ஆடுகளம், என்னை அறிந்தால் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டியது இந்த நடிகர்தானாம்
சென்னை: வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் டானியல் பாலாஜி.
வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் பாலாஜி கடைசியாக நடித்த திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு.
இந்நிலையில் சமீபத்தில் பாலாஜி கொடுத்துள்ள பேட்டியில் ஆடுகளம், என்னை அறிந்தால் படங்களில் முதலில் வில்லனாக நடிக்க வேண்டியதாக இருந்தது பற்றி பேசியிருக்கிறார்.

டேனியல்
தொலைக்காட்சி தொடர்களிலேயே சூப்பர் ஹிட் தொடராக இன்று வரை கருதப்படும் சித்தி சீரியலில் டானியல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அப்போதே பிரபலமானவர் பாலாஜி. அதன் பின்னர் அலைகள் என்கிற தொடரில் நடிக்கும் பொழுது அவருக்கு டேனியல் பாலாஜி என்கிற பெயரை அதன் இயக்குநர் கொடுத்திருந்தார். பின்னர் ஏப்ரல் மாதத்தில் திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி அதன் பிறகு காதல் கொண்டேன், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மருதநாயகம்
நடிக்க வருவதற்கு முன்பே தொழில்நுட்ப கலைஞராக பாலாஜி பணிபுரிந்துள்ளார். குறிப்பாக நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தில் யூனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். கமல் சார் எப்போது மருதநாயகம் படத்தை தொடங்கினாலும், முன்பு கொடுத்த அதே பணியை இப்போது கொடுங்கள் என்று அவரிடம் வேலை கேட்பேன் என்று கூறியிருக்கிறார். பிற்காலத்தில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் அவருக்கே வில்லனாக நடித்த பொழுது அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த பிணங்களின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்புகளை பாலாஜிதான் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் வெற்றி
டேனியல் பாலாஜியை தொடர்ச்சியாக இயக்குநர்கள் கௌதம் மற்றும் வெற்றிமாறன் படங்களில் காணலாம். கௌதம் உடனான பாலாஜியின் நட்பு மின்னலே திரைப்படத்திற்கும் முந்தையது. பின் அவருடைய காக்க காக்க படத்தில் தொடங்கி அதனுடைய தெலுங்கு பதிப்பு பின்னர் வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய வில்லன், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா என்று தொடர்ச்சியாக அவருடைய படங்களில் நடித்திருப்பார். அதேபோல இயக்குநர் வெற்றிமாறனின் பொல்லாதவன், வடசென்னை போன்ற படங்களிலும் நடித்திருப்பார்.

என்னை அறிந்தால் ஆடுகளம்
பொல்லாதவன் படத்தை தொடர்ந்து ஆடுகளம் படத்திலும் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை இருந்ததாம். ஆனால் வயதான கதாபாத்திரம், முகத்தில் சுருக்கம் வேண்டும் போன்ற சில காரணங்களால் அதில் நடிக்கவில்லையாம். இருப்பினும் கிளைமாக்ஸில் பேட்டைக்காரன் கழுத்தை அறுத்துக் கொண்டு சாகும் பொழுது கழுத்திலிருந்து இரத்தம் பீச்சி அடிக்க வேண்டிய ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்பை பாலாஜிதான் செய்து கொடுத்தாராம். என்னை அறிந்தால் படத்திலும் அருண் விஜய் நடித்த விக்டர் கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது பாலாஜிதானாம். இருப்பினும் அதில் ஒரு சிறிய வேடத்தில் பின் நடித்திருப்பார்.


Click it and Unblock the Notifications











