோ மட்டுமே அமர்ந்து வேலை செய்யலாம். உள்நுழைந்து அமர ஓரிடம் இருக்கும். கடைக்கு வருபவர் பெட்டிக்கு வெளியே நின்றுதான் பேசிச்செல்ல வேண்டும். தையற்காரரிடம் காஜா எடுக்கும் பையனாக செரீப் என்ற நடிகர். கவுண்டமணியிடம் பணத்தைத் திருடி பேரீச்சம் பழம் வாங்கித் தின்பவர். கடையை விட்டுத் துரத்தியவுடன் அவர்க்கு எதிரிலேயே வந்து பீடிப்புகை ஊதுபவர். "அந்தப் பொண்ணு இருக்கே... அதுக்கு என்மேல ஒரு இது..." என்று எதிர்வீட்டு நாயகிக்குத் தம்மீது காதலென்று பொய்யாய் நம்புவார்.

    சுவர் இல்லாத சித்திரங்களில் கவுண்டமணியின் உச்சரிப்பு, நடிப்புத்தரம், உடல்மொழி ஆகியன தேர்ச்சியாக வெளிப்பட்டன. அவருடைய நடிப்பின் வழியாக ஒரு காட்சியில் எது வெளிப்பட வேண்டுமோ அது தெளிவாய் வெளிப்பட்டது. கவுண்டமணியிடம் முதன்முதலாக உதை வாங்கியவர் காஜா செரீப் என்னும் அந்தச் சிறுவன்தான். பிற்காலத்தில் வாய்ப்புகளின்றித் தேங்கிப் போன காஜா செரீப்பைக் காணும்போது மனம் வருந்திச் சொன்னாராம்: "என்கிட்ட உதை வாங்கினவன் எல்லாம் பின்னால எங்கேயோ போய்ட்டானுங்க... என்கிட்ட உதை வாங்கியும் எதுவும் ஆகமுடியாம போனவன் நீதான்..."

    அவர் சொன்னது உண்மை. கவுண்டமணியிடம் உதை வாங்கியவர்களின் திரைவாழ்க்கையில் தொடர்ந்து உயர்வு உயர்வு உயர்வுதான். செந்தில், விவேக், வடிவேலு, கோவை சரளா என எல்லாரும் அவரிடம் அடிபட்டு உதைபட்டு நடித்தவர்களே. புதிய நடிகர்கள் பலரும் "அண்ணே... எப்படியாவது என்னை உதைச்சிடுங்கண்ணே..." என்று கேட்டுக்கொண்டு நடிப்பார்களாம். அவரிடம் உதை வாங்கிய எல்லாரும் எங்கேயோ உயரப் பறக்கையில் முதற்படத்தில் உடனிருந்து நடித்தவர் வாய்ப்பில்லாதவராய் ஒதுங்கியது ஒரு நகைமுரண்தான். சித்தர்களில் சிலர்க்கு இவ்வகை அருள் உண்டு. ஒருவரைக் கெட்ட வார்த்தையில் வைதுவிட்டால் அவர்க்கு முன்னேற்றம். எடுத்தெறிந்து பேசிவிட்டால் மேம்பாடு. திரையுலகில் வாலி எழுதிய வரிகள் எம்ஜிஆருக்குத் தொடர்ந்து பலித்தன. ஆனால் அவர் எழுதிப் பலிக்காத ஒரு வரியும் உண்டு. "எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்" என்னும் வரிதான் அது. அதைப்போன்றே கவுண்டமணியிடம் உதை வாங்கியும் உதவாது போயிற்று காஜா செரீப்புக்கு.

    English summary
    Poet Magudeswaran's article on Goundamani's beginning stage movies and his performance
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X