மாட்லாடு மாட்லாடு மம்முட்டி!
மலையாள மகா ஸ்டார் மம்முட்டி நடித்துள்ள பிக் பீ என்ற படம் தெலுங்கில் டப் செய்யப்படவுள்ளது.
மலையாளத்தில் மம்முட்டி, மனோஜ் கே.ஜெயன், மம்தா மோகன் தாஸ், நபீஸா அலி, மானஸா, சுமித் நாவல் ஆகியோர் நடித்து பெரும் ஹிட் ஆன படம் பிக் பீ. படம் வெளியான இரண்டே வாரங்களில் சூப்பர் ஹிட் பட வரிசையில் சேர்ந்து விட்டது பிக் பீ.தற்போது இப்படத்தை தெலுங்குக்கு கொண்டு போகிறார்கள்.
மலையாளத் திரையுலகினர் இதுவரை கண்டிராத விலைக்கு பிக் பீ படத்தின் டப்பிங் உரிமை விற்றுள்ளதாம். மம்முட்டிக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் இருப்பதால்தான் இந்த அளவுக்கு விலை கிடைத்ததாம்.
முன்பு மம்முட்டி நடித்த சாம்ராஜ்யம் படத்தின் தெலுங்கு டப்பிங் ஆந்திராவில் 100 நாள் ஓடி சாதனை படைத்தது. இதையடுத்து பிக் பீ படத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதன் காரணமாகவே அதிக விலைக்கு அப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை விற்றுள்ளது.
தற்போது மம்முட்டி நடித்து வரும் நஸ்ரனி படத்தின் டப்பிங் உரிமையையும் வாங்க தெலுங்குத் தயாரிப்பாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications