twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பின்வாங்கினார் தாக்கரே... மை நேம் ஈஸ் கான் வெற்றிகரமாக வெளியானது!

    By Staff
    |

    My Name is Khan
    தடைகள் பல கடந்து ஒரு வழியாக ரிலீசாகிவிட்டது ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான்.

    நேற்று காலைக் காட்சி வரை இந்தப் படத்தை திரையிட பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள், மல்டி பிளெக்ஸ் அதிபர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

    3 மல்டி பிளெக்ஸ்களில் மட்டுமே முதலில் திரையிடப்பட்டது. ஆனால் பின்னர் ட்விட்டரில் ஷாரூக் கான் வருத்தம் தெரிவித்ததாக செய்தி பரவ, சிவசேனாவின் ஆர்ப்பாட்டம் குறையத் தொடங்கியது ('மும்பை மக்களுக்கு நேர்ந்துள்ள சிரமத்துக்கா வருந்துகிறேன்').

    ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தபடி பிற்பகல் காட்சிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இன்று மும்பையின் பெரும்பாலான திரையரங்குகளில் மை நேம் ஈஸ் கான் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் குறித்த விமர்சனங்களும் மிகவும் சாதகமாக வந்துள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

    இந்நிலையில் போராட்டத்தை முழுமையாக விலக்கிக் கொள்வதைப் போன்ற ஒரு அறிக்கையை பால் தாக்கரே வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட சிவசேனைத் தொண்டர்களை மகாராஷ்ட்ர அரசு கைது செய்திருப்பதாலும், அரசு முழுமையாக ஷாரூக்கானுக்கு ஆதரவு காட்டுவதாலும் அவர் இந்த அறிக்கையுடன் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

    "பாகிஸ்தானை நேசிக்கும் நடிகர் ஷாரூக் கானை நேசிப்பவர்கள் அவருடைய திரைப்படத்தை தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அவரது அறிக்கை:

    பாகிஸ்தானை நேசிக்கும் நடிகர் ஷாருக் கானை நேசிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் அவருடைய திரைப்படத்தைத் திரையிட்டுக் கொள்ளட்டும்; ஷாருக் கானின் பாகிஸ்தான் ஆதரவு கருத்தைத்தான் எதிர்த்தேனே தவிர அவருடைய திரைப்படத்தை எதிர்க்கவில்லை; எங்களுடைய போராட்டம் முழு வெற்றி அடைந்தது.

    இந்திய பிரீமியர் லீகில் பாகிஸ்தானியர் இடம் பெறவில்லையே என்று ஷாருக் கான் வருந்தியதைத்தான் கண்டித்தேன்.

    ஷாருக் கானை நாங்கள் எதிர்த்ததற்கு ஒரே காரணம் எங்களுடைய தேச பக்திதான்; தேசபக்தியோடு இருப்பது பெரிய குற்றம் என்றால் நாங்கள் இந்தக் குற்றத்தை அடிக்கடி செய்து கொண்டே இருப்போம்.

    ஒரு கானுக்காக மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவாண் எப்படியெல்லாம் வளைந்தும் நெளிந்தும் காரியம் செய்தார் என்பதை இந்த உலகமே கடந்த சில நாள்களாக வேடிக்கை பார்த்தது. இந்த ஒரு திரைப்படம் ஓடாவிட்டால் மக்களுக்கு விடிவுகாலமே இருக்காது என்பதைப் போல மாநில அரசு நிர்வாக இயந்திரம் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டது.

    காங்கிரஸ் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என்று எல்லோரும் டிக்கெட் வாங்கியும் கூட திரை அரங்குகள் நிரம்பவில்லை, மாறாக மும்பையிலும் மகாராஷ்டிரத்திலும் சிறைகள்தான் சிவசேனைத் தொண்டர்களால் நிரம்பி வழிந்தன.

    இந்த திரைப்படம் திரையிட்டே தீரப்பட வேண்டும் என்பதற்காக சிவசேனைத் தொண்டர்களை ரத்தம் சொட்டச்சொட்ட போலீஸார் தடியால் அடித்தார்கள், கைவலித்து ஓயும்வரை உதைத்துத் தள்ளினார்கள் என்று தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார் பால் தாக்கரே.

    ஷாரூக்கான் அலுவலகம் மீது தாக்குதல்:

    இந் நிலையி்ல் ஷாரூக் கானின் மும்பை அலுவலகம் மீது சிவசேனா தொண்டர்கள் சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தினர்.

    நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான சினிமா பட அலுவலகம் மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று சிவசேனா தொண்டர்கள் திரண்டு சென்று மை நேம் இஸ் கான் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஷாருக் கானையும் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். திடீரென்று அவர்கள் அலுவலகத்தை தாக்கினார்கள். கூட்டத்திலிருந்து ஒருவர் ஷாருக்கான் அலுவலகம் மீது சோடா பாட்டில் வீசினர்.

    உடனே போலீசார் வந்து அவர்களை விரட்டியடித்தனர். இதில் யாருக்கும் காயம் இல்லை. அலுவலகத்துக்கும் சேதம் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    இன்னும் சில இடங்களில் மை நேம் ஈஸ் கான் பேனர்கள் மீது கல்லெறிந்தனர். ஆனால் போலீஸ் வந்ததைப் பார்த்ததும் தப்பி ஓடினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X