twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் எஸ்.வி.சேகர்!-கருணாநிதி

    By Chakra
    |

    SV Sekar and Karunanidhi
    நாடகங்களில் சமூகக் கருத்துக்களைச் சேர்த்துச் சொல்வதில் நடிகவேள் எம்ஆர் ராதாவுக்கு அடுத்து திறமை பெற்றவர் நடிகர் எஸ்வி சேகர் என்றார் முதல்வர் கருணாநிதி.

    நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் நாடகப்பிரியா' என்ற நாடக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது 5,600வது நாடகம் 'அல்வா' சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நேற்றிரவு அரங்கேறியது.

    நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த நாடகத்தை அவர் மிகவும் ரசித்து பார்த்தார். நாடகப்பிரியா நாடகக்குழு கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    5600வது நாடக விழா மலரை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை முதல்வர் கருணாநிதி பெற்று கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:

    இப்படிப்பட்ட மிக எளிமையான, மிகச் சுருங்கிய அளவில், விரைவில் ஒரு நாடகத்தைத் தொடங்கி, அதனை நிறைவு செய்து அதிலே வருகின்ற நூற்றுக்கணக்கான காட்சிகள் அல்ல. பத்து, பதினைந்து காட்சிகளாயினும் அதிலே நூற்றுக்கணக்கான காட்சிகளிலே ரசிக்கின்ற கருத்துக்களை மருந்து கேப்சூல் போல வைத்துக் கொடுக்கின்ற அந்த திறமையை நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு இன்றைக்கு எஸ்.வி.சேகரிடம்தான் காண்கின்றேன்.

    நான் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறுவனாக இருந்த அந்த காலத்தில் கன்னையா கம்பெனி நடத்திய 'பகவத் கீதை' நாடகத்தையே பார்த்தவன். ஏனென்றால் நான் இன்றைக்கு 86- தாண்டிக் கொண்டிருப்பவன்.

    எனவே எத்தனை ஆண்டுக்கால அனுபவம் இது போன்ற நாடகங்களைப் பார்ப்பதிலே, ரசிப்பதிலே எனக்கு இருந்தது என்பதை கன்னையா கம்பெனியைப் பற்றி தெரிந்தவர்கள் உணரக்கூடும். கன்னையா கம்பெனியில் 'நாடக மேடையிலேயே கார் வருகின்ற காட்சியைக் காணத் தவறாதீர்கள்!' என்று விளம்பரம் செய்வார்கள்.

    வேடிக்கை என்னவென்றால், நாடகத்தின் பெயர் 'பகவத் கீதை''. நாடகம் முழுவதும் பாரதக் கதையை அடிப்படையாகக் கொண்ட கதைதான் நாடகம். அந்த நாடகத்தில் கார் வருகிறது என்பதை ஒரு அதிசயமாக, ஆச்சரியமாக, நூதனமாக, அற்புதமான காட்சியாக மக்களிடம் எடுத்துச் சொல்லி, அதைக் காண பெருங்கூட்டம் தியேட்டரிலே கூடும்.

    பிச்சைக்காரன் கதை

    அந்த காரில் யார் வருவார்கள் என்றால், கிரீடம் தரித்த பொன்னாடை போர்த்திய, பளபளப்பான வாள் ஏந்திய மன்னர், அவருக்கு அருகே அவருடைய துணைவியார் ராணி.. இப்படி வந்து இறங்குவார்கள்.

    இறங்கியவர்கள், பக்கத்திலே இருக்கின்ற மாளிகையில் இருபதுக்கு மேற்பட்ட படிக்கட்டுகளைத் தாண்டி, மாளிகை முகப்பிலே உள்ள பால்கனியிலே அமருவார்கள். அப்பொழுது மன்னர் தன்னுடைய கையிலே உள்ள ஒரு ஆரஞ்சு பழத்தை உறித்துக் கொண்டிருப்பார். அந்த ஆரஞ்சு பழத்தை உறித்து, பழத்தின் தோல்களை மேலேயிருந்தவாறு வீதியிலே வீசிக்கொண்டிருப்பார். அந்த தோலை எடுத்து ஒரு பிச்சைக்காரன் நாக்கால் நக்கிக் கொண்டிருப்பான். இதைப் பார்த்ததும் ராணிக்கு மகா கோபம் வந்து விடும்.

