twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதிராஜாவின் கடைசிக் காதல் படம் - கடலோரக் கவிதைகள்

    By Magudeswaran G
    |

    அண்மையில் தொலைக்காட்சியில் கடலோரக் கவிதைகள் திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. வேலையாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்த நான் தற்செயலாக அதனைப் பார்த்தேன். ஒரு காட்சியைக் கண்டு செல்லலாம் என்று அமர்ந்தவன் முழுப்படத்தையும் பார்த்த பிறகே நினைவு மீண்டேன். பாரதிராஜா தம் படைப்பூக்கக் காலத்தின் கொடுமுடியில் இருந்தபோது எடுத்த படங்களாக முதல் மரியாதையையும் கடலோரக் கவிதைகளையும் கூற வேண்டும்.

    கடலோரத்தின் அழகிய ஊர் என்றாலே பாரதிராஜா காட்டிய முட்டம் என்ற ஊரே நம் எண்ணத்தில் பதிந்திருக்கிறது. பாரதிராஜா தம் படங்களில் காட்டிக்கொடுத்த பற்பல ஊர்கள் அதற்குப் பிறகு வந்த இயக்குநர்களின் விருப்பமான படப்பிடிப்புத் தளங்களாக மாறியிருக்கின்றன. மைசூரு சுற்றுப் பகுதிகளை அவரளவிற்குச் சுற்றிச் சுழன்று காட்டியவர்கள் யாருமில்லை எனலாம்.

    kadalora kavithaigal the last movie with love emotions

    பாரதிராஜாவின் படக்களங்கள் நான்கே நான்கு நிலக்காட்சிகளுக்குள் அடங்குகின்றன. பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் இரயில், மண்வாசனை, பசும்பொன் போன்ற படங்களில் இடம்பெற்ற நதிகள், வயல்கள், பூக்காடுகள், புன்செய்கள் சூழ்ந்த சிற்றூர். நிறம்மாறாத பூக்கள், கேப்டன் மகள் போன்ற படங்களில் இடம்பெற்ற மலைப்புறத்துப் பச்சையூர். அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள் போன்ற படங்களில் இடம்பெற்ற கடற்கரையூர். காதல் ஓவியம், வேதம்புதிது, போன்ற படங்களில் இடம்பெற்ற வரலாற்றுக் களிம்பேறிய கோவிலூர். புதிய வார்ப்புகள், கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் புன்செய்க் காடுகள் நன்கு காட்டப்பட்டன.

    ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் பெயர்சொல்லுமாறு படமொன்றைத் தந்திருக்கிறார் அவர். அவற்றில் நெய்தல் நிலத்தூர்க்கான படமாகவே கடலோரக் கவிதைகள் தோற்றமளித்தாலும் நெய்தல் நிலத்தின் வாழ்க்கைக் கூறுகள் எப்படிக் காட்டப்பட்டன என்பதையும் பார்க்க வேண்டும். கடல், கடலோரத்தில் பாடம் படித்தல், நீரில் மூழ்கி வலம்புரிச் சங்கு எடுத்து வருதல், கிறித்தவ மதச் செல்வாக்கு, மீனவர்கள் வலைகளைச் சீரமைத்தல் என்று சில கூறுகளைக் காட்டினாலும் படத்தின் பெரும்பகுதி காதலென்னும் பெருவெளிக்குள் நுழைந்து செல்கிறது. கடலோடிகளின் பாடுகள் என்னென்ன என்று காட்டுவதற்காக இல்லை, கடலோரத்தில் நிகழும் காதலொன்றைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அவ்வாறு ஏற்றுக்கொள்ள வைத்ததில் இயக்குநர் வெற்றி பெறுகிறார்.

    kadalora kavithaigal the last movie with love emotions

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து ஆறாம் ஆண்டில் கடலோரக் கவிதைகள் வெளியாயிற்று. 'முதல் மரியாதைக்கு’ அடுத்து வெளிவந்த படம். அவ்வாண்டில் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் மாமன்மார்களில் ஒருவர் திருச்செங்கோட்டுக்குச் செல்லும் வேலையாகக் கிளம்பினார். அன்று பள்ளி விடுமுறை என்பதால் என்னையும் உடனழைத்துச் சென்றிருந்தார். திருச்செங்கோட்டில் ஜோதி திரையரங்கம் என்று புதிதாகக் கட்டியிருந்தார்கள். அழகிய முகப்பும் பெரிய வெண்திரையும் கொண்ட பளபளப்பான அரங்கு. சென்ற வேலை முடிந்ததும் காலைக் காட்சிக்குக் கடலோரக் கவிதைகள் பார்க்கப் போய்விட்டோம்.

    படம் முழுக்கவே பார்வையாளர்களின் மனங்களைத் தொட்டு இசையிழைகளால் இசைஞானி தைக்கத் தொடங்க, உணர்ச்சிக் காட்சிகளால் பாரதிராஜா பதம்பார்த்துவிட்டார். படத்தின் பிற்பாதியில் கண்ணீர்ப் பெருக்கு. திரும்பி வந்தபோது நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை. திருப்பூர் 'டைமண்டில்’ அதே படம். மற்றொரு முறை பார்த்தேன். இப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்த இம்முறை வரைக்கும் எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்பதற்குக் கணக்கேயில்லை.

