For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணதாசனும் பாரதிதாசனும் - திரைத்துறை யாரை ஏற்றுக்கொண்டது ?

By Ka Magideswaran
|

-கவிஞர் மகுடேசுவரன்

திரைப்படப் பாடலாசிரியர்களில் கண்ணதாசன் முதன்மையானவராக மதிப்பிடப்படுகிறார். அவர்க்கு முன்னும் பின்னும் பலர் நல்ல நல்ல பாடல்களை எழுதியிருந்தாலும் திரைப்பாடல்களில் கண்ணதாசன் பிடித்த இடத்தைப் பிறர் இன்றுவரையிலும் கைப்பற்றவில்லை என்று துணிந்து கூறலாம். கண்ணதாசன் திரைப்பாடல்களில் கோலோச்சிய காலத்தில் இலக்கியக் களத்தில் பாரதிதாசன் இடையறாது செயல்பட்டார். பாரதியாரின் மாணவரான பாரதிதாசன் திரையுலகில் காலடி வைத்தவரும்கூட. அவரால் திரைத்துறையில் அடைய முடியாத உயரத்தைக் கண்ணதாசன் எட்டினார். இருவர்க்குமிடையில் நாகரிகமான இலக்கிய நட்பு இருந்தது எனினும் கண்ணதாசனின் பாடல்களில் அவர்க்கு மனக்குறைகளும் இருந்தன. அக்குறைகள் புலவர்களுக்கு மட்டுமே புலப்படும் குறைகளாக இருந்தமையால் மக்களுக்குத் தெரியவில்லை.

திரைப்பாடல்களுக்குக் கண்ணதாசன் கையாண்ட தமிழே போதும். எளிய சொற்றொடர்களில் நிலையாமைக் கருத்துகளை எழுதியபோது அவை தத்துவப் பாடல்கள் என்று புகழப்பட்டன. ஆயிழை சேயிழை போன்ற இலக்கியத்தொடர்களைப் பயன்படுத்தி எழுதினால் மக்கள் வியந்தார்கள். பாடல் எழுதுவதற்குக் கண்ணதாசன் கைக்கொண்டிருந்த முறைமைகளைப் பாரதிதாசனைப் போன்ற தமிழ்வல்லார்கள் நன்கறிவார்கள். பாண்டியன் பரிசு என்னும் தம் கதையைப் படமாக்குவதற்குச் சென்னையில் வீடு பிடித்துத் தங்கியிருந்த பாரதிதாசன் மாலை வேளைகளில் தம் மாணாக்கர்கள் புடைசூழ திரைப்படங்களுக்குச் செல்வாராம். அப்படிச் சென்று காணும் படங்களில் இடம்பெறும் பாடல்களைக் கேட்டு “என்னய்யா இது… இப்படியா எழுதுவது…?” என்று பாதியிலேயே வெளியேறுவாராம். நல்லவேளை, பாரதிதாசனுக்குத் தற்காலத்துப் பாடல்களைக் கேட்டு வருந்தும் கெடுபேறு வாய்க்கவில்லை.

kannadasan and bharathidasan

கண்ணதாசன் தம் இளமை முதற்றே தமிழ் மரபுச் செய்யுள்களை ஆழ்ந்து கற்றவர். அவருடைய காலத்தில் கற்பது என்பது தமிழ்ச்செய்யுள்களை மனப்பாடம் செய்வதாகத்தான் இருந்தது. ஒரு செய்யுளைப் படித்தால் அப்படியே திருப்பிக் கூற வேண்டும். அதை எப்போது கேட்டாலும் கூறும்படி மனத்தில் இருத்த வேண்டும். அவ்வாறு மனப்பதிவாக நிலைக்க வேண்டும் என்பதுதான் தமிழ் யாப்பிலக்கணம் தோன்றியமைக்கும் அடிப்படை. அக்காலத்தில் ஒரு கருத்தினை ஓலைச்சுவடிகளில் பதித்து எல்லார்க்கும் தர முடியாதே. அப்படித் தந்தாலும் எழுத்தறிவினர் பெருந்தொகையினராக இருக்கவும் வாய்ப்பில்லையே. அதனால்தான் பாடலாகவே ஒன்றைப் பதியவைக்கும் யாப்பு முறை தோன்றிற்று.

