Exclusive - மணி சாரிடம் தந்த வாக்குறுதி.. ஏ.ஆர்.ரஹ்மானின் ரியாக்‌ஷன்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேட்டி

சென்னை: பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா 2005ஆம் ஆண்டு முதல் சினிமாவில் பாடல்கள் எழுதிவருகிறார். ஆனால் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது 96 பட பாடல்கள். அதனைத் தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் என பலரது இசைக்கு பாடல்கள் எழுதிய அவர் இப்போது மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக எழுதிய அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியர்களில் ஒருவர் கார்த்திக் நேத்தா. ஒப்பேத்தலுக்காக சினிமா பாடல்களில் வரிகள் அதிகரித்திருக்கும் சூழலில்; ஆழமாகவும், அர்த்தமாகவும் வார்த்தைகளை வைத்து பாடலை மெருகேற்றிக்கொண்டிருப்பவர் அவர். தமிழ் வார்த்தைகள் மட்டும்தான் தன்னுடைய பாடல்களில் பயன்படுத்துவேன் என்று சொல்லி அதனை தவறாமல் ஒவ்வொரு பாடலிலும் கடைபிடித்துவருகிறார். 96 பாடல்கள் அவருக்கு அடையாளத்தை கொடுத்தன. அதிலிருந்து அவரது வேகம் உச்சத்தை தொட்டிருக்கிறது. அதேநேரம் நிதானமாகவும் இருக்கிறது.

தக் லைஃப் படத்தில் கார்த்திக் நேத்தா: அமரன் படத்தில் மின்னலே ஓ மின்னலே பாடலின் மூலம் கேட்பவர்களின் காதுகளுக்குள் சர்க்கரை தூவிய கார்த்திக் தற்போது தக் லைஃப் படத்தில் விண்வெளி நாயகா, அஞ்சு வண்ண பூவே என இரண்டு பாடல்களில் அற்புதத்தை விதைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒன்பது பாடல்களில் கார்த்திக் நேத்தா எழுதியிருக்கும் இந்த இரண்டு பாடல்களும் பலரது ப்ளே லிஸ்ட்டில் ரிப்பீட் மோடில் போய்க்கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க முதன்முறையாக மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து அவரிடம் ஃபில்மிபீட் தமிழ் சார்பாக பேசினோம்.

கார்த்திக் நேத்தாவின் பேட்டி: அவர் நம்மிடம் பேசுகையில், "சினிமாவில் பாடல்கள் எழுத வேண்டும் என்று சென்னைக்கு நான் கிளம்பி வந்தபோது இளையராஜா, ரஜினி, கமல் இவர்களுக்கெல்லாம் எழுதிவிட வேண்டும் என்ற பெரிய பட்டியலே இருந்தது. அந்தப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னமும் இருந்தார்கள். 90களில் ரஹ்மான் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. நான் ஊரில் இருக்கும்போது இளையராஜா, கண்ணதாசனாக இருப்பார்கள். அப்படியே டவுன் பக்கம் வந்தால் ரஹ்மான் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்.

Lyricist Karthik Netha s Exclusive Interview About Working Experience in Thug Life Movie and A R Rahman

இரண்டு, மூன்று முறை முயற்சி: பிறகு சென்னைக்கு வந்த புதிதில் ரஹ்மான், மணிரத்னத்தை நேரில் பார்த்து பாடல்கள் எழுத வாய்ப்பு கேட்க முயற்சி செய்தேன். ஆனால் அது எதுவும் அமையவில்லை. அப்போதெல்லாம் ரஹ்மான் வீட்டில் பிரியாணி போடுவார்கள். சரி பிரியாணி சாப்பிடும் சாக்கில் சென்று அவரை பார்த்துவிடுவோம் என்று போவேன். ஆனால் பிரியாணிதான் சாப்பிட்டிருக்கிறேன். அவரை பார்க்க முடியவில்லை. அதேபோல் ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு பக்கத்தில் சாமியார் மடம் என்ற இடம் இருந்தது. அங்கு சென்று அப்போது தியானம் செய்வேன். தியானத்தை முடித்துவிட்டு வரும்போதாவது அவரை நேரில் பார்க்கலாம் என்று நினைப்பேன். ஆனால் அப்போதும் பார்க்க முடியவில்லை. அதேபோல் மணிரத்னம் அலுவலகத்துக்கு சென்றால் வாசலிலேயே என்னை எடிட் செய்துவிடுவார்கள்.

