சசி தரூர் படத்தில் மம்முட்டி
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் எழுதிய கதையில் உருவாகும் ஆங்கிலப் படத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்கவுள்ளார்.
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன். இவரது ராஜதந்திர அணுகுமுறையும், திறமையும் நமது நாடு மட்டுமல்ல, உலகும் அறிந்தவை.வி.கே.கே.மேனன் என்று அழைக்கப்பட்ட மேனனின் வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாகிறது. இவரது கதையை சசி தரூர் எழுதியுள்ளார். அவருடன் இணைந்து முன்னாள் இந்தியத் தூதர் டி.பி.சீனிவாசனும் கதை எழுதுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
இந்தக் கதைதான் இப்போது ஆங்கிலத்தில் படமாகிறது. ரூ. 8 கோடி செலவில் இந்தப் படத்தை எடுக்கவுள்ளனர். மம்முட்டி, மேனன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
மம்முட்டி ஆங்கிலத்தில் நடிக்கவுள்ள மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு அம்பேத்கர் படத்தில் நடித்தார். தற்போது தி லேட் நைட் பெக்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேனன் படம் குறித்து சசி தரூர் கூறுகையில், இப்படத்தின் கதையை நான் மட்டும் எழுதவில்லை. பல புகழ் பெற்ற எழுத்தாளர்களும் இந்தக் கதையின் ஆக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
செப்டம்பருக்குள் கதையை முடித்து விடுவோம் என நம்புகிறேன். அதன் பின்னர் ஷூட்டிங் தொடங்கும். படத்தை முடிக்க ஒரு வருடம் ஆகும் என நினைக்கிறேன். சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்திலேயே கூட படப்பிடிப்பு தொடங்கலாம்.
மம்முட்டி தவிர நசிருதீன் ஷாவும் படத்தில் உள்ளார். தேசிய விருது பெற்ற சரத் படத்தை இயக்குகிறார்.
காஷ்மீர் பிரச்சினை குறித்து ஐ.நா. சபையில் முதன் முதலாக மேனன் பேசியதன் 50வது ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதையொட்டி மேனன் குறித்த படம் உருவாவது சாலப் பொருத்தமாகும்.


Click it and Unblock the Notifications











