தமிழ் சினிமாவின் பொக்கிஷம் சேரன்.. அவரை தயாரிப்பாளர்கள் நிராகரிப்பது நியாயமா?.. அவர் அவசியம் தேவை
சென்னை: சினிமா என்பது மனிதர்களுக்கானது. மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. அந்த மாதிரியான சினிமாவால் பக்குவப்பட்ட மனிதர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அப்பக்குவத்தை அடுத்த தலைமுறையும் பெறுவதற்கு சேரன் ஸ்டைல் ஆஃப் சினிமாக்கள் வேண்டும்.
கோலிவுட் எத்தனையோ இயக்குநர்களை பார்த்திருக்கிறது, பார்த்துக்கொண்டிருக்கிறது. அப்படி பார்த்த முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். கே.எஸ்.ரவிக்குமார் என்ற கமர்ஷியல் இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தாலும் சேரனுக்குள் இருந்தது மனிதர்களின் எதார்த்த வாழ்வியலை படமாக்க வேண்டும் என்ற எண்ண ஊற்று. அதனால்தான் அவரால் காலங்கடந்து பேசப்படும் படைப்புக்களை வரிசையாக கொடுக்க முடிந்தது.
சேரனின் பொற்காலம்: அவர் முதன்முதலில் பாரதி கண்ணம்மா திரைப்படத்தை இயக்கி அந்தப் படத்திலேயே தனக்கென தனி பெயரை பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய பொற்காலம் திரைப்படம் அவருக்கான முத்திரையை பெற்றுக்கொடுத்தது. அதன் கதை, மேக்கிங், வசனங்கள் என அத்தனையும் வேறு தளத்தில் இருந்தன. உதாரணமாக, முரளியிடம் சென்று வடிவேலு தங்கைக்கு ஊரெல்லாம் மாப்பிள்ளை தேடுறியே என்னை ஒருவார்த்தை கேட்கவில்லையே என பேசும் வசனமெல்லாம் கலங்கடித்துவிடும். முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸில் காதலி மீனாவே முரளிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்துக்கு தாலி எடுத்துக்கொடுப்பதை பார்த்த பலரும் ஆடித்தான் போனார்கள்.
அது ஒரு அழகிய அழகிய நிலா காலம்: சேரன் இயக்கிய படங்கள் அத்தனையுமே முக்கியத்துவம் வாய்ந்தைவதான். அதிலும் வெற்றிக்கொடிக்கட்டு, பாண்டவர் பூமி போன்ற படங்கள் எல்லாம் கோலிவுட்டின் சொத்துக்கள். 90களில் வெளிநாடு செல்லும் மோகம் கிராமப்புறங்களில் மோலோங்கி இருந்தது. அந்த மோகத்தால் வாழ்ந்தவர்களும் உண்டு வீழ்ந்தவர்களும் உண்டு. சேரன் வீழ்ந்தவர்களின் கதையை படமாக்கினார். பலரும் திரைத்துறையில் காண்பிக்க மறந்த அந்த வலியை எந்த சமரசமுமின்றி திரையில் காண்பித்தார். அதேபோல் மனித சமூகம் உறவுகளாலும், உணர்வுகளாலும் சூழப்பட்டது. அதை கையில் எடுத்து பாண்டவ பூமியை கொடுத்தார். அந்தப் படத்தின் ஒவ்வொரு சீனை பார்க்கும்போதும் தங்களது தொலைந்துபோன உறவுகளை தேட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். நிச்சயம் அது ஒரு அழகிய நிலா காலம்தான்.

மறக்க முடியுமா ஆட்டோகிராஃப் படத்தை: எல்லோரும் ஒரு காதலையோ அல்லது சில காதல்களையோ கடந்துதான் வந்திருப்போம். காதல் என்றால் ஒருமுறைதான் வர வேண்டும் என்ற பழைய ஸ்டீரியோ டைப் விஷயங்களை ஆட்டோகிராஃப் போட்டு உடைத்து கொடுத்தார் சேரன். முக்கியமாக அந்தப் படத்தை பத்திரிகை வைக்க செல்வதில் தொடக்கி; திருமணத்துக்கு வந்ததற்கு நன்றி என்று கூறி முடித்திருப்பார் சேரன். அப்படி ஒரு விஷயத்தை செய்து அந்தப் படத்தில் உலாவும் மனிதர்களோடு நம்மையும் சேர்த்து அழைத்து சென்றிருப்பார். கண்டிப்பாக அந்தப் படம் ஒரு மாஸ்டர் பீஸ்தான். இப்போது அந்தப் படத்தை பார்த்தாலும் பார்ப்பவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளையோ, காதலையோ அசைபோடுவார்கள். அதுதான் அப்படத்தின் மாபெரும் வெற்றி.
