For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அம்மா வேடமிட்டவர்கள்!

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  என்றும் மாறாத குணச்சித்திரங்கள் சில நம் திரைப்படங்களில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. எண்பதாண்டுகளுக்கு முன்பு வந்த படமானாலும் சரி, கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான படமானாலும் சரி, அந்தக் குணச்சித்திரம் கட்டாயம் இருக்கும். முதற்படத்தில் இருந்ததற்கும் இன்றுள்ளதற்கும் அதன் குணவார்ப்பில் பெரிதாய் வேறுபாடு இராது. தொடந்து அத்தகைய குணச்சித்திரங்களைப் பார்த்துக்கொண்டே வருகிறோம். நாம் ஒவ்வொரு படத்திலும் ஒரே குணப்பாங்கினைத் தொடர்ந்து காண்கின்றோமே என்று நமக்கும் தோன்றாது. அதுதான் அம்மா வேடம்.

  எல்லாப் படங்களிலும் தவறாமல் இடம்பெறும் குணச்சித்திரம் அது. நாயகனுக்கோ நாயகிக்கோ அம்மாப் பாத்திரம் கட்டாயம். அவர்களின் குணநலன்களும் ஒன்றாகவே இருக்கும். நம் வாழ்வில் அம்மா என்னும் ஓர் உறவு எப்படி அலுப்பதில்லையோ அவ்வாறே திரைப்படங்கள்தோறும் காட்டப்படும் அந்த அம்மாப் பாத்திரமும் அலுப்பதே இல்லை. மாற்றி மாற்றி ஒன்றுபோலவே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்தச் சித்தரிப்பிலுள்ள தொடர்ச்சியான ஒற்றுமையில் குறையே தெரியவில்லை. அம்மா என்றால் அவர் கதைகளில் வந்தாலும் நமக்கு அம்மாதான்.

  கறுப்பு வெள்ளைக் காலங்களின் நாமறிந்த முதல் அம்மா கண்ணாம்பாள்தான். மனோகராவில் மகனுக்குக் கட்டளையிட்ட அந்தத் தாய்மையுருவை மறக்க முடியாது. தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடித்தவரான கண்ணாம்பா நாயகி நிலையிலிருந்து அம்மாப் பாத்திரங்களுக்கு வந்தவர். இளமையில் நாயகி வேடமிட்டவர்கள் பிற்காலத்தில் அம்மாப் பாத்திரங்களை ஏற்கின்ற அந்த வாய்பாடு கண்ணாம்பா தொடங்கி வைத்ததாகத்தான் இருக்க வேண்டும். கண்ணாம்பாள் அறுபதுகளில் இறந்துவிட்டார்.

  தமிழ்த் திரைப்படங்களில் தொண்ணூறு விழுக்காடு நாயகனை மையப்படுத்திய கதைகளே. நாயகனின் கதை என்னும்போதே அவருடைய உறவுகளையும் படத்தில் காட்டியாக வேண்டியது கட்டாயமாகிறது. நாயகனின் எதிர்நிலை உறவாடலாக காதலி, மனைவி, மாமன், மச்சினன், அண்ணன், தம்பி, சித்தப்பன் முறையினர் என எவரையும் காட்டிவிட முடியும். எங்க வீட்டுப் பிள்ளையில் தாய்மாமன்தான் கெடுமதியன். ராஜபார்ட் இரங்கதுரையில் சொந்தத் தம்பியே அழவைப்பவன். இவ்வாறு நாயகக் கதைகளில் எவ்வுறவையும் எதிர்நிலையில் வைத்து கதையை நகர்த்தலாம். ஆனால், தாய் என்னும் உறவை நாயக நிலைக்கு எதிரில் நிறுத்தவே முடியாது. அதனால்தான் நாயகனுக்குத் தாயாக நடித்த எல்லா நடிகைகளும் நாயகனின் நற்பெயரோடு பார்க்கப்பட்டார்கள். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு எம்ஜிஆர் படங்களில் அவர்க்கு அம்மாவாக நடித்தவர்கள். எம்ஜிஆர் திரைப்படங்களில் அம்மாவாக நடித்தவர்களைப் பற்றியே தனிக்கட்டுரை எழுதலாம். தம் படங்களின் முதல்நாள் முதற்காட்சியே "அம்மா வெற்றி... அம்மா வெற்றி..." என்று துள்ளியோடி வருவதைப்போல் படமெடுத்தவர் அவர்.