நான் எடுத்த முடிவு: அப்போது ஒரு முடிவெடுத்தேன். நாம் இன்னும் நிறைய கற்றுக்கொண்டு ஒரு ஹிட் பாடலை கொடுத்தால் அவர்கள் நம்மை திரும்பி பார்ப்பார்களே என்று நினைத்து அந்தப் பக்கம் போவதையே விட்டுவிட்டேன். பிறகு எனக்கு வாய்ப்புகள் கிடைத்து ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. ஏனெனில் அவர்கள் ரஹ்மான் - மணிரத்னம் - வைரமுத்து என்ற பெரிய கூட்டணி இருந்தது" என்று தனது ஆரம்ப கால செயல்கள் குறித்து கூறியவரிடம், தக் லைஃப் பட வாய்ப்பு எப்படி வந்தது என்ற கேள்வியை முன்வைத்தோம்.

கார்த்திக்கின் பதில்: வழக்கம்போல் உற்சாகம் குறையாத குரலோடு ஆரம்பித்த அவர், "மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனா என்பவர் இருக்கிறார். அவர் வானம் கொட்டட்டும் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்தான் அந்தப் படத்தை தயாரித்தது. அந்தப் படத்தில் நான் பாடல் எழுதுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதில் நான் எழுத முடியாமல் போய்விட்டது. அதை நினைத்து பெரிதாக எனக்கும் வருத்தம் இல்லை. ஏனெனில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் வெளியே நின்றுகொண்டிருந்த நாம் இப்போது உள்ளேயாவது போய்விட்டோம் என்ற திருப்தியுடன் வந்துவிட்டேன்.

வந்த அழைப்பு: திடீரென ஒருநாள் தனா எனக்கு ஃபோன் செய்து, கார்த்திக், மணி சார் உங்களை பார்க்க வேண்டுமென கூறுவதாக சொன்னார். பிறகு மணி சாரை சென்று சந்தித்தேன். கடவுளோ, எமனோ யார் நேரில் வந்தாலும் பேசியே கொல்லக்கூடிய ஆள் நான். ஆனால் மணிரத்னத்தை முதன்முதலில் பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. உங்களை எனக்கு பிடிக்கும் சார் என்று மட்டும்தான் சொன்னேன். அவர் என்னுடைய 96 பாடல்கள், வாகை சூட வா படத்தில் இடம்பெற்ற போறானே போறானே பாடலை குறிப்பிட்டு நன்றாக எழுதுகிறீர்கள் என்று கூறினார்.

ரஹ்மானை பார்த்தபோது உதறல் வரவில்லை: பிறகு பாடலுக்கான சூழ்நிலையை சொன்னார். அதனையடுத்து ரஹ்மானை சந்திக்க சென்றேன். மணி சாரை பார்த்தபோது வந்த உதறல் ரஹ்மான் சாரை பார்க்கும்போது வரவில்லை. ஏனெனில் அவரை பார்க்கும்போதெல்லாம் உடன் பிறந்த சகோதரர் என்ற உணர்வுதான் எனக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எப்போதும் நகை அணிந்த முகம் அது. எப்போதும் புன்னகையையே அணிகலனாக, ஆபரணமாக கொண்டவர் அவர்' என மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டவரிடம், பாடல்கள் எழுதிய அனுபவம் குறித்து கேட்டோம்.

Lyricist Karthik Netha s Exclusive Interview About Working Experience in Thug Life Movie and A R Rahman

விண்வெளி நாயகா எப்படி வந்தது: தொடர்ந்து பேசிய கார்த்திக் நேத்தா, 'விண்வெளி நாயகா பாடலை பொறுத்தவரை ரஹ்மான் எனக்கு ட்யூன் கொடுக்கும்போதே அதில் Space Hero என்றுதான் இருந்தது. மணி சாரும் இதுவே பாடலின் முதல் வரியாக இருக்கட்டும் என்று கூறினார். அந்த ட்யூனுக்கு விண்வெளி நாயகா என்ற வார்த்தை அழகாக வந்து அமர்ந்தது. பொதுவாக எந்தப் பாடலாக இருந்தாலும் மூன்று பல்லவிகள், மூன்று சரணங்களை நான் கொடுத்துவிடுவேன். ரஹ்மான் - மணிரத்னம் கூட்டணியில் எழுத வேண்டும் என்பது என்னுடைய 25 வருட கனவு. அதன் காரணமாக இந்தப் பாடலுக்கு நான் பல வெர்ஷன்களை எழுதிக்கொண்டே இருந்தேன். மணி சார்தான் ஒருகட்டத்தில் போதும் கார்த்திக் என்று கூறினார். அதன் பிறகுதான் எழுதுவதை நிறுத்தினேன்.

