twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திப் பேரலையை எதிர்த்தடித்தவர்கள்

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    முரட்டுக்காளை என்னும் ஏவிஎம்மின் படம்தான் எண்பதுகளின் வணிகப் போக்கைத் தொடங்கி வைத்த பெரிய படம். எழுபதுகள் முழுக்க இந்தித் திரைப்படங்கள் தமிழ்த் திரைப்படச் சந்தையை விழுங்கிக்கொண்டிருந்தபோது பெரிய தமிழ்த் திரைப்பட நிறுவனங்கள் பலவும் தொழிலைக் கைவிட்டன. படங்களில் நடிப்பதை எம்ஜிஆர் நிறுத்தியிருந்தமையால் 'தேவர் பிலிம்சு' நிறுவனத்தினர் படத்தயாரிப்பிலிருந்து விலகியிருந்தனர். அதுவரை வெளியார் படங்களுக்காகத் தம் படப்பிடிப்புக் கூடங்களை விட்டுத் தராத ஏவிஎம் நிறுவனத்தினர் சந்தைப்போக்கின் நிலையாமை கருதி படத்தயாரிப்பை நிறுத்திக்கொண்டனர். படப்பிடிப்புக் கூடங்களை வாடகைக்கு விட்டனர். ஒரு படநிறுவனம் தன் தயாரிப்புப் படங்களின் படப்பிடிப்புக்காகக் கட்டிய கூடங்களை வெளியார்க்கு வாடகை விடுவதை வீழ்ச்சியான போக்காகப் பார்ப்பார்கள். ஆனால், அந்தத் துணிச்சலான முடிவை ஏவிஎம்மின் பெரியவர் எடுத்திருந்தார்.

    How Hindi domination stopped in Tamil Cinema?

    எழுபதுகளில் அலையலையாய் வந்திறங்கிய இந்தித் திரைப்படங்கள் தமிழ்ப் படங்களுக்குப் பெரிய போட்டியாக மாறின. அகவையில் மூத்தோரைக் கேட்டுப் பாருங்கள், தமிழ்த் திரைப்படங்களுக்கு நிகரான நினைவுகளை 'பாபி' திரைப்படத்திற்கும் கூறுவார்கள். 'ஷோலே' என்ற இந்தித் திரைப்படம் திரையிடப்படாத சிறு நகரங்களே இல்லை என்னும் நிலை. இந்திப் படங்களைத் திரையிட்ட திரையரங்குகள் பணத்தை அள்ளிக்கட்டின. தமிழ்த் திரைப்படமொன்று பெருவெற்றி பெற்றாலே அது திரையிடப்பட்ட திரையரங்கின் ஈட்டுத்தொகை முக்கி முனகித்தான் ஒரு இலட்சத்தைத் தொடுமாம். ஆனால், இந்தித் திரைப்படத்தைத் திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் "இந்தப் படத்தில குறைச்சல்தான்... இதுவரைக்கும் நாலு இலட்சம்தான் ஆகியிருக்கு. வழக்கமா இந்நேரம் ஆறு இலட்சம் தாண்டியிருக்கணும்...," என்பார்களாம். அறுபதுகளில் இந்திக்கு எதிராக மொழிப்போராட்டம் நடத்தி ஓய்ந்திருக்கையில் எழுபதுகளில் அம்மொழியானது திரைப்படங்கள், திரைப்பாடல்கள் என்னும் வடிவத்தில் எளிதாக நுழையப் பார்த்தது.

    எங்குத் திரும்பினாலும் இந்திப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கினவாம். அந்தப் போக்கு அப்படியே பத்தாண்டுகள் தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? தமிழ்நாட்டின் பெரும்பகுதி இந்திக்குப் பழகியிருக்கும். மொழியைக் காக்கப் பட்ட பாடுகள் அனைத்தும் வீணாகியிருக்கும். இந்தப் போக்கின்மீது தம் முழுத்திறனையும் பயன்படுத்தி எதிர்த்தடித்தவர்களில் முதன்மையானவர் இளையராஜா. எங்கெங்கு பார்த்தாலும் இந்திப் பாடல்களா, அதை முழுமையாக இல்லாமல் ஆக்கியவை இளையராஜாவின் பாடல்கள். ஒரு படப்பாடல்கள் நன்றாக இருக்கலாம், இரண்டு மூன்று படப்பாடல்கள் நன்றாக இருக்கலாம், வெளியாகின்ற எல்லாப் பாடல்களும் அருமையாக இருந்தால் என்னதான் செய்ய முடியும் ? பிறவற்றை மறந்து அந்தப் பாடல்களையே கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். இளையராஜா அதைத்தான் செய்தார். அன்னக்கிளி திரைப்படத்தின் மதுரை மண்டல விநியோகத்தைப் பெற்றவர் மட்டுமே பதினைந்து இலட்சங்கள் ஈட்டினாராம்.