    'பார்த்தீர்களா, மன்னா, நீங்கள் எச்சில் செய்து எறிந்த தோலை ஒரு பிச்சைக்காரன் எடுத்துச் சாப்பிடுவதா?' என்று கேட்பாள். உடனே மன்னருக்கும் கோபம் வந்து விடும்.

    'நான் எச்சில் செய்த தோலை ஒரு பிச்சைக்கார பயல் சாப்பிடுவதா?' என்று காவலர்களை விட்டு அந்த பிச்சைக்காரனை அடிக்கச் சொல்வார். காவலர்கள் அடிக்க தொடங்குவார்கள்.

    அடித் தாங்காமல் துடித்துக் கீழே விழுவான் பிச்சைக்காரன் என்று நாம் எண்ணுவோம். விழ மாட்டான், கலகலவென சிரிப்பான். உடனே அரசருக்கும், அரசிக்கும் சந்தேகம். ஏன் சிரிக்கிறான் என்று.

    உடனே மன்னர், 'இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இவ்வளவு அடிபட்டும் சிரிக்கிறானே' என்று தெரிந்து கொள்ள மன்னர் படிகளில் இறங்கி கீழே வந்து 'இங்கே வாடா, பிச்சைக்காரா?' என்று அழைப்பார். அவன் வருவான். ஏன் சிரிக்கிறாய் என்று கேட்பார். அதற்கு அவன் சொல்லுவான், 'ஒன்றும் இல்லை மகாராஜா, ஆரஞ்சு பழத்தின் தோலைச் சாப்பிட்ட எனக்கே இவ்வளவு அடி என்றால், அந்த பழத்தைச் சாப்பிட்ட உங்களுக்கு எவ்வளவு அடி விழுமோ?' என்றெண்ணி சிரித்தேன் என்பான்.

    புராண நாடகம்தான்... பளபளப்பான சீன்களும், படுதாக்களும், கிரீடங்களும், வாள்களும் உலவுகின்ற நாடக மேடைதான். அந்த மேடையில் கார் வருவதாகச் சொல்லி, அந்த காரிலிருந்து பழைய காலத்து ராஜாவும், ராணியும் இறங்கி இப்படியொரு அற்புதமான பொது உடைமைத் தத்துவத்தை விளக்குவார்கள்.

    இப்படி கருத்தமைந்த நாடகங்கள் இன்னும் சொல்லப் போனால் அந்த காலத்திலே தெருக்கூத்து மாத்திரம் நடந்து கொண்டிருந்த காலத்தில் இப்படி அற்புதமான நேரடியான காட்சியாக அதிசயிக்கத்தக்க பிரமாண்டமான நாடகத்தை நடத்திக் காட்டியவர் கன்னையா.

    ஒரே மேஜை... நாற்காலி.. சங்கராச்சாரியார்!...

    அண்ணாவே, பிரசாரத்திற்காக 'சந்திரோதயம்' போன்ற நாடகங்களில் நடித்திருக்கிறார். நானும் 'தூக்குமேடை' போன்ற நாடகங்களில் நடித்திருக்கிறேன். அண்ணாவோடு சேர்ந்து நானும் நாடகங்களிலே நடித்திருக்கிறேன். எம்.ஆர்.ராதா நாடகத்திலாவது ஒவ்வொரு காட்சிக்கும் வெவ்வேறு நாற்காலிகள் என்று வரும்.

