ஜெய் பீம்.. ஒரே படத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இயக்குநர்.. ஞானவேலுவுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: ஜெய் பீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான த.செ.ஞானவேல் அந்தப் படத்திலேயே தனக்கான சிறந்த பெயரை பெற்றுக்கொண்டார். அடுத்ததாக அவர் தனது இரண்டாவது படத்தில் ரஜினிகாந்த்தை வைத்து இயக்குகிறார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சூழலில் படம் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பத்திரிகையாளர்கள் சினிமா எடுக்க வந்தால் எந்த மாதிரியான அதிர்வுகள் திரையுலகில் ஏற்படும் என்பதற்கு சென்சேஷனல் உதாரணம்தான் த.செ.ஞானவேல். பிரபல வார இதழில் தனது பத்திரிகை வாழ்க்கையை தொடங்கிய ஞானவேல் மனிதர்கள் படும் வலியையும், வேதனையையும் தனது பார்வையிலிருந்து தப்ப விடாதவர். அப்படி அவர் எழுதியதாலேயே பத்திரிகையுலகில் தனித்து தெரிந்தார். சூழல் இப்படி இருக்க அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தது காலம்.

ஜெய் பீம்: பத்திரிகை துறையில் இருந்தபோதே சூர்யாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் மேலும் வலுவடைந்தது. அகரத்தின் முக்கியமானவர்களில் ஞானவேலுவும் ஒருவர். அதனை சூர்யாவும் சில மேடைகளில் சொல்லியிருக்கிறார். காலம் ஞானவேலுவை சினிமாவுக்கு அழைத்து வந்ததும் அவர் இயக்கிய முதல் படம் கூட்டத்தில் ஒருவன். அதற்கு முன்னதாக அவர் ரத்த சரித்திரம், பயணம் ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.
சூழல் இப்படி இருக்க பெரிய ஹீரோவை வைத்து அவர் தொட்ட முதல் கதைக்களமே எளிய மக்களின் வலியையும் அவர்களது வாழ்க்கையையும்தான். ஆம் ஞானவேல் வரும்வரை இருளர் இன மக்களின் வலி இந்தச் சமூகத்துக்கு முழுதாக தெரியவில்லை. ஜெய் பீம் படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல காலத்துக்கு அழியாது என்றுதான் சொல்ல வேண்டும். சிறையிலிருந்து வெளியே வரும் இருளர் இன மக்களை மீண்டும் சிறைக்கே அனுப்பும் காட்சியாகட்டும், செங்கேணி ஊர் பெரியவரின் காரை தள்ளிவிடும்போது பேசும் வசனமாகட்டும், செங்கேணியின் மனைவி சுய மரியாதையோடும், திமிரோடும் காவல் துறை வாகனத்தில் ஏறாமல் நடந்து வருவதாகட்டும் இப்படி ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக செதுக்கியிருந்தார் ஞானவேல்.
சந்துரு: அதேபோல் ஒரு உண்மை கதையை இவ்வளவு நெருக்கமாக, எமோஷனலாக ஒருவரால சொல்ல முடியுமா என்பதற்கு முடியும் என்று காண்பித்தவரும் ஞானவேல்தான். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கையாண்ட வழக்கை எடுத்துக்கொண்டு அதகளம் செய்திருந்தார் ஞானவேல். முக்கியமாக ஒருவர் பெரிய ஹீரோவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அதில் கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் சேர்க்க வேண்டும் என்றுதான் யோசிப்பார்கள். ஞானவேலுவோ எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் ஜெய் பீமை கொடுத்தார். அதற்கு துணை நின்ற சூர்யாவையும் நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
வேட்டையன்: இப்படி முதல் படத்திலேயே ஏகப்பட்ட சிறப்புகளை செய்து தனி கவனம் ஈர்த்த அவர் இரண்டாவது படத்தை ரஜினியை வைத்து இயக்குகிறார். ரஜினி - ஞானவேல் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானதும் ரஜினிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஏனெனில் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் இருக்கும் ஹீரோ சமூக அக்கறையுள்ள இயக்குநருடன் சேர்ந்தால் அதன் வீரியம் என்னவாக இருக்கும் என்பதற்கு வேட்டையன் உதாரணமாகத்தான் இருக்கப்போகிறது. படத்தின் டைட்டில் டீசர் பார்க்கையில் கமர்ஷியல் இருக்கும் என்று தோன்றினாலும் கண்டிப்பாக இந்தப் படத்திலும் சமூகத்துக்கு தேவையான விஷயத்தை ரஜினி என்னும் சாட்டையை கொண்டு அடித்து சொல்வார் ஞானவேல் என்று நம்பலாம்.
இன்று பிறந்தநாள்: இந்நிலையில் த.செ.ஞானவேல் இன்று பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இதுவரை ஒரு படம் மட்டுமே இயக்கியிருக்கும் ஞானவேல் இரண்டாவது படத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறார். அவருக்கு பில்மிபீட் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











