நடிகரின் கண்ணீர் கதை: 24 ஆண்டு போராட்டம்.. யார் இந்த ஜோஜு ஜார்ஜ்.. நெஞ்சை உலுக்கிய கண்ணீர் கதை!
சென்னை: மலையாள சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தாலும், அதிக கவனத்தை ஈர்த்தவர் சிவதாஸ் கேரக்டரில் நடித்த ஜோஜு ஜார்ஜ் தான். மலையாள விஜய் சேதுபதி என அழைக்கப்படும் ஜோஜு ஜார்ஜ் சமீப காலமாக பேசப்படும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார். தினமும் 50 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல், தேசிய விருது வரை, ஜோஜு ஜார்ஜ் கடந்து வந்த பயணம் மிகவும் வலி நிறைந்தது. அவர் கடந்து வந்த வெற்றி பயணத்தை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
1977 ஆம் ஆண்டு திருச்சூர் பகுதியில் உள்ள குருசூரில் உள்ள ஸ்ரீ முருகா டாக்கீசில் இருந்து தொடங்கியது ஜோஜு ஜார்ஜின் சினிமா கனவு. அப்பாவின் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வகுப்பை கட்டு அடித்துவிட்டு படத்திற்கு செல்வதை வழக்கமாகக் வைத்திருந்த ஜோஜு ஜார்ஜ், என்ற சிறுவனுக்கு சினிமா மீது தீராத காதல் இருந்தது. பரீட்சை எழுதி நல்ல மார்க்கு வாங்கி, நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதற்கு பதில், சினிமா நடிகராக வேண்டும் என்பதை ஜார்ஜின் உச்சபட்ச கனவாக இருந்தது.


ஜோஜு ஜார்ஜ்: 90காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், மிமிக்ரி தெரிந்து இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த நேரத்தில் நடிகர் கலாபவன் மணி குழு கேரளாவை வியக்கவைத்துக்கொண்டு இருந்தது. இந்த குழுவில் இருந்த பலரும் தங்களது மிமிக்ரி கலையால் சினிமாவின் கதவை திறக்கப்பட்டது. அதே பாணியின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்துவிடலாம் என நினைத்த ஜோஜு ஜார்ஜ், கலாபவன் குழுவில் சேர பல முயற்சி செய்தார். ஆனால், அதற்கு ஏற்ப குரல் வளம் இல்லாததால் அந்த குழுவில் அவரால் சேர முடியாமல் போனது. அப்போதும், மனம் தளராமல் இருந்த ஜோஜு ஜார்ஜிக்கு சினிமாவில் முகம் காண்பிக்க முதல் வாய்ப்பு வந்தது. 'மழவி கூடாரம்' என்ற படத்தின் படப்பிடிப்பு நாளிலேயே கல்லூரி தேர்வும் நடந்தது. தேர்வை விட தன்னுடைய கனவு தான் பெரிது என நினைத்த ஜார்ஜ், திரையில் முகம் காண்பிக்கும் முதல் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அந்த படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக வசனம் எதுவும் இல்லாமல் சிறிது நேரம் நின்று செல்லும் கதாபாத்திரம் தான் என்றாலும், இது ஒரு சிறிய தொடக்கமாக இருக்கும் என்று கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் ஜோஜு ஜார்ஜ்.
வாய்ப்பு கிடைக்கவில்லை: இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் வசனம் பேசும் அளவிற்கு எந்த இயக்குனரும் இவருக்கு வாய்ப்பு தரவில்லை. இடையில் பெற்றோர்கள் வற்புறுத்தியதால், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்ந்தார். இதற்கான ட்ரைனிங்கிற்காக இரண்டு மாதம் கோவா செல்ல வேண்டி இருந்தது. தனது லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற போது கோவாவுக்கு செல்லும் ரயிலுக்கு பதிலாக தென்னிந்திய சினிமாவின் தாயகமாக விளங்கிய சென்னை செல்லும் ரயிலில் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஏறிவிட்டார். சென்னை வந்த அவர் இரண்டு மாதம் அலைந்து திரிந்தும் வாய்ப்பு வராததால், மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கிடைத்த சின்ன வேடத்தில் நடித்து வந்தார்.


பயத்தால் சொதப்பினார்: பல போராட்டத்திற்கு பின் 'தாதா சாகேப்' என்ற படத்தில் முதன் முதலில் வசனம் பேசு வாய்ப்பு கிடைத்தும், பயம் காரணமாக அதில் சொதப்பி இருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். அதன் வாழ்க்கையில் சந்தித்த பல அவமானத்தையும் வலியையும் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த ஜோஜு ஜார்ஜிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என, மனதத்துவ மருத்துவரிடம் குடும்பத்தின் அழைந்து செல்லும் அளவிற்கு நடிப்பின் மீது தீராத காதலாக இருந்தார். அந்த நேரத்தில் தான் ஜோஜு ஜார்ஜ், 'பெஸ்ட் ஆக்டர்' என்ற திரைப்படத்தில் நடித்தார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், இவரின் கதாபாத்திரம் பேசப்பட்டது.
சரியான பதிலடி: அதன்பின்பு தான் ஜோஜு ஜார்ஜூக்கு மம்முட்டியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரின் சினிமா ஆசையை தெரிந்த கொண்ட மம்முட்டி, தன்னுடைய அனைத்து படத்திலும், இவருக்கு என்று ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து ஜார்ஜை வளர்ந்துவிட்டார். கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக ஜுனியர் நடிகராக 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்த ஜோஜு ஜார்ஜ், முதன் முறையாக ஜோசப் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது, கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இவனுக்கு நடிக்க தெரியாது என அவமானப்படுத்தியவர்களுக்கு விருதின் மூலம் சரியான பதிலடி கொடுத்தார்.
24 ஆண்டு போராட்டம்: தற்போது ஜோஜு ஜார்ஜ் மலையான சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், இயக்குநராகவும் இருக்கிறார். இவரே இயக்கி நடித்த 'பணி' என்ற படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஜோஜு ஜார்ஜ் மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படமான ரெட்ரோ, தக் லைஃப் திரைப்படத்திலும் ஒரு நல்ல ரோலில் நடித்துள்ளார். திரையில் முகத்தை காட்டினால் போதும் என நினைத்த ஜோஜு ஜார்ஜ், சினிமாவில் நினைத்த இடத்தை அடைய கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் பல வலிகளை கடத்து போராடி இறுதியில் ஜெயித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