  Mother role actresses in Tamil Cinema

  பராசக்தியில் 'புதுப்பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே... உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க...' என்று ஆடிப்பாடிய பண்டரிபாய் பிற்காலங்களில் மிகச்சிறந்த தாய்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தார். அம்மா என்றாலே பண்டரிபாய்தான் என்று நினைக்குமளவுக்கு அவருடைய பங்களிப்பு தொடர்ச்சியாய் இருந்தது. தாயைப் புகழ்ந்தேற்றிப் பாடும் பாடல்களின் பட்டியலில் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' என்ற பாடலுக்குத் தனியிடம் உண்டு. அப்பாடல் காட்சியில் உடல்முடங்கிய பாத்திரத்தில் நடித்த பண்டரிபாயை இரஜினிகாந்த் தூக்கிச் சுமந்தார். என்னதான் நாயகியாய் ஆடிப்பாடினாலும் அன்பான பார்வையாலும் கனிவான சொற்களாலும் ஒரு தாயாக மாறி நம் மனத்தில் நிற்கிறார் அவர்.

  எஸ். என். இலட்சுமி என்றொருவரும் இருந்தார். மகாநதி திரைப்படத்தில் கமலின் பொறுப்பான மாமியாராக நடித்தவர். ஏராளமான படங்களில் நாயகனுக்கோ நாயகிக்கோ அவரே தாயார். எஸ். என். இலட்சுமியோ பண்டரிபாயோ தாயாராகத் தோன்றினால் எந்தக் கேள்வியும் இல்லாமல் பார்வையாளர்களின் மனங்கள் ஏற்றுக்கொண்டன. நம் அம்மா எப்படி இருப்பாரோ அவரை அப்படியே எதிர்நிறுத்தினார்கள் அவர்கள்.

  Mother role actresses in Tamil Cinema

  அடுத்ததாக ஊர்ப்புறக் கதைகளைத் தாங்கிய படங்கள் வெளிவரத் தொடங்கின. கிராமப்புறத்துக் கதைகளுக்கேற்ப வெகுளியும் கறுப்புமான அம்மாக்களுக்குத் தேவையேற்பட்டது. அத்தேவைப்பாட்டுக்கு மிகச்சரியாகப் பொருந்தியவர் காந்திமதி. எம்ஜிஆருக்குத் தாயாக நடித்ததிலிருந்து அவருடைய அம்மா வேடக் காலகட்டம் தொடங்குகிறது. பதினாறு வயதினிலே திரைப்படத்தில் கிராமத்துப் பெட்டிக்கடைக்காரியாக சிறப்பாக நடித்தார். மகளைத் தாய்மையோடு கடிந்து பேசுவதாகட்டும், சண்டைக்கு அஞ்சாமல் வண்டை வண்டையாகப் பேசுவதாகட்டும்... அவர் ஊர்ப்புறத்துத் தாய்மார்களைத் துல்லியமாய்த் தம் நடிப்பில் காட்டினார். மண்வாசனையில் பழமொழி சொல்லித் திரியும் ஒச்சாயிக் கிழவியாக நடித்த நடிப்பு தனித்த உச்சம். "யாருடி அவ... என்வீட்டுத் திண்ணையில வந்து எகத்தாளாமா உட்கார்ந்திருக்கிறவ...," என்று இழுத்த இழுப்பை மறக்க முடியுமா? "இதெல்லாம் ஒரு பொழப்பு... இதுவும் ஒரு பொறப்பு...," என்று சாடை பேசுவதில் காட்டிய நடிப்பு இன்று யார்க்கு வரும்? கரகாட்டக்காரனிலும் காந்திமதிதான் சண்முக சுந்தரத்திற்கு "அக்கா...". நாயகனுக்கு அம்மா.

