Jr NTR Salary: வார் 2 படத்துக்கு ஜூனியர் என்டிஆர் வாங்கிய சம்பளம் என்ன?.. சொத்து மதிப்பு எவ்வளவு?
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக குடும்பத்தினருடன் கொண்டாடினார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடியை வாங்கியது. ராஜமெளலி இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் கொமரம் பீமாக நடித்த ஜூனியர் என்டிஆருக்கு அது லைஃப் டைம் ரோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் கேஜிஎஃப், சலார் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆர் இன்னொரு பக்கம் பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன் படத்தின் மூலம் இந்த ஆண்டு அறிமுகமாகிறார். ஜூனியர் என்டிஆரின் 42வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வார் 2 படத்தின் டீசர் வெளியானது.

தேவரா படத்தின் மூலம் பாலிவுட் நடிகையான ஜான்வி கபூரை டோலிவுட்டுக்கு கொண்டு வந்த ஜூனியர் என்டிஆர், தற்போது வார் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் வில்லனாக மாறியுள்ளார். இந்த படத்துக்காக அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்கிற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன.
வாழ்த்து மழையில் ஜூனியர் என்டிஆர்: என்.டி. ராமாராவின் பேரனும் நந்தமுரி ஹரி கிருஷ்ணாவின் மகனுமான ஜூனியர் என்டிஆர் 1983ம் ஆண்டு மே 20ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். கடந்த 2011ம் ஆண்டு லக்ஷ்மி பிரணதி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தனது 42வது பிறந்தநாளை ஜூனியர் என்டிஆர் நேற்று கொண்டாடிய நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என வார் 2 படக்குழுவினரும் சோஷியல் மீடியா மூலமாக ஜூனியர் என்டிஆரை வாழ்த்தினர்.
வார் 2 சம்பளம்: தெலுங்கில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஜூனியர் என்டிஆர் அதிகபட்சமாக 60 முதல் 80 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், கியாரா அத்வானி நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் வார் 2 படத்தில் 2வது ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்க நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்து மதிப்பு: ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தான் பல பிரபலங்கள் பங்களா வீடுகளை வாங்கி வசித்து வருகின்றனர். சென்னையில் எப்படி போயஸ் கார்டன், தி நகர் பகுதியோ அதே போலத்தான் அங்கேயும் ஏகப்பட்ட பிரபலங்கள் ஒரே இடத்தில் அருகருகே குடியிருந்து வருகின்றனர். அது போக பெங்களூர் மற்றும் மும்பையிலும் தனியாக ஜூனியர் என்டிஆருக்கு பங்களா வீடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஜூனியர் என்டிஆர் சொத்து மதிப்பு மட்டும் 500 கோடி ரூபாய் இருக்கும் என டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வார் 2 திரைப்படம் ரஜினிகாந்தின் கூலி படத்துக்குப் போட்டியாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று வெளியான இந்தி டீசர் மட்டும் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அந்த படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











