twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் தேகம் மறைந்தாலும்.. எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே.. போய் வா பாடும் நிலாவே!

    By
    |

    சென்னை: நாற்பதாயிரத்துக்கும் அதிகமானப் பாடல்களை பாடிய அந்த வசீகரக் குரல் அடங்கிவிட்டது இன்று.

    உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு கண்ணீரைத் தந்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறது அந்த சங்கீதம்.

    மீண்டு வருவேன் என்றவர் ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீண்டும் வராமல் சென்றுவிட்டார்.

    அற்புதங்கள்

    அற்புதங்கள்

    இசை, மாயங்களின் குழந்தை. அது திடீரென ஆடும், ஓடும், சிரிக்கும், குதிக்கும், அழும், விழும்! அந்த மாயத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு குரலும் செய்கின்றன ஓராயிரம் அற்புதங்கள். அப்படியான அற்புதங்களை இயல்பாகச் செய்யும் குரல் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உரியது.

    எம்.ஜி.ஆர், சிவாஜி

    எம்.ஜி.ஆர், சிவாஜி

    சங்கீதத்தை கரைத்துக் குடித்தவர்கள் அல்லது குடித்துக் கரைத்தவர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நாட்களில், சங்கீதம் அதிகம் தெரியாமல் இசைக் கோதாவில் இனிமையாக இறங்கியவர் அந்த மேதை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என சீனியர் ஜாம்பவான்களில் ஆரம்பித்து நடந்தவர், கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு பாடத் தொடங்கியதும் ஓடத் தொடங்கினார் நிற்க நேரமின்றி!

    காதலின் தீபம்

    காதலின் தீபம்

    இடையில் சிவகுமார், ஜெய்சங்கர், முத்துராமன் உள்பட பல ஹீரோக்களுக்கும் பாடியிருக்கிறார். ரஜினிக்கு காதலின் தீபம் ஒன்றை ஏற்றினாளே என்று உருகினால், ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்று கமலுக்கு காதலை வேறு விதமாக்குவார். ஒன்றா இரண்டா உதாரணம் சொல்ல?
    பாடல்களுக்கிடையே காதலை அதே உணர்வோடும் குழைந்து சிரித்தபடி அவர் பாடும் ஸ்டைலே தனி.

    மெளன ராகம்

    மெளன ராகம்

    நான் கட்டில் மேலே கண்டேன், வெண்நிலா என்பது உள்பட பல பாடல்களில் அவரின் தனித்துவத்தைக் கேட்டிருக்க முடியும். அதே போல, காதல் சோகத்தையும் அதே மனநிலையோடும் உணர்வோடும் பாடும் கலைஞர் அவர். ஈரமான ரோஜாவே.. பாடலில் இருந்து, நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா? என்பது சாம்பிள்.

    ஒவ்வொரு பாடலும்

    ஒவ்வொரு பாடலும்

    ரஜினிக்குப் பாடினாலும் கமலுக்குப் பாடினாலும் அவர்களாகவே மாறிவிடுகிற வித்தை எஸ்.பி.பி என்கிற மகா கலைஞனுக்கே வாய்த்தது.
    எஸ்.பி.பியை எழுத நினைத்தால் எந்த பாடலை விடுவது, எதைத் தொடுவது என்கிற தடுமாற்றத்தைத் தவிர்க்க முடியாதுதான். ஏனென்றால் ஒவ்வொரு பாடலும் முத்து.

    சங்கீத ஜாதிமுல்லை

    சங்கீத ஜாதிமுல்லை

    சங்கீதம் அறியாத எஸ்.பி.பி, 'சங்கீத ஜாதிமுல்லை.. காணவில்லை..'யை ஏற்ற இறக்கங்களுடன் பாடி இருப்பது இளையராஜா அவர் நண்பருக்கு வைத்த டெஸ்ட்! அந்தப் பாடலில் அத்தனை ஏற்றமும் இறக்கமும். அதை தேர்ந்த கர்நாடிக் இசைக் கலைஞர் போல பாடி, மிரட்டியிருப்பார் எஸ்.பி.பி. இளையராஜா வைத்த அந்த டெஸ்ட் கவிஞர் வைரமுத்துவுக்கும் சேர்த்துதான் என்பது தனிக்கதை.

    தகிட தகிமி தந்தானா

    தகிட தகிமி தந்தானா

    சலங்கை ஒலியின் தகிட தகிமி தகிட தகிமி தந்தானா.. பாடலையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம். மோகன் என்கிற நடிகனை மைக் மோகன் ஆக்கியது இயக்குனர்கள் என்றாலும் அவர் பயணங்கள் முடியாமல் தொடர, உயிர் கொடுத்தது எஸ்.பி.பியின் பாடல்கள். இளைய நிலா பொழிகிறது என்று ஒரு பக்கம் பாடினால், மணியோசை கேட்டு எழுந்து என்று மற்றொரு பக்கம் கிறக்குவார்.

    சம்சாரம் என்பது வீணை

    சம்சாரம் என்பது வீணை

    காதல், சோகம், ஏக்கம், தத்துவம் என அத்தனை ஏரியாவிலும் அவர் பாடல் காதுகளைத் தட்டி நிற்கிறது. சம்சாரம் என்பது வீணை பாடலில், ஒரு வரி பாடியிருப்பார், என் வாழ்க்கைத் திறந்த கூடு, அது ஆசைக்கிளியின் வீடு என்று. அப்படியேதான் அவரும். எதையும் மறைத்ததில்லை அவர். வெளிப்படையாக பேசும் இசை அவர்.

    நாளை என் கீதமே

    நாளை என் கீதமே

    'சங்கீத மேகம்..' பாடலில் சரணத்தில் அவர் பாடியிருப்பார், 'என் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்' என்று. அந்தப்பாடல் அவருக்காகவே பாடியது போல் இருக்கிறது! அதே பாடலில்தான் இந்த வரியும் இருக்கிறது, 'நாளை என் கீதமே, எங்கும் உலாவுமே.. எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே..!' என்று.
    உண்மைதானே அது!

    English summary
    Legendary singer SP Balasubrahmanyam, 'king of charming voice'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X