கண்ணதாசனுக்குத் தமிழ்ச் செய்யுள்களைத் தொடர்ந்து படிப்பது பிடித்திருந்தது. ஆண்பெண் புணர்ச்சிக் கவிதைகள் மிகுந்த “கூளப்பநாயக்கன் காதல்” என்னும் நூலை மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் பெற்றிருந்தார். இன்றைக்குக் கவியெழுதுவோரை ஏதேனும் ஒரு மரபிலக்கிய நூலை மனப்பாடமாகச் சொல்லச் சொல்லுங்கள், பார்ப்போம். முழு நூலும்கூட வேண்டா. குற்றாலக் குறவஞ்சியில் பத்துப் பாடல்களைக் கூறமுடியுமா ? ஔவையார் இயற்றிய அறநூல் வெண்பாக்கள் சிலவேனும் தெரியுமா ? பாரதியார் பாட்டு ஒன்றிரண்டையேனும் அடிபிறழாமல் சொல்வார்களா ? ஏமாற்றமே மிஞ்சும். இவ்விடத்தில்தான் கண்ணதாசனின் தகைமை ஏறுவரிசையில் ஏறத் தொடங்குகிறது.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நடத்திய “சண்டமாருதம்” என்னும் இதழுக்கு உதவி ஆசிரியராகத்தான் கண்ணதாசன் ஒரு திரைப்பட நிறுவனத்திற்குள் காலடி வைத்தார். இதழ் வேலைகள் முடிந்த பின்னர் அவர்க்கு நிறையவே நேரம் கிடைத்தது. அவ்வமயம் படப்பிடிப்புகளையும் பாடல், ஆடல், நடிப்பு முதலானவற்றுக்கு நடக்கும் ஒத்திகைகளையும் தொடர்ந்து கண்ணுற்றார். ஒரு படம் எப்படி உருவாகிறது என்பது அவர்க்குப் பிடிபட்டுவிட்டது. அக்காலத்தில் ஒரு படத்தை எடுத்துவிட்டால் அது வாடகைக்குக் கடைகட்டி விடுவதைப்போல என்றென்றைக்கும் பொருளீட்டித்தரும் முதலீடாக மாறிவிடும். இன்றைக்குத்தான் ஒரு படத்தின் திரையீடும் மக்கள் பார்ப்பதும் பத்திருபது நாள்களில் முடிந்துவிடுகின்றன. அன்றைக்கு நல்ல கதைப்படத்தை உரிய நடிகர்களைக்கொண்டு சிறப்பாக எடுத்து வெற்றி பெற்றால் அவர் என்றென்றைக்கும் உட்கார்ந்து உண்ணலாம். அப்படிப்பட்ட கற்பக மரமாக விளங்கிய தொழில் அது.

