SPB வேண்டாமென்றால் இசையமைப்பாளரை மாற்றுங்கள் இல்லை என்னையே மாற்றுங்கள்...
சென்னை: தமிழ் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத இடத்திலுள்ள இயக்குநர் சிகரம் K பாலச்சந்தர் அவர்களின் 92-வது பிறந்தநாள் இன்று. அதை முன்னிட்டு நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த், இயக்குநர்கள் வசந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் அவரைப் பற்றி கூறி தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
புரட்சிகரமான, சர்ச்சைக்குரிய பல படங்களை இயக்கி வெற்றியும் கண்டவர். நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை உருவாக்கி, பல இயக்குநர்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.
அவருக்கும் SPB அவர்களுக்குமிடையே இருந்த நட்பு குறித்து SPB முன்னதாக கூறியிருந்த சில தகவல்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையின் மூலம் எங்களது மரியாதையை அவருக்கு செலுத்துகிறோம்.

வித்தியாசமான பாடல்கள்
SP பாலசுப்பிரமணியம் வளர்ந்து வந்த காலத்தில், காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் இடம் பெற்றிருந்தது பாலச்சந்தர் அவர்களின் படங்களில்தான். இசையமைப்பாளர்களுக்கு கடும் சவாலான சூழ்நிலைகளைச் சொல்லி பாடல்களை வாங்குவாராம். குறிப்பாக "இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்" மற்றும் "கடவுள் அமைத்து வைத்த மேடை" போன்ற பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.

நடிகர் SPB
ஒரு முறை SPB அவர்கள் ஒரு ஸ்கிட்டில் நடித்துள்ளார். அதைப் பார்த்த பாலச்சந்தர் உடனே அவரை மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடிக்க வைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில்தான் இயக்குநர் வசந்த், தான் முதன் முதலில் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் SPB அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்திருப்பார். எனவே, SPB-ஐ நடிகனாக்கிய பெருமை இயக்குநர் பாலச்சந்தர் அவர்களையே சேரும்.

ஏக் துஜே கே லியே
நடிகர் கமல் ஹாசனை வைத்து தெலுங்கில் இயக்குநர் பாலச்சந்தர் கொடுத்த மிகப் பெரிய ஹிட் படம்தான் மரோ சரித்ரா. இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த போது, அதில் 'தேரே மேரே பீச் மே' பாடலை SPB பாட வேண்டும் என்று பாலச்சந்தர் விரும்பியுள்ளார். அதற்கு இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த் மற்றும் பியாரிலால் ஒத்துக் கொள்ளாததால், தயாரிப்பாளரிடம் சென்று இந்தப் படத்தில் SPB பாடவில்லை என்றால் ஒன்று இசையமைப்பாளர்களை மாற்றுங்கள். இல்லை என்னை மாற்றிவிடுங்கள் என்று அடம்பிடித்து பாட வைத்துள்ளார். SPB பாடிய முதல் ஹிந்தி பாடல் என்று மட்டுமில்லாமல் ஹிந்தியில் முதல் தேசிய விருதையும் அவருக்கு பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் SPB
அது மட்டுமில்லாமல் SPB அவர்களை தமிழில் இசையமைப்பாளர் ஆக்கிய பெருமையும் பாலச்சந்தரையே சேரும். தான் தயாரித்த சிகரம் திரைப்படத்தில் SPB-யை இசையமைக்க வைத்தார். அது மட்டுமின்றி இளையராஜா அவர்களுடன் பிரச்சனை எழுந்ததால், முதலில் SPB-ஐதான் அழகன் படத்திற்கு இசையமைக்கச் சொன்னாராம். ஆனால் பிசியாக இருந்த காரணத்தினால் மரகதமணியை பாலச்சந்தருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் SPB. மரகதமணி தான் பாகுபலிக்கு இசையமைத்த கீரவாணி என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











