கருணாநிதி 87வது பிறந்த நாள் விழா கூட்டம்- குஷ்பு வாழ்த்துரை

முதல்வர் கருணாநிதி நாளை தனது 87வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். இதையொட்டி கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் வீடு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெக ஜோதியாக ஜொலிக்கிறது.
வீட்டின் வாசல் முகப்பில் பந்தல் அமைக்கப்பட்டு, துணிகளாலும், தென்னங்குலை, பனங்குலை, தென்னங்கூந்தல், ஈச்சம் பழக்குலை போன்றவற்றாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வீட்டைச் சுற்றிலும் பல வண்ண அலங்கார விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளன.
நாளை காலை அண்ணா, பெரியார் ஆகியோர் நினைவிடங்களில் முதல்வர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்தைப் பெறுகிறார்.
முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் திருவான்மியூர், வடக்கு மாட வீதியில் நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம் வழுதி, எஸ்.பி.சற்குண பாண்டியன், கவிஞர் கனிமொழி எம்.பி. நடிகை குஷ்பு மற்றும் கழக முன்னணியினர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார்.
நடிகை குஷ்பு திமுகவில் இணைந்த பின்னர் அவர் பங்கேற்கும் முதல் திமுக பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