சினிமா தவமாய் தவமிருந்து பெற்ற சேரன்: அவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் உயர்ந்துகொண்டேதான் சென்றார். தாய் பாசத்தை ப்ற்றி தமிழில் ஏராளமான படங்கள், பாடல்கள் வந்துவிட்டன. ஆனால் தந்தைக்குள் இருக்கும் பாசத்தையும், அவருக்குள் இருக்கும் வலியையும் பொட்டில் அடித்து அழ வைத்து சொன்ன படம் தவமாய் தவமிருந்து. மூத்த மகன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து செல்ல; அடுத்ததாக இளைய மகன் தனக்கு நேர்காணல் இருப்பதாக பொய் சொல்லி வீட்டிலிருந்து வெளியேற; அது தெரியாத ராஜ்கிரண் பணம் கொடுக்கும் சீன் எல்லாம் யாராலும் எடுக்க முடியாதது. அதேபோல் பல சீன்களை அந்தப் படத்தில் சொல்லிக்கொண்டே போகலாம். கண்டிப்பாக அப்படி ஒரு படத்தை தமிழ் சினிமா பெற தவமாய் தவமிருந்திருக்க வேண்டும்.
சேரன் ஏன் அவசியம்?: சேரனின் படங்கள் எப்போதுமே மனித மனங்கள், உறவுகள், உணர்வுகள், வலிகளை பேசியவை. இப்போதைய இயக்குநர்கள் வேறு ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். காலத்துக்கேற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற வாதமெல்லாம் சரிதான். ஆனால் காலத்துக்கும் மாறாதது என்றால் அது மனிதர்களிடையே இருக்கும் உறவுகள், உணர்வுகள். அவைகளை இப்போது படமாக்கும் இயக்குநர்கள் எல்லாம் ரொம்பவே அரிதாகிவிட்டார்கள். அவர்களுக்கெல்லாம் இருந்த முன்னோடிகளில் சேரனும் ஒருவர்.
நான் படம் இயக்க வேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டாலும் தயாரிப்பாளர்கள் என்னை நிராகரிக்கிறார்கள் என சேரன் சொன்ன வார்த்தைகளை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது. மனிதர்களை பற்றி படம் எடுத்தே தொடர்ந்து தனது திரை வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்ட சேரனை தயாரிப்பாளர்கள் நிராகரிப்பது நியாயம் இல்லை. கமர்ஷியல் படமும் வர வேண்டும் ஆர்ட் ஃபிலிமும் வர வேண்டும். இப்போதைய நிலைமையை பார்த்தால் பின்னி மில்லுக்குள்ளும், துப்பாக்கி தோட்டாக்களுக்குள்ளுமே தமிழ் சினிமாவின் எதிர்காலம் முடிந்துவிடும்போல.
சினிமா என்பது மனிதர்களுக்கானது. மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. அந்த மாதிரியான சினிமாவால் பக்குவப்பட்ட மனிதர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அப்பக்குவத்தை அடுத்த தலைமுறையும் பெறுவதற்கு சேரன் ஸ்டைல் ஆஃப் சினிமாக்கள் வேண்டும். அதற்கு சேரன் அவசியம் மீண்டும் படம் இயக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சேரன் போன்ற் பொக்கிஷமான இயக்குநர்களை பாதுகாக்க வேண்டும். ஒரு கலைஞனின் கலை ஊற்று வற்றிப்போகும்போது அவர் நிராகரிக்கப்படலாம். அந்த ஊற்றை இன்னமும் தனக்குள் வைத்துக்கொண்டு இருக்கும் கலைஞனை நிராகரிப்பது ஒட்டுமொத்த கலையையும் நிராகரிப்பது போன்றது. உணர்ந்துகொள்வார்களா தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











