மஞ்சுளா: எம்ஜிஆர், சிவாஜி படங்களின் கனவுக் கன்னி...!
இன்று சென்னையில் மரணமடைந்த நடிகை மஞ்சுளா, எம்ஜிஆர், சிவாஜி படங்களில் அதிகமாக நடித்தவர்.
மக்கள் திலகம் எம்ஜிஆரால் ரிக்ஷாக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஞ்சுளாவுக்கு அன்றைய நாளில் பட்டப் பெயரே கனவுக் கன்னிதான்.
இப்படி ஒரு பட்டத்துடன் அறிமுகமான நடிகை அநேகமாக இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

ரிக்ஷாக்காரனுக்கு முன்பே
உண்மையில் மஞ்சுளா அறிமுகமானது சாந்தி நிலையம் என்ற படத்தில்தான். அடுத்து ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்தார். ஆனால் முறையான அறிமுகம் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் மூலம்தான் கிடைத்தது. முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகிவிட்ட மஞ்சுளாவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதே நேரம் எம்ஜிஆருக்கு பொருத்தமான நாயகிகளுள் ஒருவராகவும் திகழ்ந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன்
தொடர்ந்து எம்ஜிஆருடன் இதய வீணை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்தார் மஞ்சுளா. வசூலிலும் தரத்திலும் நிகரற்ற படமாகக் கருதப்படும் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மூவரில் ஒரு நாயகியாக நடித்தார். நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடல் இவரைப் பார்த்துப் பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

சிவாஜியுடன்...
எம்ஜிஆரின் கதாநாயகி என அறியப்பட்டாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் அதிகப் படங்களில் நடித்தவர் மஞ்சுளா. மன்னவன் வந்தானடி, அன்பே ஆருயிரே, உத்தமன், டாக்டர் சிவா, எங்கள் தங்க ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

முத்துராமன்
எம்ஜிஆர், சிவாஜி தவிர முத்துராமன், விஜயகுமார் உள்பட பல நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார் மஞ்சுளா. ரஜினியுடன் சங்கர் சலீம் சைமன் படத்தில் முதல் முதலில் நடித்தார். அடுத்து குப்பத்து ராஜாவிலும் நடித்தார். ஆனால் அதில் விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தெலுங்குப் படங்களிலும்...
தமிழுக்கு இணையாக தெலுங்குப் படங்களிலும் நடித்தார் மஞ்சுளா. கிருஷ்ணா, நாகேஸ்வரரராவ், ராமாராவ், சோபன் பாபு ஆகியோருடனும் நடித்துள்ளார். எழுபதுகளில் தொடர்ந்து அதிக தெலுங்குப் படங்களில் நடித்தவர் மஞ்சுளா. அந்தக் கால கட்டத்தில் தமிழை விட அதிகமாக தெலுங்கில்தான் அவர் நடித்துள்ளார்.

எண்பதுகளுக்குப் பிறகு...
எண்பதுகளில் அவர் நடிப்பிலிருந்து ஒதுங்கினார். ஆனாலும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் குணச்சித்திர, காமெடி பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். சேரன் பாண்டியன், நாம் இருவர் நமக்கு இருவர் உள்பட பல தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.

விஜயகுமாருடன்...
விஜயகுமாருடன் உன்னிடம் மயங்குகிறேன் படத்தில் நடித்த போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது. அப்போது விஜயகுமார் ஏற்கெனவே முத்துக்கண்ணு என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருந்தார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என மூன்று பெண்கள். மூவருமே சினிமாவில் நடித்து பின் திருமணம் செய்து செட்டிலாகிவிட்டனர்.

சினிமாவில் எல்லோருக்கும் நண்பர்
விஜயகுமாருக்கும் சரி, அவர் மனைவி மஞ்சுளாவுக்கும் சரி, தென் இந்திய மொழிப் படங்களில் அனைவரும் நண்பர்களே. இவரது வீட்டு விருந்தில் பங்கேற்காத முன்னணி நட்சத்திரங்கள் அநேகமாக யாருமே இருக்க மாட்டார்கள் எனலாம். நடிகர் சங்கத்தில் விஜயகுமார், மஞ்சுளா இருவருமே சில ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளனர்.
எழுபதுகள் தொடங்கி, இப்போது அறிமுகமான தென்மொழி நடிகைகள் அனைவருமே அவருக்கு மிக நெருக்கமான தோழிகளாக இருந்தனர்.


Click it and Unblock the Notifications











