twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆண்டுக்கணக்கில் ஓடிய ஆட்டப்படம் - கரகாட்டக்காரன்

    By Ka Magideswaran
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    கரகாட்டக்காரனைப் பற்றி நாம் கட்டாயம் பேசியாக வேண்டும். ஒரு திரைப்படம் எல்லாத் தரப்பு மக்களாலும் எப்படியெல்லாம் கொண்டாடப்படும் என்பதற்குக் கரகாட்டக்காரனே சிறந்த எடுத்துக்காட்டு. தற்காலத்திலும்கூட ஏதேனுமொரு தொலைகாட்சி வாய்க்காலில் கரகாட்டக்காரன் ஒளிபரப்பாகிறது. மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். திட்டுமிட்டு இறுக்கிப்பிடித்து இழைத்து இழைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களைக் காட்டிலும் இயல்பான கதையை வைத்துக்கொண்டு வழமையாக எடுக்கப்பட்ட கரகாட்டக்காரன் பட்டிதொட்டியெங்கும் நில்லாமல் தொடர்ந்தோடியது. இன்றைக்குவரை கரகாட்டக்காரன் நிகழ்த்திய பல சாதனைகளை எப்படமும் முறியடித்ததாகத் தெரியவில்லை.

    mega hit movie karakattakkaran

    எம்மூர் டைமண்டு திரையங்கத்தில் கரகாட்டக்காரன் வெளியானது. அப்போது ஒன்பது முடித்து பத்தாம் வகுப்புக்குச் செல்லத்தொடங்கியிருந்தேன். டைமண்டு திரையரங்கில் வெளியாகும் படமென்றால் அது ஓடுமா ஓடாதா என்று எளிமையாகக் கணித்துவிடலாம். அத்திரையரங்கம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருக்கிறது. பேருந்து நிலையத்திற்கும் திரையரங்குக்கும் நடுவில் சம்மனை ஆறு என்னும் நொய்யலின் துணையாறு ஓடிக்கொண்டிருக்கும். ஆற்றில் இடப்பட்டிருக்கும் கற்களின்மீது ஒவ்வோர் அடியாகக் கால்வைத்துக் கடக்க வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்து சம்மனை ஆற்றைக் கடக்கும் ஒற்றைவழிக் குறுக்குத் தடத்தில் செல்லும் கூட்டம் டைமண்டு திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் வெற்றியைக் குறிப்பதாகும். நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பேருந்து பிடித்துப் படம்பார்க்க வருகின்றவர்களுக்கு டைமண்டு திரையரங்கம்தான் அடைவதற்கு அருகில் இருப்பது.

    பள்ளிச் சிறுவனான எனக்கு 'கரகாட்டக்காரன்’ வெளியான புதிதில் எவ்வித ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், சம்மனை ஆற்றைக் கடக்கும் கூட்ட நெரிசல் நாட்பட நாட்பட கூடிக்கொண்டே போனது. ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியூர் கிளம்பிச் செல்வதற்குப் பேருந்து நிலையம் வந்த நானும் என் உறவினரும் எங்கள் பயணத்தைக் கைவிட்டு கரகாட்டக்காரன் பார்ப்பதற்குச் சென்றுவிட்டோம். டைமண்டு திரையரங்கின் முழுக்கொள்ளளவுக் கூட்டத்திடையே தொடர்ச்சியான கூச்சல்களோடு அப்படத்தைப் பார்த்தேன். கூட்டத்தின் இடையூறு என்பதால் முதன்முறை பார்த்தபோது கரகாட்டக்காரனின் சிறப்பு எனக்குப் பிடிபடவில்லை.

    mega hit movie karakattakkaran

    ஊரெங்கும் கரகாட்டக்காரனின் பாடல்கள் ஒலித்தன. தொடக்கத்தில் கேட்கும்போது எளிமையாக இருந்த அப்பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கையில் தேனாக இனித்தன. நாற்பதாம் நாள், ஐம்பதாம் நாள் என்று சுவரொட்டிகள் நகரெங்கும் தோன்றின. டைமண்டு திரையரங்கம் உள்ள சாலையில் செல்லவே முடியவில்லை. படம்விடுகின்ற நேரம் என்றால் நாங்கள் அத்திரையரங்கச் சாலையைத் தவிர்த்துவிட்டுச் சுற்றிச் செல்வோம். இதெல்லாம் மனப்பழக்கமாகி இருந்தது. தென்னம்பாளையம் சந்தைப் பேட்டையருகே இருபதடி நீளத்திற்கு கரகாட்டக்காரனின் வெற்றிச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதழ்களில் இராமராஜனைப் பற்றிய துணுக்குகள் நேர்காணல்கள் முன்னிலை பெற்றன.