கண்ணதாசனின் இயல்பானது தொழிலார்வத்தின்மீதுதான் கவிந்தது. திரைப்படம் எடுப்பது மிகச்சிறந்த தொழில் என்று அவர் கருதத் தொடங்கினார். அவருடைய தமையன்மார்களில் ஒருவரான ஏ.எல். சீனிவாசன் என்பவர் வெற்றிபெற்ற படமுதலாளியாக வலம்வந்தார். அம்பிகாபதி, திருடாதே போன்ற படங்களை எடுத்தவர் அவர்தான். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் திரைப்படம் எடுக்கும் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட கண்ணதாசன் திரைப்படத்திற்கான கதை, உரையாடல்கள், பாடல்கள் ஆகியவற்றை எழுதுவதில் ஈடுபாடு கொண்டார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கண்ணதாசன் இதழாசிரியர் பொறுப்பில் பணியாற்றினார். அப்போதுதான் பாரதிதாசன் கதை, உரையாடல், பாடல்கள் எழுதுவதற்காக ஆண்டுக்கு நாற்பதாயிரம் ஊதியம் என்னும் பெரும் பொருளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். அங்கேதான் அண்ணாதுரையும் அழைத்து வரப்பட்டு ஓர் இரவு நாடகத்தைத் திரைப்படத்திற்கேற்பவும் எழுத வைக்கப்படுகிறார். கண்ணதாசனுக்குப் பாரதிதாசன், அண்ணாதுரை போன்ற மூத்தவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. பிற்காலத்தில் திரைத்துறையில் புகழ்பெற்ற பலரோடும் அவர்க்குச் சேலத்தில்தான் நட்பாயிற்று.

அண்ணாதுரை ஓர் இரவு திரைப்படியை எழுதித்தரும்வரை அவரை உடனிருந்து புரக்கும் பொறுப்பு கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அண்ணாதுரையோடு இணக்கமானவர் பாரதிதாசனோடு முரண்பட்டுவிட்டார். பாரதிதாசன் எழுதித் தந்த பாடல்வரியில் சொல் திருத்தம் வேண்டப்பட்டபோது திருத்தித்தர பாவேந்தர் மறுத்துவிட்டார். கமழ்ந்தது என்னும் சொல்லை மலர்ந்தது என்று மாற்றலாம் என்று கண்ணதாசன் கூறிவிட்டார். கண்ணதாசன் சொன்ன திருத்தத்தின்படி பாடலும் பதிவானது. பதிவான பாடல் பாரதிதாசனிடம் சென்றது. “என் இசைவின்றி என் பாடலின் சொல்லை மாற்றியவன் எவன் ?” என்று சினந்தவர் துண்டை உதறித் தோள்போட்டு வெளியேறிவிட்டார்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஒரு பவுன் தங்கம் நாற்பது உரூபாய்க்கு விற்ற நாளில் தமக்குத் தரப்படவிருந்த நாற்பதாயிரத்தைத் துறந்து வெளியேறினார் பாரதிதாசன். அந்த நாற்பதாயிரத்திற்கு ஆயிரம் பவுன்கள் வாங்கலாம். இன்றைய மதிப்பில் இரண்டரைக் கோடிகள். அந்த வெளியேற்றத்தின் பிறகு பாரதிதாசனால் திரையுலகுக்குள் நுழையவே முடியவில்லை. ஆனால், கண்ணதாசன் என்னும் இளைஞர் திரையுலகின் நீக்குபோக்குகளை நன்கு விளங்கிக்கொண்டார். மாடர்ன் தியேட்டர்சின் நொடிப்புக்குப் பிறகு சேலத்தை விடுத்து சென்னைக்குத் திரைத்தொழில் படிப்படியாக மாறிக்கொண்டிருந்தது. கண்ணதாசனும் சென்னைக்குக் கிளம்பினார். சென்னைக்கு வந்து அவர் பாடலாசிரியராக நிலைபெற்றது எண்ணற்ற திருப்பங்கள் நிறைந்த இன்னொரு கதைப்படலம். திரைத்தொழிலின் எதிர்காலத்தைத் தவறாகக் கணித்திருந்த பாரதிதாசன் பிற்பாடு தம் கதையைப் படமாக்க முயன்று சிவாஜி கணேசனின் ஒப்புதலுக்காக அலைந்தார். அம்முயற்சியில் தம் சொத்துகளை இழந்து மனமொடிந்து இறந்தார். அந்நேரத்தில்தான் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்காக சிவாஜியின் படங்கள் காத்துக் கிடந்தன. காலம்தான் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது!

English summary
Cinema Article about Kannadasan and Bharathidasan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more