புனித் ராஜ்குமார் என்றொரு மாமனிதன்... ரஜினி சொன்ன அந்த வார்த்தை... மறவாத ரசிகர்கள்!
சென்னை: கன்னட ரசிகர்களால் அப்பு என்றழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த 2021ஆம் ஆண்டு காலமானார்.
புனித் ராஜ்குமார் மறைவை அடுத்து கர்நாடக அரசு சார்பில் அவருக்கு 'கர்நாடக ரத்னா விருது' வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று புனித் ராஜ்குமாரின் 48வது பிறந்தநாளை கன்னட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற இலக்கணத்தின் படி வாழ்ந்து மறைந்த புனித் ராஜ்குமாரை அவரது ரசிகர்கள் மறக்க வாய்ப்பே இல்லை என உணர்த்துகிறது இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.

46 வயதில் மறைவு
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த 2021 அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட புனித் ராஜ்குமார் 46 வயதில் உயிரிழந்தது இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் புனித் ராஜ்குமாரின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். புனித் ராஜ்குமாரின் மறைவை அவரது ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

ரசிகர்களின் ஆத்ம நண்பன்
புனித் ராஜ்குமார் நடித்த யுவரத்னா திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு 2021ம் மார்ச் 17ம் தேதி வெளியானது. இதுதான் அவரது கடைசி பிறந்தநாள் என்பதை அவர் உள்ளூர உணர்ந்துவிட்டாரோ என்னவோ.? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அமைந்தது யுவரத்னா படத்தின் ப்ரோமோஷன். அதன்படி, யுவரத்னா படத்தின் ப்ரோமோஷனில் புனித் ராஜ்குமாரை பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் பின்னால் வந்து நின்று ஆச்சரியப்படுத்தினார். ரசிகர்களுக்கு அவர் கொடுத்த அந்த முக்கியத்துவம் தான், ஒவ்வொரு கலைஞர்களுக்கும் முக்கியமானது.

உதவி மட்டுமே ஒரே இலக்கு
Kanteerava Studios-ல் தந்தை ராஜ்குமார் சமாதிக்கு அருகிலேயே புனித் ராஜ்குமாருக்கும் நினைவிடம் உள்ளது. அங்கே தினந்தோறும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், கன்னட மீடியம் பள்ளிகள், 19 பசு காப்பகங்கள், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் என புனித் நன்கொடை வழங்கிய பட்டியல் மிகப்பெரியது. கொரோனா ஊரடங்கின் போது மாநில அரசுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார். மறைவிற்குப் பிறகு தன்னுடைய கண்களையும் தானமாக வழங்கினார். இப்படி உதவியை மட்டுமே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு ஓடியவர் புனித் ராஜ்குமார்.

ரஜினி சொன்ன அந்த வார்த்தை
ஹீரோ பிம்பத்தில் இருந்து விலகி சமூகத்தில் ஒருவனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டவர் புனித் ராஜ்குமார். படங்களில் மட்டும் புரட்சிகரமான பஞ்ச் வசனங்கள் பேசாமல் நிஜத்திலும் வாழ்ந்து காட்டியதால் தான் ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக கடந்தாண்டு புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடக ரத்னா விருது விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஜினி, புனித் மனிதநேய மிக்கவராக இருந்துள்ளார், ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார் என நெகிழ்ச்சியாகக் கூறினார்.

எம்ஜிஆர் போல புனித்
மேலும், புனித் உதவியதால் தான் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவரது ஆத்மா பெரியது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். நடிப்புடன் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். சினிமாவில் நல்ல கதைகளை கொண்ட படங்களில் நடித்ததுடன் அதேபோல் உதவிகளையும் செய்தார். அதனால் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஆந்திராவில் என்டிஆர், கர்நாடகத்தில் ராஜ்குமார் இருவருமே தங்களது மனிதநேயத்தால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். அதே வரிசையில் புனித் ராஜ்குமாரும் சேர்ந்துள்ளார் என அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