    அதற்கடுத்து ஆறேழு திங்கள்கள் கழித்து கரகாட்டக்காரனை வீட்டருகில் இருக்கும் மண்தரை மர இருக்கைக் கொட்டகையில் அரங்கு கொள்ளாத கூட்டத்தோடு பார்த்தேன். படத்தின் முதற்சட்டகத்திலிருந்து இறுதிச் சட்டம்வரை அலுப்போ சலிப்போ இல்லை. படம் தொடங்கியதும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. அப்படி என்னையே மறந்து பார்க்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் மூன்றே மூன்றுதாம். முந்தானை முடிச்சு, வருசம் 16, கரகாட்டக்காரன்.

    mega hit movie karakattakkaran

    கிராமத்துக்குள் புதிதாக வருகின்ற ஒருவர், ஒரு குழு, ஓர் அறிவியல் கருவி, ஓர் இடர்ப்பாடு, ஒரு மாற்றம் என்பது என்றென்றைக்கும் வெற்றி தருகின்ற வாய்பாடு. வெற்றி பெற்ற கிராமப் படங்கள் பலவற்றையும் எண்ணிப் பாருங்கள். கதைப்படி அக்கிராமத்திற்குள் புதிதாக ஒன்று வரும். அல்லது ஒருவரோ பலரோ வருவர். அதன்வழியே ஏற்படும் மோதலும் முரணுமே அப்படத்தின் கதையாக இருக்கும். கரகாட்டக்காரனின் கதையும் அந்த வாய்பாட்டின்படி அமைந்ததுதான். கிராமத்துக்குக் கரகாட்டம் ஆட வரும் ஒரு குழுத் தலைவனுக்கும் உள்ளூர்க் குழுவைச் சேர்ந்த பெண்ணுக்குமான காதல்தான் கதைப்பொருள். ஒரு குழுவாக வருபவர்கள் என்னும்போதே கதைக்கு வேண்டியவர்கள் கிடைத்துவிடுகிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு சின்ன சின்ன நகைச்சுவை நிகழ்ச்சிகளைக் கோத்துச் செல்வதன்வழியே பெரும்பகுதிக் காட்சிகள் கிடைத்துவிடுகின்றன. இதற்கிடையே ஆட்டக்காரர்களின் வாழ்க்கை முறையையொட்டிய காதல் தோன்றல், காதற்படுதல், பிரிவுழல்தல். அந்நகர்ச்சியிடையே உரையாடல் வழியாகவே கூறப்படும் சிறு பின்கதை. இறுதியில் எல்லாத் தடைகளையும் தாண்டி வெல்லும் உண்மைக்காதல்.

    இராமராஜன் என்னும் நடிகர் ஆட்டத்தில் வல்லவரல்லர். ஆனால், அவரைக் கரகாட்டக்காரனாகக் காட்டியது யாரையுமே உறுத்தவில்லை. அவருடைய ஆட்டத்திலும் நமக்குக் குறை தோன்றவில்லை. பாடத் தெரியாத நடிகரைப் பாடுவதுபோல் காட்டிவிடலாம். அதுபோல் எளிதில்லை ஆடத்தெரியாத நடிகரை ஆட வைப்பது. கரகாட்டக்காரனில் அது நடந்தது. படத்தின் காதற்காட்சிகளை ஈர்ப்பாக்குவதற்குப் புதுமுக நாயகி. “துண்டோட இன்னொன்னையும் விட்டுட்டுப் போய்ட்டேன்… அதை எடுத்து வெச்சிருக்கீங்களா ? என் மனசத்தான் விட்டுட்டுப் போனேன்…” என்ரு முத்தையன் சொல்கையில் காமாட்சி வெட்கத்தோடு கூறுவது : “ஒரு மனசைக் கண்டுபிடிக்கணும்னா அது இன்னொரு மனசாலதான் முடியும்… அப்படிக் கண்டுபிடிக்கறதுக்கு என் மனசு என்கிட்ட இல்ல… அது உங்ககிட்டதான் இருக்கு…!” பின்னணியில் புல்லாங்குழல் இசையோடு வந்த அந்தக் காட்சி காதற்சுவையோடு இருந்தது.