    ஆனால் தம்பி சேகருடைய நாடகத்தில் ஒரே மேஜை, ஒரே நாற்காலி, ஒரே சீன் என்ற அளவிற்கு ஒரே சங்கராச்சாரியார் படம். பெரியவர் படம் அந்த பக்கம். சின்னவர் படம் இந்த பக்கம். அதிலே மையம் கொண்டவர்கள் அதைப் பாருங்கள், இதிலே மையம் கொண்டவர்கள் இதைப் பாருங்கள் என்று அதே சங்கராச்சாரியார் தான் அடுத்தடுத்து வந்தது.

    அற்புதமாக வசனங்களை கிராமிய மொழியிலே சொல்ல வேண்டுமென்றால், குட்டி வசனங்களை அல்ல குட்டிகுட்டி வசனங்களை சின்ன சின்ன வசனங்களை பேசுவதின் மூலமாக பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் இதிலே காட்டியிருக்கிறார்.

    தவறு செய்தாலும் உடனடியாக திருத்திக் கொள்ளக் கூடிய சாதனம் சினிமா. ஆனால் எந்த தவறு செய்தாலும் காட்டிக்கொடுத்து விடுகின்ற நிலைக்குரியது நாடகம். அந்த நாடகத்தில் தவறே செய்யாமல், பிழையே இல்லாமல் மிக அழகாக அற்புதமாக வசனங்களை உச்சரித்து அதுவும் வேடிக்கை வசனங்களை கேலிக்குரிய வசனங்களைப் பேசுவது என்றால் சுலபமல்ல. அவற்றைப் பேசி தானும் சிறப்பாக நடித்து தன்னுடைய குழுவிலே உள்ளவர்களைச் சிறப்பாக நடிக்க வைத்து அதிலே வெற்றி பெற்றிருக்கிறார்.

    இந்த 5600 நாடகங்களை நடத்துவதிலே அவருக்கு அலுப்பு ஏற்படுகிறதோ இல்லையோ அதைப் பார்க்கின்ற நமக்கு எவ்வளவு அலுப்பு ஏற்பட்டிருக்கும்... ஏ, அப்பா 5600வது நாடகமா என்று. அந்த அலுப்பு ஏற்படாமல், அலுப்பு தட்டாமல் அன்றாடம் பத்திரிகைகளிலே வருகின்ற செய்திகளைக் கூட நாடகக் காட்சிகளாக ஆக்கி அற்புதமான ஒரு விருந்தை இன்றைக்கு நமக்கு சேகர் அளித்திருக்கிறார்.

    அவருடைய ஆற்றலை நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன், வியக்கிறேன், சேகர் போன்றவர்களுடைய கலை உணர்வு தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்படும், பயன்பட வேண்டும்.

    சேகரிடத்திலே, அவர் வேறு முகாமிலே இருந்தபோது கூட எனக்கு அன்பு உண்டு. ஒரு வேளை அந்த உண்மையான அன்பு தானோ என்னவோ இன்றைக்கு அவரை என் பக்கத்திலே உட்கார வைத்திருக்கிறது என்றார் முதல்வர் கருணாநிதி.

    துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எஸ்.வி.சேகரைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் நாடகத்தில் மட்டுமல்ல நேரிலும் அனைவரையும் சிரிக்க வைக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். சட்டமன்றத்திலும் உறுப்பினர்கள் அனைவரையும் சிரிக்க வைப்பார்.

    எதிர்க்கட்சியிலே இருந்தபோதும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியைப் பார்த்து சிரித்து வரவேற்பார். அவர் உள்ளத்தில் கலைஞர் இருப்பது என்னை பெரிதும் கவர்ந்த ஒன்றாகும். நாடகத் துறையிலே மட்டுமல்ல பொதுப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கடமையாற்றி வருகிறார். பண்புள்ளம் கொண்டவர் என்றார்.

    முன்னதாக எஸ்.வி.சேகர் பேசுகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நாடகம் போடுவதற்கு போலீசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த முறையை நீக்க வேண்டும் என்றார்.

    பின்னர் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்திற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நாடகப்பிரியா சார்பில் ரூ.50,000த்தை முதல்வரிடம் வழங்கினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X