'ராணா': ரஜினியுடன் ஆலோசனை நடத்த சிங்கப்பூர் செல்லும் ரவிக்குமார்
ரஜினியின் கனவுப் படம் எனப்படும் ராணாவின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்த ஆலோசனை அடுத்த வாரம் சிங்கப்பூரில் நடக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த 'ராணா' படப்பிடிப்பின்போது ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் 2 முறை சென்னை இசபெல்லா மருத்துவமனையிலும், அதன்பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரகக் கோளாறுக்கு நவீன சிகிச்சை தேவைப்பட்டதால் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இங்கு அவர் உடல்நிலை தேறியது. இப்போது பழையபடி சுறுசுறுப்பாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் ரஜினி.
சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒருமாதம் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
டாக்டர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு தினமும் சென்று, ரஜினிகாந்தின் உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்கள். அவர் புத்துணர்ச்சி பெறுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ராணா படத்தின் கதை மற்றும் காட்சிகள் பற்றி விவாதிப்பதற்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை சிங்கப்பூர் வரும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, கே.எஸ்.ரவிக்குமார் அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்கிறார்.
'ராணா' படத்தில் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இன்னும் 5 கதாநாயகிகளும் படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. படப்பிடிப்பை மீண்டும் எப்போது துவங்குவது என்பது உள்பட பல்வேறு விஷயங்களை இருவரும் விவாதிக்க உள்ளனர்.
ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதிலிருந்து அவரைச் சந்திக்க எத்தனையோ பேர் முயன்றும் முடியவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் தவிர, ரஜினியை அதிகாரப்பூர்வமாக நேரில் சந்திக்கும் முதல் திரையுலகப் பிரமுகர் சிரஞ்சீவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











