தமிழ் சினிமா பாடல்கள் பற்றி அனுராக் காஷ்யப் வைத்த விமர்சனம்.. அதை மாற்ற கோலிவுட் இதை செய்ய வேண்டும்
சென்னை: இந்திய அளவில் பிரபலமான இயக்குநரான அனுராக் காஷ்யப் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்று ஒருங்கிணைத்திருந்த அமர்வில் பங்கேற்றார். அப்போது அவர், 'இப்போதெல்லாம் தமிழ் பாடல்களில் தமிழையே கேட்க முடிவதில்லை. முன்பெல்லாம் இளையராஜா மற்றும் பலரது பாடல்களை தமிழிலிருந்து ஹிந்திக்கு கேட்டு வாங்கும் சூழ்நிலை ஒன்று இருந்தது. ஆனால் இப்போதோ தமிழ் பாடல்கள் எனக்கு அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது' என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அவர் கூறியதுபோல்தான் தமிழ் சினிமா பாடல்களில் இப்போது அர்த்தங்கள் வற்றிப்போய் சத்தங்கள் மட்டுமே மேலோங்கி இருக்கின்றன.
தமிழ் சமூகம் பாடல்களால் நிறைந்தது. ஆதி காலத்திலிருந்து கொண்டாட்டமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த தருணத்தில் பாடல்கள் முக்கியமான பங்கு வகித்திருக்கின்றன. அதன் காரணமாகத்தான் தமிழில் எக்கச்சக்கமான இலக்கியங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி பெண்களிலும் அதிகம் கவிஞர்கள் இருப்பது சங்க காலத்திலிருந்தே தமிழில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கவிஞர்கள் எழுதிய ஒவ்வொரு இலக்கியமும், பாடலும் ஏகப்பட்ட அர்த்தங்களை இந்த தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு கொடுத்துக்கொண்டுதான் இருந்தது. சங்க கால இலக்கியங்களில் எப்படி பல பொருள்களை கவிஞர்கள் மக்களுக்கு கூறினார்களோ அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ் சினிமா பாடல்களும் இருந்தன.
எப்போதும் அழிவில்லாத கவிஞர்கள்: கோலிவுட்டை பொறுத்தவரை பாடல்கள் முக்கிய அங்கம் வகித்துவருவது. மூன்று மணி நேரத்தில் சொல்ல முடியாததை ஐந்து நிமிட பாடல்களுக்குள் சொல்லிவிடும் வித்தையை அழகாக தெரிந்து வைத்திருந்த பாடலாசிரியர்கள் ஏராளம் பேர் இங்கு இருந்தார்கள். கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி, உடுமலை நாராயண கவி என அந்தப் பட்டியல் செல்லும். மேற்கூறியவர்கள் தங்கள் பாடல்களில் அதிக அளவு தத்துவங்களை வைத்து சென்றார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் இன்றளவும் உயிரோடு இல்லையென்றாலும் தங்களது படைப்புக்களின் வழியே வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களை பார்த்தும், அவர்களது பாடல்களை கேட்டும்தான் அடுத்த தலைமுறை பாடலாசிரியர்கள் உருவானார்கள்.
வைரமுத்து, வாலி: கண்ணதாசன் காலத்திலேயே வாலி எழுத வந்துவிட்டார். அவரும் ஆரம்பத்தில் நிறைய தத்துவங்களை தனது பாடல்களில் பேசினார். அதேசமயம் இன்னொரு பக்கம் சினிமாவுக்கு தேவையான சமாசாரங்களையும் தன்னுடைய பாடல்களில் வைத்தார். அதேபோல் வைரமுத்துவும் 80களில் பாடல்கள் எழுத வந்தார். ஆனால் அவர் புது மொழியோடும், நடையோடும் வந்தார். அப்படி ஒரு வருகையை கண்டிப்பாக வாலி எதிர்பார்த்திருக்கமாட்டார்தான். இருப்பினும் தன்னை தக்க வைத்துக்கொள்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்தார். அந்த வேலைகளால் தமிழ் கெடவில்லை. பெரும்பாலும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியே வித்தியாசமாக பாடல்களை எழுதிக்கொண்டே இருந்தார். வைரமுத்துவும் தன்னுடைய எழுத்து நடையில் அறிவியல், பகுத்தறிவு என பல விஷயங்களை அடுக்கினார்.

