twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரியோர்களும் தாய்மார்களும் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்கள் - உறவுகள் பழநினைவுகள் மதிப்பீடுகள்

    By Magudeswaran G
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    என் அலுவலகம் உள்ள வளாகத்தின் இரவுக் காவலர் அவர். இரவுக் காவலர் என்றதும் பஞ்சம் பிழைக்க வந்த வெளியூர்க்காரர் என்று கருத வேண்டா. அதே மண்ணில் பிறந்து வளர்ந்த கொங்கு நாட்டுப் பெரியவர்தான். அவருடைய பெயர் தெரியாது. “ஐயன்” என்றே அழைப்போம். தம் அகவைக்கேற்ற பழைய படங்களின் சுவைஞர். வளாகத்திலுள்ள அலுவலகத் தொலைக்காட்சி ஏதேனுமொன்றில் சிவாஜி படம் ஓடினால் அங்கேயே அமர்ந்துவிடுவார். “பழைய படங்களைத் தவிர்த்துப் புதுசா வர்ற படங்களில் எதுவுமே பிடிக்கலீங்களா ஐயா?” என்று கேட்டேன். இவ்வுரையாடல் நடந்தது தொண்ணூறுகளின் இறுதியில். “அது என்ன அப்பிடிக் கேட்டுப் போட்டீங்க… இப்ப வந்துச்சே கேப்டன் பிரபாகரன்னு ஒரு படம்… அதை இருவத்தஞ்சு வாட்டி பார்த்தனுல்லொ… இன்னிக்கும் அந்தப் படத்த எங்கேயாவது போட்டாப் பார்க்கோனுமின்னு இருக்கறேன்… எங்கயும் போடமாட்டீங்கறான்…” என்றார்.

    அவர் கேப்டன் பிரபாகரன் படத்தைச் சிவாஜி படங்களுக்கு இணையான எண்ணிக்கையில் பார்த்திருக்கிறார். “கடேசீட்ல கோர்ட்டுல எல்லாத்தயும் வெச்சி வெளுப்பான் தெரியுமுல்லொ… அதுக்குன்னே போவேன்…” என்று மெச்சினார். ஐயனைப்போன்ற பல்லாயிரக்கணக்கானோர்க்கும் கேப்டன் பிரபாகரன் விருப்பத்திற்குரிய படம். ஆனால், அந்தப் படத்திற்குப் பழுதில்லாத மறுபதிப்பு வரவேயில்லை. தொலைக்காட்சியிலும் அத்திரைப்படம் ஒளிபரப்பப்படாமல் மறைக்கப்பட்டது. அப்படத்தை ஒளிபரப்புவதில் காப்புரிமை சார்ந்த தீர்க்க முடியாத இடர்ப்பாடுகள் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.

    movies for ladies and gentlemen

    மூத்த தலைமுறையினர் விரும்பிப் பார்க்கும் அண்மைக் காலப் படங்கள் எவை என்று ஆராய்ந்துகொண்டே இருக்கிறேன். அவர்களுக்குள் இயங்கும் பழநினைவுகளையும் மதிப்பீடுகளையும் நேர்செய்யும் வகையில் அமையும் திரைக்கதைகள் வெற்றி பெறுகின்றன. உறவுகளுக்கிடையேயான பூசல்களும் தீர்வுகளும் பிடித்துப் போகின்றன. “பெரியோர்களே தாய்மார்களே” என்பதுதான் எங்கெங்கும் புகழ்பெற்ற விளிப்பு. பெரியோர்களையும் தாய்மார்களையும் பார்வையாளர்களாகக் கொள்ளாமல் எடுக்கப்படும் அண்மைக்காலப் படங்கள் இளநிலைக் குப்பைகளாக மலிந்து போவதைக் காண்கிறோம். உறவுகளால் நெய்யப்பட்ட பெண்களின் அகவுலகங்களோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புகொள்ளும் தன்மையால்தான் தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றைய திரைப்படங்கள் சில்வண்டுகளுக்காக எடுக்கப்படுவதால் அவற்றில் என்றென்றைக்கும் மாறாத தன்மையுடைய மதிப்பீடுகளைப் போற்றும் கதைக்கூறுகள் இருப்பதில்லை. அதனால்தான் ஐயனின் தேடலில் கேப்டன் பிரபாகரனுக்குப் பிறகு வேறொன்றும் அகப்படவில்லை.

    என் வீட்டுக்கு மின்னளவை எடுக்க வருபவர் என்னோடு சில மணித்துளிகள் உரையாடித் தீர்த்த பிறகே நகர்வார். தம்மை எடுத்தியம்பும் பெரியவர்களின் சொற்களைத் தவறவிடாது கேட்பேன். நாம் சொல்வதையும் அலுக்காமல் செவிமடுக்கிறாரே என்ற உவப்பில் மேலும் அவர்கள் மனந்திறப்பர். அவர் தற்போது பணியோய்வும் பெற்றுவிட்டார். அன்றொருநாள் மின்னளவை எடுக்க வந்தவர் என்னிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். “மாயாண்டி குடும்பத்தார் பார்த்துட்டீங்களா ?” என்றார். “ஆமாங்க… பார்த்துட்டேன்…” என்றேன். “நானும் நேத்து பார்த்தேன்ங்க… ஐயோ என்ன படம்… படம் பார்த்ததுல இருந்து என்னால எதையுமே பண்ண முடியலீங்க… பொறந்தவங்க ஞாவகம் வந்துருச்சி…” என்று கண்ணீர் திரண்டு அமர்ந்துவிட்டார். அவர் மிடுக்கு சொடுக்காக இருப்பவர். அப்படியே உறைந்து உட்கார்ந்துவிட்டார். உறவுகளைப் பற்றிய தம்முடைய நினைவுகளையெல்லாம் கொட்டித் தீர்த்த பிறகே இயல்புக்கு வந்தார். மாயாண்டி குடும்பத்தார் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் உகுக்காதவர்களே இல்லை எனலாம். நம் ஊர்ப்புற வாழ்வியலின் உறவுப் பதற்றங்களின் நிறைவான தொகுப்பு அப்படம். மாயாண்டி குடும்பத்தாரைப் பார்த்து நெகிழ்ந்தவர்க்கு இன்று வருகின்ற எந்தப் படம் நிறைவைத் தரும் ?

