கொஞ்சம் பிளாஷ்பேக்: மூச்சு விடாமல் 'பயம்' பேசிய கமல்ஹாசன் அதை மறந்ததால் 'தெனாலி'க்கு வந்த சிக்கல்!
சென்னை: தெனாலி படத்தில் பயம் பற்றி கமல்ஹாசன் பேசும் அந்த காட்சியின் முக்கியமான விஷயத்தை மறந்ததால் ரீ ஷூட் செய்யப்பட்டது.
ஒவ்வொரு சினிமா படத்துக்குப் பின்னும் ஓராயிரம் இருக்கிறது, வெளியில் தெரியாத கதைகள்!
அதை இப்போது சொன்னால், அடடா என்று ஆச்சரியப்படுவார்கள். என்னதான் பக்காவாக பிளான் போட்டாலும் சில நேரங்களில் சொதப்பி விடுவது மனித இயல்பு.

படங்களுக்குச் சிக்கல்
மனிதன் தவறு இயற்கைத்தானே. அப்படி பல படங்களில் சின்ன சின்னத் தவறுகளால் படங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சில படங்கள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து இருக்கிறது. ஹீரோக்கள், இயக்குனர்களிடையே பல முட்டல், மோதல்களையும் ஏற்படுத்தி இருக்கிறது, இந்த சின்ன சின்ன மனித தவறுகள். கூடவே சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன.

கிரேஸி மோகன்
கமலின் 'தெனாலி' படத்தை மறந்திருக்க முடியாது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கி இருந்த படத்தில் தேவயானி, ஜோதிகா, ஜெயராம், சார்லி, டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். கடந்த இரண்டாயிரமாவது வருடம் வெளியான இந்தப் படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்தார். கே.எஸ்.ரவிகுமார் தயாரித்திருந்தார்.

எல்லாம் பய மயம்
இதில் இலங்கை தமிழராக நடித்திருந்த கமல்ஹாசன், தொடர்ந்து ஒரு வசனம் பேசுவாரே ஞாபகம் இருக்கிறதா? 'எனக்கு எல்லாம் பய மயம்..' என்று ஆரம்பித்து மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருப்பாரே, அந்த வசனம்தான். டாக்டர் ஜெயராம் முன்னால் அமர்ந்தபடி பேசும் அந்தக் காட்சியின் போது கமல்ஹாசன் கண்களில் இருந்து கண்ணீர் வரவேண்டும், கதைப்படி

கண்ணீர் வரவில்லை
முதலில் இந்தக் காட்சியை ஏவி.எம்மில் செட் அமைத்து ஷூட் செய்திருந்தனர். படம் முடிந்து ரிலீஸ் தேதியும் அறிவித்து விட்டனர். கமல் டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் கவனித்தார். அந்தக் காட்சியில் கமல்ஹாசன் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரீ ஷூட் பண்ணச் சொல்லிவிட்டார். இனி செட் போட்டு படமாக்க நேரமில்லை என்பதால் உடனடியாக, இரவோடு இரவாக இடம் தேடினர்.
Recommended Video

நடிகர் ஜெயராம்
கடைசியாக, சென்னை லீ கிளப் ரிசப்ஷனை காட்சிக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தனர். அங்கு ஷூட்டிங் நடத்தி அந்தக் காட்சியை எடுக்க முடிவு செய்தனர். கேரளாவில் மலையாளப் படம் ஒன்றில் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் ஜெயராமிடம் விஷயத்தைச் சொல்லி அவரை அவசரமாக அழைத்து வைத்து மீண்டும் படமாக்கினர். எப்போதும் பேசப்படும் அந்தக் காட்சிக்குப் பின்னுள்ள சின்ன கதை இது. ஆனால், பெரிய விஷயம்!


Click it and Unblock the Notifications