  எழுபதுகளில் கோலோச்சிய நாயகியர் பலரும் எண்பதுகளில் அம்மா வேடத்தைத் தாங்கினார். சுமத்ரா, ஜெயசித்ரா, ஜெயபாதுரி, சுஜாதா, மஞ்சுளா, இலட்சுமி, ஸ்ரீவித்யா என்ற அந்தப் பட்டியல் பெரிதாகச் செல்கிறது.

  Mother role actresses in Tamil Cinema

  இவர்களுக்கிடையில் பத்துப் பதினைந்தாண்டுக் காலம் அம்மா வேடத்தில் கொடிகட்டிப் பறந்தவர் மனோரமா. என் தங்கச்சி படிச்சவ என்ற திரைப்படத்தின் வழியாக வர்த்தகப் படங்களுக்கான தேர்ந்த இயக்குநராக பி. வாசு மாறினார். அவருடைய படங்களில் மனோரமாதான் அம்மா. சின்னதம்பி திரைப்படத்தின் இறுதிக்காட்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். விதவைத் தாய்க்குப் பொட்டுவைத்து மஞ்சள் நீரூற்றி அல்லவை செய்யும் கெடுமதியாளர்களைக் கொல்லாது விடும்படி உத்தரவிடுபவர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தன் மகனின் மேற்படிப்புக்குப் பணம் கிடைக்கும் என்று தன்னைப் பொசுக்கிக்கொள்ளும் தாய், இந்தியன் திரைப்படத்தில் கணவனின் இறப்புக்காசு கேட்டு அல்லாடும் தாய், நாட்டாமையில் தாய்க்கிழவி என்று மனோரமாவின் பிற்காலம் அவருடைய நடிப்பு வேட்கைக்குப் பெருந்தீனியிடுவதாய் அமைந்தது. அவற்றை மிகச் சிறப்பாய்ச் செய்து நற்பெயர் பெற்றார். நடிக்கத் தொடங்கியதுமுதல் சற்றேறக்குறைய தம் இறுதிக்காலம் வரை நடிப்பே வாழ்வென்று வாழ்ந்த கலை வாழ்க்கை மனோரமாவுடையது.

  நாயகி வேடக் காலம் முடிந்ததும் மேலும் நடிப்பதற்கில்லை என்று பெண்பாற்கலைஞர்கள் முடிவெடுத்திருப்பார்கள். அவர்களை அவ்வாறே இருக்க இத்திரையுலகம் விடுவதில்லை. எப்படியாவது மனத்தைக் கரைத்து அவர்களை மஞ்சள் விளக்கொளியின் முன் நிறுத்திவிடுவார்கள். நடிகை இலட்சுமி ஒருமுறை சொன்னார்: "நம் சந்தை மதிப்பு முடிந்தபின்னும் நம்மை அழைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். அவற்றுக்கு நாம் செவிசாய்ப்பதில் எப்பயனும் இல்லை. நல்ல வேடம் அல்லது நல்ல சம்பளம்... இவ்விரண்டில் ஏதோ ஒன்று இல்லாதபோது மேலும் நடித்துக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை..."

  நாயகி வேடந்தவிர்த்து பிற வேடங்களில் நடிப்பதை முற்றாகத் தவிர்த்ததோடு மட்டுமின்றி, அதன்பிறகு தம் வாழ்க்கையையே வேறொரு திசையில் மாற்றிக்கொண்டு, யாராலும் அடைய முடியாத உயரத்தைத் தொட்ட ஒருவரும் இருக்கிறார். அத்தகைய உயரத்தை அடைவதற்கு மனத்தளவில் அளப்பரிய துணிச்சல் வேண்டும். அது அவர்க்கு இருந்தது. ஒருவேளை அவர் அம்மா வேடங்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் இன்றைய வரலாற்றில் அவரது பெயர் மேலும் சில படங்களோடு நின்றிருக்கும். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு அரசியலைத் தேர்ந்தெடுத்து வென்றார். அவர்தான் ஜெயலலிதா.

  English summary
  Poet Magudeswaran's artcle about Mother Role actresses in Tamil Cinema
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X