அஞ்சு வண்ண பூவே அனுபவம்: மணிரத்னம் சார் வரிகளை இறுதி செய்த பிறகு ரஹ்மான் சாரை பார்க்க போனோம். விண்வெளி நாயகா வரியை பார்த்தவுடன், என்னை கண்டு இரண்டு புருவங்களை உயர்த்தினார். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஸ்பேஸ் ஹீரோ என்பது அழகாக தமிழிலும், ட்யூனிலும் வந்துவிட்டது என்று நினைத்து சந்தோஷப்பட்டார். அதுவே எனக்கு அவர் கொடுத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அஞ்சு வண்ண பூவே பாடலை தத்தகாரம்தான் ட்யூனில் இருந்தது. முழுக்க முழுக்க உங்கள் ஸ்டைலில் எழுதிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு பூவில் ஐந்து நிறங்கள் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையை அஞ்சு வண்ண பூவே என்று கொஞ்சுவது அழகாகத்தானே இருக்கும்.

அஞ்சு வண்ண பூவே பாடலின் ட்யூனை கொடுக்கும்போது, இது ஒரு தாய்மையின் குரல். ஒரு குழந்தையை பார்த்து பாடுவதாக போலவும் இருக்கலாம் என்று என்னிடம் ரஹ்மான் சொல்லிவிட்டார். அதனையடுத்து என்னுடைய அம்மா என்னை பார்த்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். அதை மையமாக வைத்துதான் அந்தப் பாடலை எழுதினேன். அதனால்தான் ஆடியோ வெளியீட்டு விழாவில் அப்படி சொன்னேன். இந்தப் பாடலின் முதல் ஆப்ஷனே அவருக்கு பிடித்துவிட்டது.

ட்யூனை கேட்டபோது: இந்த இரண்டு பாடல்களுக்கும் நான் எழுத ஆரம்பிக்கும்போது எனக்குள் பெரிதாக பதற்றம் இல்லை. ஆனால் மிகப்பெரிய இடத்திலிருந்து வந்திருக்கும் இந்த வாய்ப்பை எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. அஞ்சு வண்ண பூவே பாடலின் ட்யூனுடைய தத்தகாரத்தை ரஹ்மான் சாரின் குரலில் முதலில் கேட்டவுடன், மடை உடைந்து உள்ளுக்குள் எல்லாமும் ஊத்தியது.என்னையே அறியாமல் அந்த மெட்டுக்குள் என்னென்னம்மோ வார்த்தைகளை போட்டேன். முதலில் அஞ்சு வண்ண பூவே என்ற வார்த்தையை பாடலில் கீழேதான் போட்டிருந்தேன். வரிகளை படித்து பார்த்தபோது அஞ்சு வண்ண பூவேவை முதல் வரியாக வைக்கலாம் என்று மணி சார் ஐடியா கொடுத்தார்.

Lyricist Karthik Netha s Exclusive Interview About Working Experience in Thug Life Movie and A R Rahman

என்ன கற்றுக்கொண்டேன்?: இந்தப் படத்தில் நான் பாடல்கள் எழுதும்போது மணி சாரோ, ரஹ்மான் சாரோ தலையிடவே இல்லை. கட்டுக்கடங்காத சுதந்திரத்தை கொடுத்தார்கள். அதேபோல் எந்த சூழ்நிலை வந்தாலும் இரண்டு பேருமே கலங்காமல், உணர்ச்சிவசப்படாமல் கூலாக கையாள்கிறார்கள் என்பதை அவர்களுடனான இந்த மூன்று முதல் நான்கு மாத பயணத்தில் கற்றுக்கொண்டேன். அதுமட்டுமின்றி ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் அதனால் அவரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் அவர்களிடம் நான் கண்டதே இல்லை. அவர்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். அதேபோல் ஒழுக்கத்தோடு, ஒவ்வொரு நாளும் எப்படி உழைக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.

ஒரு பாடலாசிரியனாக சமூக அக்கறையோடு இயங்க வேண்டும், மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு கூடியிருக்கிறது. 'எனக்கு மிகப்பெரிய வாசலை திறந்துவிட்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக பெரிய பெரிய விஷயங்களை செய்வேன்' என்று மணி சாரிடம் கூறினேன். செய்வேன்" என்று பேசி முடித்தார் கார்த்திக் நேத்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X