    இளமையில் என் தாயோரோடு சென்று கொட்டகை அரங்கில் பல படங்கள் பார்த்திருக்கிறேன். அப்படங்கள் யாவும் 'தேடி வந்த மாப்பிள்ளை, குமரிக்கோட்டம், தங்கப்பதுமை, வண்ணக்கிளி’ என்று வேறு காலத்தில் இருந்தன. அவற்றையே அவர் விரும்பிப் பார்த்தார். நான் வளர்ந்து ஆளாகியதும் அவர் திரையரங்குக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டார். காலப்போக்கில் வீட்டுக்கு அருகிலேயே புதுத் திரையரங்கம் ஒன்று முளைத்தது. அவ்வரங்கில் வெள்ளிதோறும் புதுப்படங்களைத் திரையிட்டனர். “நாமே படம் பார்த்தால் எப்படி… அம்மாவையும் அழைத்துச் சென்று கடன் தீர்ப்போமே…” என்ற நன்றியுணர்ச்சி மேலோங்க ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றேன். சரண் என்ற இயக்குநர் இயக்கிய 'வட்டாரம்’ என்பது அத்திரைப்படத்தின் பெயர். அந்தப் படம் என் தாயார்க்கு மொத்தமாக விளங்கவில்லை. “எல்லாரும் நல்லா வளர்ந்த ஆளுங்கதான்… காசு பணம் காரு பங்களான்னு இருக்கறானுங்க… நல்லாப் படிச்சிருக்கறானுங்க… அப்புறம் எதுக்கு இப்படி அடிச்சிக்கறானுங்க ? ஆளாளுக்கு வெட்டிக் கொன்னுக்கறானுங்க…?” என்று கேட்டார். அவருடைய எளிய கேள்விக்கு என்னால் விடையிறுக்கவே இயலவில்லை. பார்வையாளரின் இந்தக் கேள்விக்கு விடைகூறினால்தான் ஓர் அடிதடிப் படம் வெற்றி பெற முடியும். என் தாயாருக்காக “ஹம் ஆப்கே ஹைன் கோன்’ குறுந்தகடு அடிக்கடி ஓடிக்கொண்டிருக்கும். அந்தப் படத்தின் அறியாமொழி அவர்க்கு இடையூறே இல்லை. ஆனால், இன்றைய தமிழ்ப்படத்தில் அவரால் ஒன்ற முடியவில்லை.

    நண்பர்கள் சிலரிடம் உரையாடியதில் “சந்தோஷ் சுப்பிரமணியம்” என்ற திரைப்படத்தை மனமொன்றிப் பார்த்தாகவும் அப்படத்தை எப்போது தொலைக்காட்சியில் திரையிட்டாலும் விரும்பிப் பார்ப்பதாகவும் கூறினர். பெருங்குடும்பத்தின் செல்ல மகனை மணக்க வரும் வெகுளிப்பெண்ணின் அன்புள்ளமே அப்படம். அந்தப் படத்தில் காட்டப்பட்ட உறவுகளின் பன்னிற வெளிப்பாடுகள் எல்லாரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. நான் ஆந்திரம் சென்றிருந்தபோது தற்செயலாக “அத்தகாரிண்டிகி தாரேதி” என்ற படத்தைப் பார்த்தேன். தெலுங்கின் முன்னணி நாயகனான பவன் கல்யாண் நடித்திருந்த அப்படம் குடும்பத்தைவிட்டு வெளியேறிய செல்ல மகளை மீட்கும் கதை. தெலுங்குத் திரையுலகம் ஓகோவென்று இருப்பதற்குக் காரணம் அங்கே எடுக்கப்படும் கதைகள் யாவும் உறவுத்தளத்தை விட்டு நகராதிருப்பதுதான்.

    பெரியவர்களுக்கும் தாய்மார்களுக்கும் ஏன் இன்றைய இளைஞர்களுக்குமேகூட நம் மதிப்பீடுகளைப் புதுப்பித்தும் போற்றியும் பேசும் திரைப்படங்கள் பிடித்துப் போகின்றன. பாமர மக்களின் உளக்கொதிப்புகளைப் படமாக்கினால் விரும்பிப் பார்க்கப்படும். உறவுகளின் முரண்களுக்கிடையே ஓராயிரம் கதைகளை நம் மென்னுணர்வுகள் தூண்டப்படுமாறு எடுக்கலாம். இளைஞர்களுக்காக மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் தாய்மார்களுக்கும் கதை தேட வேண்டும். பெரியோர்களும் தாய்மார்களும் ஒரு திரைப்படத்தை விரும்பிப் பார்க்குமாறு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு திரைப்படத்தின் வெற்றி உறுதிப்படும்.

    - கவிஞர் மகுடேசுவரன்

    English summary
    Cinema Article about the movies for ladies and gentlemen
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X