இது ராஜா போட்ட பாட்டா என்று தன் பாட்டை பற்றியே கேட்ட எம்.எஸ்.வி... கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்
சென்னை: இசையமைப்பாளர்களில் மும்மூர்த்திகளில் ஒருவராகவும் முதல்வராகவும் கருதப்படுபவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். அவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் உண்டு.
ஐயா விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த "மாலை பொழுதின் மயக்கத்திலே" பாடல், தான் இசையமைப்பாளர் ஆவதற்கு தூண்டுகோலாக இருந்ததாக இளையராஜா அடிக்கடி குறிப்பிடுவார்.

மெல்லிசை மன்னர்கள்
விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்ற இரட்டையர்களாக அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை கொடுத்தவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை கொடுத்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு இருவரும் தனித்தனியே இசையமைக்கத் தொடங்கினர். அதன் பின் விஸ்வநாதன் ஐயா மட்டுமே புகழ்மிக்க இசையமைப்பாளராக பல ஆண்டுகள் வலம் வந்தார்.

நடிகர் எம்.எஸ்.வி
முதலில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் வந்தவர்தான் விஸ்வநாதன். ஆனால் இசையமைப்பாளராகி வெற்றியும் கண்டார். நடிப்பதில் ஆர்வம் குறைந்தவராக இருந்த போது, நடிகர் விவேக் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் காதல் மன்னன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அவர் நடிப்பு நல்ல வரவேற்பையும் பெற்றது. அதன் பின் காதலா காதலா, தக திமி தா, தில்லு முல்லு ரீமேக் என சில படங்களில் நடித்தார்.

காதலா காதலா
கமல் ஹாசனின் காதலா காதலா படத்தில் நகைச்சுவை காட்சிகளில் பிரம்மாதமாக நடித்திருப்பார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பிற நடிகர்கள் அவரது பாடல்கள் உள்பட பல பாடல்களை பாடிக் கொண்டே இருப்பார்களாம். அது அவருக்கு தொந்தரவாக கூட இருந்திருக்கும் என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.

ராஜா இசையமைத்த பாட்டா?
அப்படி பாடும்போது, சில பாடல்கள் நான்றாக இருந்தால் யார் இசையமைத்தது என்று கேட்பாராம். இளையராஜா இசையமைத்தது என்று சொன்னால், நன்றாக உள்ளது என்று சொல்வாராம். மீண்டும் வேறொரு நல்ல பாடலை கேட்டுவிட்டு, இதுவும் ராஜா போட்ட பாட்டுதானா என்று கேட்பாராம். அதற்கு,"இல்லை இல்லை, இது நீங்கள் இசையமைத்தது" என்று சொல்ல, அப்படியா எந்தப் படம் எப்போது வந்தது என்று கேட்டுவிட்டு பின் சிறிது யோசித்துவிட்டு,"ஒரே ஆண்டில் ஒரே ராகத்தில் ஆறு பாடல்களை இசையமைத்துள்ளேன். அதான் என் பாட்டை எனக்கே தெரியவில்லை" என்று எம்.எஸ்.வி கூறினாராம். அந்த அளவிற்கு அவர் எளிமையானவர் என்று கமல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











