ஜூரத்தைத் துரத்திய மல்லிகா கபூர்!
கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து, புலி வருது பட யூனிட்டை அசத்தி விட்டாராம்.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படம் மூலம் அறிமுகமான மல்லி கபூர், வாத்தியார் படத்தில் படு கிளாமராக நடித்து பரவசப்படுத்தினார். தற்போது புலி வருது படத்தில் ஜித்தன் ரமேஷுக்குச் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மல்லிகா கபூர்.ஜி.வி.குமார் படத்தை இயக்குகிறார். பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. அங்கு கன மழை பெய்ததால், யூனிட்டில் பலருக்கு வைரஸ் காய்ச்சல் வந்து விட்டதாம்.
ரமேஷ், மல்லிகாவுக்கும் கூட காய்ச்சலாம். ஒவ்வொருவரையும் கிளினிக்குக்குக் கூட்டிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு டாக்டரையே ஸ்பாட்டுக்கு வரவழைத்து அவ்வப்போது மருந்து, மாத்திரை கொடுத்து நடிக்க வைத்துள்ளனர்.
படிப்படிப்பை வேகமாக நடத்தி முடித்து ஊரைப் பார்க்க போக வேண்டும் என்று தீர்மானித்து வேகமாக நடந்தது ஷூட்டிங். இதனால் இரவு, பகல் பாராமல் அனைவரும் நடித்துக் கொடுத்தனர்.
காய்ச்சலோடு, இரவு பகலாக நடித்ததால் மல்லிகா கபூருக்கு மயக்கம் வந்து விட்டதாம். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸும் ஏற்றினர். பின்னர் உடல் நலம் ஓரளவுக்கு சரியானதால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அடுத்த நாளே படப்பிடிப்புக்கு வந்து விட்டாராம் மல்லிகா. காய்ச்சலை விரட்டியடித்து விட்டு ஷூட்டிஙகுக்கு வந்த மல்லிகா கபூரின் தொழில் பக்தியைப் பார்த்து புலி வருது யூனிட்டுக்குப் புல்லரித்துப் போய் விட்டதாம்.
ஹீரோ ரமேஷ் உட்பட அனைவரும் மல்லிகாவைப் பாராட்டி விட்டார்களாம். தொடர்ந்து படப்பிடிப்பு படு வேகமாக நடந்ததாம்.
படப்பிடிப்பிலிருந்து பாதியில் ஓடிய நிலாவைப் போல் இல்லாமல், இப்படி எல்லா நடிகர், நடிகையரும் ஓடி ஓடி நடித்துக் கொடுத்தால், எந்தத் தயாரிப்பாளரும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு ஓட வேண்டிய நிலை வராது!


Click it and Unblock the Notifications