தடம் மாறாதவர்கள்: பொதுவாக ஒரு துறையில் நிலைத்து நின்று வென்றுகொண்டே இருக்க வேண்டுமென்றால் அதில் புது புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். எதற்கும் அஞ்சாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். முக்கியமாக தான் இருக்கும் காலகட்டம் எப்படி இருக்கிறது என்பதை நுண்ணியமாக உணர்ந்து அதற்கேற்றவாறு தன்னை மெருகேற்றிக்கொள்ள வேண்டும். அதேசமயம் காலத்துக்கு ஏற்றவாறு மாறுகிறேன் என்கிற பெயரில் மொழியையும், கவிதை மரபையும் சிதைக்கக்கூடாது. அந்த விஷயத்தில் வாலி, வைரமுத்து, பழனிபாரதி, அறிவுமதி என பலர் தெளிவாகவே இருந்தார்கள். வாலி, பழனிபாரதி, வைரமுத்து போன்ற பல கவிஞர்கள் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்தான். ஆனால் அதனை மட்டுமே பாடலின் பெரும் பகுதியில் வைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
எதார்த்தங்களும், எளிமையும்: அடுத்ததாக சினிமா பாடல்கள் எழுத வந்த நா. முத்துக்குமார், பா.விஜய், சினேகன், யுகபாரதி, தாமரை, கபிலன் உள்ளிட்டோர் எல்லாம் 90கள் 2000களின் ஆரம்ப காலகட்டத்துக்கு ஏற்றவாறு எழுத ஆரம்பித்தார்கள். அவர்களும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் இருக்கும் ட்ரெண்டுக்கு தகுந்தபடிதான் பாடல்களை எழுதினார்கள். ஆனால் அதற்காக தங்களது மொழி புலமை, ஆளுமை போன்றவற்றில் எந்தவித சமரசமும் செய்துகொண்டதே இல்லை. இன்னமும் சொல்லப்போனால் மூன்றாவது தலைமுறையாக 90களில் வந்த பாடலாசிரியர்கள் தமிழ் சினிமா பாடல்களை எந்த கெடுதலும் செய்யாமல் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றார்கள். அவர்களிடம் எதார்த்தங்களும், எளிமையும் நிரம்பி கிடந்தன. அதனால் அவர்கள் எழுதிய பாடல்களில் மொழி வளமும் இருந்தது, கருத்துக்களும் இருந்தது, காலத்துக்கு ஏற்ற கச்சா பொருளும் இருந்தது.
இப்போதைய நிலைமை: ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் வரும் பாடல்களில் எல்லாம் சத்தங்கள் மட்டுமே கேட்கின்றன. தற்போதைய ட்ரெண்டிங்; அதற்கு தகுந்தவாறு பாடல்கள் வருகின்றன என்று சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில் இந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமா பாடல்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் தனி மரியாதை இருக்கிறது. அவர்கள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டும் மதிக்கப்பட்டும் இருக்கின்றனர். வைரமுத்து மொத்தம் 7 முறை தேசிய விருது வாங்கியிருக்கிறார். நா. முத்துக்குமாரோ தொடர்ச்சியாக இரண்டு முறை தேசிய விருது வாங்கியிருக்கிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்தியாவில் தமிழ் பாடல்கள் எந்த மாதிரியான இடத்தில் இருந்தது என்பதை.

தற்போதோ தமிழ் வார்த்தைகளையே பாடல்களில் கேட்க முடிவதில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அனுராக் காஷ்யப் அந்த அமர்வில் பேசியது. உண்மையை சொல்லப்போனால் அவர் கூறிய கருத்தை அவருக்கு முன்னதாகவே தமிழில் இருக்கும் இயக்குநர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ஒருவர்கூட இங்கு இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்களை பொறுத்தவரை 2கே கிட்ஸை பிடித்தால் போதும் என்ற மைண்ட் செட்டில் இருப்பதாகவே தெரிகிறது. முக்கியமாக நல்ல தமிழ் வார்த்தைகள் வரும்படி பாடல்கள் இருப்பதற்கான சூழ்நிலைகள் பெரும்பாலான இயக்குநர்கள் எழுதும் கதையிலேயே இருப்பதில்லை.
வரத்தான் செய்கின்றன; ஆனால்: அதேசமயம் 96, மெய்யழகன் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் ஒரு நாஸ்டால்ஜியா நினைப்பை கொடுத்ததுதானே. ஒரு இதமான மனநிலையை நமக்குள் உருவாக்கியதுதானே. அப்படி வருவதற்கு காரணம் அந்தப் படங்களின் இயக்குநர்கள். அதேபோல் இன்னும் சில இயக்குநர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முக்கியமாக தமிழ் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தும் தாமரை, கார்த்திக் நேத்தா, உமா தேவி போன்ற தரமான கவிஞர்களும் இதே கோலிவுட்டில் இருக்கிறார்கள். அவர்கள் எழுதும் பாடல்கள் எல்லாம் அனுராக்கின் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. ஆனால் அவர்களை இயக்குநர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை.
என்ன செய்ய வேண்டும்: பாடல் வரிகள் என்பது கருத்தை மட்டுமில்லாமல் கதைக்கு சம்பந்தம் உள்ளதைத்தான் பேச வேண்டும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் திரையரங்கம் சிதறட்டும், குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு என ஹீரோ துதி பாடும் பாடல் வரிகள் அதிகம் வர ஆரம்பித்திருப்பது கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது இல்லை. இந்த நிலைமை மாறுவதற்கு முதலில் இயக்குநர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுக்க வேண்டும். எப்போதும் துப்பாக்கி, குண்டு மழை என ஏனாதானோவென எடுத்தால் படம் மட்டுமின்றி பாடல் வரிகளும் ஒழுங்காக வராது. அதேபோல் தாமரை, கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா, உமா தேவி போன்ற மொழி புலமையும், ஆளுமையும் மிக்க பாடலாசிரியர்களை இன்னமும் அதிகம் பயன்படுத்த வேண்டும். அதை உடனடியாக கோலிவுட் செய்தால்தான் தமிழ் என்ற மொழியும், கவிஞர்கள் என்ற இனமும் கோடம்பாக்கத்தில் நீண்ட ஆயுளோடு வாழும்.


Click it and Unblock the Notifications