    mega hit movie karakattakkaran

    கரகாட்டக்காரனால் அதன் நாயகன் முதனிலைக்கு அருகில் வந்தார். நாயகிக்குப் பத்துப் படங்கள் கிடைத்தன. கவுண்டமணியும் செந்திலும் அடுத்த ஐந்தாறு ஆண்டுகளுக்குத் தவிர்க்க முடியாதவர்கள் ஆனார்கள். கங்கை அமரனுக்கும் பெயர் கிடைத்தது. இளையராஜாவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அந்தப் படத்தின் விளைச்சல் அவருடைய மேதைமையால் வந்ததுதான். ஆனால், அந்தப் படத்தின் முதலாளிகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் ? என்ன ஆனார்கள் ? அடுத்ததாய் என்னென்ன படங்களை எடுத்தார்கள் ? கரகாட்டக்காரன் ஓடிய ஓட்டத்திற்கு அப்படத்தின் முதலாளிகள் இன்னொரு தேவராகவோ, தாணுவாகவோ ஆகியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் காலத்தின் இருட்டறைக்குள் களமின்றி ஒதுங்கிவிட்டார்கள். திரையுலகின் இந்தக் காரிருள்தான் என்னைச் சோர்வுக்குள்ளாக்குகிறது.

    படத்தின் தொடக்கத்தில் கங்கை அமரனே நேரில் தோன்றி இளையராஜாவுக்கு மாலையிட்டு “அண்ணே… இவரு கருமாரு கந்தசாமி… இவரு துரை சாரு… இரண்டு பேரும் சேர்ந்து கரகாட்டக்காரன்னு ஒரு படம் எடுக்கறாங்க…” என்று அறிமுகப்படுத்துகிறார். கரகாட்டக்காரனுக்குப் பிறகு சில படங்களைத் தயாரித்த கருமாரி கந்தசாமி இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் இறந்துவிட்டார். அவருடைய பங்காளி துரையைப் பற்றிய செய்திகள் எதுவுமில்லை.

    ஏறத்தாழ இருபத்தெட்டு முதல் முப்பது இலட்சங்கள் செலவில் உருவாக்கப்பட்ட கரகாட்டக்காரன் ஈட்டிய தொகை எவ்வளவு ? இதற்குக் கணக்கு வழக்கே இல்லை. நாமே கணக்கிடுவோம். ஏறத்தாழ ஐந்நூற்றுவர் ஒரு காட்சியைக் கண்டார்கள் எனக்கொள்வோம். தலைக்கு மூன்று உரூபாய் என்று கொண்டாலும்கூட காட்சிக்கு ஆயிரத்து ஐந்நூறு உரூபாய் ஈட்டியது அப்படம். நான்கு காட்சிகளுக்கு ஆறாயிரம் உரூபாய். தமிழ்நாடெங்கும் அறுபது திரையரங்கம் என்றால் நாள்தோறும் மூன்று இலட்சம். பத்து நாள்களில் முப்பது இலட்சம். நூறுநாள்களுக்கான ஈட்டல் மூன்றுகோடி உரூபாய். அடுத்த பத்தாண்டுகளுக்கும் இப்படம் தொடர்ந்து அங்கங்கே ஓடிக்கொண்டிருந்தது. அவ்வகையில் இன்னொரு மூன்றுகோடி ஈட்டியிருக்கும். ஆக, முப்பதாண்டுகளுக்கு முன்னர் ஆறு கோடிகளை ஈட்டிய வெற்றிப்படம் கரகாட்டக்காரன்.

    அவ்வளவு பணத்தை ஈட்டிய முதலாளிக்கு அப்பணம் நிலைத்ததாகக் கூற முடியவில்லை. அப்படம் ஓடிய அரங்குகள் இன்று பாழடைந்துவிட்டன. படத்தில் இடம்பெற்ற காந்திமதி, சண்முகசுந்தரம் போன்ற கலைஞர்கள் பலர் இன்றில்லை. மீதமுள்ளவர்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். ஆனால், கரகாட்டக்காரனைப் பார்ப்பதற்கு இப்போதும் மக்கள் இருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலில் நிற்கும் ஏதோ ஒரு வண்டி “மாங்குயிலே பூங்குயிலே” என்கிறது. பண்பலைகளில் இரவு நேரத்தில் “குடகுமலைக் காற்று” வருகிறது. சேந்தம்பட்டி முத்தையனும் காமாட்சியும் நம் நினைவை விட்டு என்றும் அகலமாட்டார்கள். வெகுமக்களுக்கான கலையால் வாழ்வது என்பது இதுதான்.

    English summary
    Special Article about the mega hit tamil movie karakattakkaran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X