    "இந்திப் பாடல்களை மறக்கடிக்கச் செய்யும் ஓர் இசையமைப்பாளரை நீண்ட நெடுநாள்களாகத் தேடிக்கொண்டிருந்தபோது தம்மைச் சந்திக்க வந்தவர்தான் இளையராஜா," என்று அந்நினைவுகளை அசைபோடுகிறார் பஞ்சு அருணாசலம். எழுபதுகளின் பிற்பகுதியில் புகழ்பெறத் தொடங்கிய கமல்ஹாசன், இரஜினிகாந்த், ஸ்ரீதேவி, பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாக்கியராஜ், எஸ்பி முத்துராமன், பஞ்சு அருணாசலம் போன்றவர்கள் தமிழ்நாட்டில் நிலைகொள்ளப் பார்த்த இந்தித் திரைப்பட அலைக்கு எதிராகச் செயல்பட்டு முறியடித்தவர்கள். தமிழ் மக்களின் உறவுகள், பண்பாடுகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தித் தங்கள் கதைகளை ஆக்கினார்கள். நமக்குத் தொடர்பேயில்லாத பிற மண்ணின் பண்பாடு இங்கே காட்டப்பட்டபோது நம் மண்ணின் கதையை எடுக்க வந்த பாரதிராஜாவின் முயற்சியை எப்படிப் பாராட்டினாலும் தகும்தானே ? பிற்பாடு அவர்கள் யாவரும் மேன்மேலும் வளர்ந்து இந்தித் திரைப்பட உலகிலும் வெற்றிகரமாக வலம் வந்தார்கள். ஏக்துஜே கேலியே, ரெட்ரோஸ், கங்குவா, சத்மா, ஆக்ரி ரஸ்தா, ஸ்ரீதேவியின் இந்திப்புகழ் ஆகியவற்றை நாம் அவரவர்களுடைய தனிப்பட்ட முன்னேற்றமாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவற்றை அவ்வளவு எளிமையாய்ச் சுருக்கிவிட முடியுமா ? நம்மையறியாமல் இந்திக்கு மயங்கிச் சரியவிருந்த வேளையில் வெற்றிகரமாக எதிர்வினையாற்றியவர்கள். எதிர்த்து அடித்தவர்கள். அதற்கான பலனை மும்பை வரைக்கும் சென்று கண்டார்கள்.

    அளவற்ற பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்திப் படங்களை விடுத்து சிறுபொருட்செலவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை மக்கள் விரும்பிப் பார்க்கக் காரணம் அதில் பங்கேற்றிருந்த கலைஞர்களின் பெருந்திறமை. எழுபதுகளின் இறுதிக்குள்ளாக தடுத்து நிறுத்தப்பட்ட அந்தப் போக்கு பிற்பாடு எப்போதும் தமிழ்ச் சந்தையில் தலையெடுக்கவேயில்லை. தமிழ் மக்கள் தமிழ்த்திரைப்படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பார்கள் என்று உலகறிய நிறுவப்பட்டது. இன்றைக்கும் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் முதல் தேர்வு அவர்கள் வாழும் நிலத்தின் மொழிப்படங்களல்ல. எவ்விலை கொடுத்தேனும் தமிழ்ப் படங்களையே விரும்பிப் பார்க்கின்றார்கள். கண்ணைக் கவரும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி வாய்க்கால்கள் இருந்தும் அமெரிக்க ஐரோப்பிய ஆஸ்திரேலிய அரேபிய நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்தாம் விரும்பிப் பார்க்கின்றார்கள்.

    எண்பதுகளில் வெளியான இந்தித் திரைப்படங்களைத் தமிழகத்திலும் திரையிடும் வாய்ப்பு மீண்டும் தோன்றியது. ஆனால், அந்தப் படங்களை இந்தியிலேயே வெளியிடாமல் தமிழில் எடுத்து வெளியிட்டால் பணத்தை அள்ளலாம் என்று கணக்கிட்டனர். அதனால் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்க உரிமையைப் பெற்று தமிழிலேயே அவற்றை எடுத்தார்கள். எந்தப் படத்தையும் தமிழ் மொழியிலாக்கலாம் என்னுமளவுக்கு இங்கே தொழில் மேம்பட்டிருந்தது. பாலாஜி தயாரித்த பல படங்கள் அத்தகைய படங்களே. அப்படங்களும் வெற்றி பெற்றன. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு பில்லா.

    எழுபதுகளின் இறுதியில் இளையராஜாவை முதலாக நிறுத்தித் தடுத்து நிறுத்தப்பட்ட இந்திப் பேரலை அதன் பிறகு எப்போதும் சிற்றலையாகக்கூட அடிக்கவில்லை. சென்னை போன்ற ஓரிரு நகரங்களைத் தவிர்த்து தமிழகத்தில் வேறெந்த நகரங்களிலும் இந்திப் படங்கள் தொடர்ந்து வெளியாகவில்லை. இடையிடையே சில படங்கள் வெளியானாலும் அவை இந்தியில் பெற்ற வெற்றியைத் தமிழகத்தில் பெறவில்லை. தேசாப் என்ற படம் "ஏக் தோ தீன்" என்னும் ஒரு பாட்டுக்குக் கிடைத்த வரவேற்பைக் காண்பித்து இங்கேயும் வெளியிடப்பட்டது. அந்தப் படம் நம் மக்களைக் கவரவேயில்லை. தமிழ் மக்கள் தெளிவாகிவிட்டார்கள். இந்திப் படங்களில் அப்படியொன்றும் சிறப்பாக இருக்கவில்லை என்று விளங்கிக்கொண்டார்கள். தேசாப் படத்தில் பாடல்களைத் தவிர பெரிதாக ஒன்றும் இல்லை. முதற்சில நாள்களில் அலையடித்த கூட்டம் அப்படியே காணாமல் போனது. ஆபாவாணனைப் பின்பற்றிய தமிழ்த் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இங்கே 'அகல்திரைப் படங்களை' எடுக்கத் தொடங்கியிருந்தனர். அதனால் இந்திப் படங்களின் பெருங்காட்சிச் சட்டகம் நமக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பிறகு நம்மவர்களின் நாட்டம் ஜாக்கிசான் படங்களை நோக்கித் திரும்பிவிட்டது. இந்திப் படங்களுக்கு வேலை செய்ய தென்னிந்தியக் கலைஞர்கள்தாம் தேவைப்பட்டார்கள். நமக்கு இந்திப் படங்கள் தேவைப்படவில்லை.

    English summary
    In sixties, Hindi movies were dominsted in Tamil Cinema, but the emergence of Ilaiyaraja and other creators stopped the bollywood wave tottally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X