    யாரையும் அடித்துப் பேசுகின்ற முரடன் சின்னப்பதாஸ். கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளில் அடிக்கடி சிறைக்குச் செல்கின்றவன். அவ்வூர்க்குப் புதிதாய்ப் பணிக்கு வரும் ஜெனிபர் டீச்சரின் காதலுக்கு ஆட்பட்டு ஆட்டுக்குட்டியைப்போல் ஆகிறான். மாமன் மகள் கங்கம்மாவைக் கட்ட வேண்டிய நிலையிலும் ஜெனிபரை நினைத்துவிட்ட சின்னப்பதாஸ் எண்ணெழுத்து கற்று இளகிய மனத்தினனாக மாறுகிறான். அவ்வூரைச் சுற்றிப் பார்க்க வரும் இலாரன்சு ஜெனிபரை மணந்துகொள்ளப் போகிறவன். இவ்வுண்மை சின்னப்பதாசுக்குத் தெரிகையில் மனங்குமைந்து பித்தனாகிறான். சின்னப்பதாசு தாலி வாங்கச் சென்றிருக்கிறான் என்று கங்கம்மா கூறும் பொய்யை நம்பும் ஜெனிபர் தன் காதலை மனத்துக்குள் புதைத்துக்கொள்கிறாள். ஜெனிபரின் தந்தை மற்ற பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கு இலாரன்சுக்குத் தம் மகளைத் திருமணம் செய்து வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதுவதால் சின்னப்பதாசின் காலில் விழுந்து அவளை மறந்துவிடக் கெஞ்சுகிறார். ஜெனிபர் ஊரை விட்டுச் சென்றதும் சின்னப்பதாசுக்கு வலுக்குன்றுகிறது. வஞ்சம் வைத்தவர்களால் திருப்பி அடிக்கப்படுகிறான். உடல்நலம் குன்றுகிறது. படுக்கையில் விழுகிறான். உறவுகளால் பிரித்து வைக்கப்பட்ட காதலர்கள் ஒருவரையொருவர் மறவாதிருந்து மருகுகின்றனர். இறுதியில் இறப்பில் கட்டித் தழுவுகின்றனர். ஒரு கதையாக எளிமையான முடிச்சுகளைக் கொண்டிருப்பினும் அப்படத்தில் பாரதிராஜாவின் செய்திறம்தான் (மேக்கிங்) நம்மைக் கட்டிப் போட்டது.

    பாரதிராஜாவின் படங்கள் அனைத்துமே பாட்டுப் படங்கள். அவற்றில் கடலோரக் கவிதைகளுக்குத் தனித்த இடமுண்டு. “அடி ஆத்தாடீ….” என்று ஜானகியம்மையின் குரல் ஓங்கி எழுகையில் அடிவயிற்றில் நம்மையறியாமல் நீர்ச்சுழல்போல் ஏதோ ஒன்று சுழலும். “கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே… எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே” என்னும் பாடலைச் சொல்லாமல் தவிக்கும் காதல் பாடல் வரிசையில் முதலிடத்தில் வைக்கலாம். “கடலோரக் கவிதைகள்தான் எனக்கும் இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் கடைசிப் படம்” என்று பாரதிராஜா கூறியபோது அவர் முகத்தில் அருமைகளை இழந்ததன் ஏக்கம் தெரிந்தது. பாரதிராஜாவின் படைப்புலகில் ஆசிரியையே கனவுப்பெண்ணாக இருக்கக்கூடும் என்றும் இப்போது தோன்றுகிறது.

    கடலோரக் கவிதைகளைப் பார்த்த பிறகு அடுத்த மூன்று நாள்களுக்கு என் மனம் வெறுமையாய் இருந்தது. எவற்றிலும் ஈடுபாடு தோன்றவில்லை. அத்தகைய வெறுமை உணர்ச்சிக்கு ஆட்பட்டது மூன்றாம் பிறை, இதயத்தைத் திருடாதே போன்ற சில படங்களில்தான். கடலோரக் கவிதைகளுக்குப் பிறகு வந்த பாரதிராஜாவின் படங்களில் இடம்பெற்ற காதல்களால் பழைய உணர்ச்சி உயரத்தைத் தொடவே முடியவில்லை. கடலோரக் கவிதைகள்தான் அவருடைய திறப்பாடுகள் வென்ற கடைசிக் காதல் படமாகிவிட்டது. அதற்குப் பிறகு வந்த பாரதிராஜாவின் படங்களில் காதல் துணைப்பொருளானதே தவிர, முதன்மைக் கதைப்பொருளாகவில்லை.

    - கவிஞர் மகுடேசுவரன்

    English summary
    Cinema Article about Kadalora kavithaigal the last movie with love emotions
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X