HBD Vidyasagar.. எல்லா ஜானர்களிலும் மெலோடி வித்தை செய்யும் வித்தைக்காரர் வித்யாசாகர்
சென்னை: பொதுவாக யார் ஃபோக் பாடல்களை இசையமைத்தாலும் அதில் மெலோடி அவ்வளவாக இருக்காது. ஆனால் வித்யாசாகர் அப்படி இல்லை. அவரது எந்த ஃபோக் பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு மெலோடி டச் இருக்கும். அந்த வித்தைக்காரர் வித்யாசாகருக்கு இன்று பிறந்தநாள்
இசையமைப்பாளர்கள் எப்போதும் தனித்துவமானவர்கள். சத்தத்தை இசையாக மாற்றி சலனத்தில் இருக்கும் மனதை சாந்தமாக்கும் வித்தைக்கார்கள் அவர்கள். அந்த வித்தைக்காரர்களில் வித்யாசாகருக்கு எப்போதுமே பெரும் இடம் ஒன்று இருக்கிறது. ஆனால் வித்யாசாகர் இன்னும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஏனோ அவர் அப்படி கொண்டாடப்படவில்லை. இருப்பினும் இந்தத் தலைமுறையினர் மத்தியிலும் வித்யாசாகர் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்பது சந்தோஷம் தரக்கூடிய விஷயமே.

வித்யாசாகர் எனும் வித்தைக்காரர்
தமிழ் சினிமா இசையின் முகத்தை விஸ்வநாதன் - ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என பலர் அடுத்தடுத்த உயரத்துக்கு கொண்டு சென்றனர். அப்படி வித்யாசாகரும் கொண்டு சென்றார். ஆனால் கொஞ்சம் வித்தியாசத்தோடு, வித்தையோடு கொண்டு சென்றார். இளையராஜா தமிழ் இசையை எளிமைப்படுத்தினார், ரஹ்மான் நவீனப்படுத்தினார் என்றால் வித்யாசாகர் தனது இசை மூலம் அமைதிப்படுத்தினார். அவரது ஒவ்வொரு பாடலை எடுத்துகொண்டாலும் அதில் ஒருவித அமைதி நிலவும். அந்த அமைதிதானே இசையின் ஆன்மா. அப்படி ஆன்மாவை கொல்லாமல் பலரை பறக்கவைத்தவர் வித்யாசாகர்.

குறிஞ்சி பூ வித்யாசாகர்
உதாரணமாக கர்ணா படத்தில் இடம்பெற்றிருக்கும் 'மலரே மௌனமா' பாடலை எடுத்துக்கொள்ளலாம். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும்; மனதில் எவ்வளவு சஞ்சலங்கள் இருந்தாலும் சட்டென மனம் அமைதி கொள்ளும். பாடல் ஆரம்பிக்கும்போதே மெல்லிய எனர்ஜி ஒன்று மனதுக்குள் குடிகொள்ளும். அந்த எனர்ஜி நமது மனதை; அடுத்ததாக வரவிருக்கும் அமைதிக்கு தயார் செய்யும். ஒரு மலையில் ஏற ஏற மூச்சு வாங்கி பிறகு மலை உச்சிக்கு சென்றால் எப்படி மனமும், உடலும் பரவசத்தையும், மௌனத்தையும் அடையுமோ அவற்றைக் கொடுக்கக்கூடியது மலரே மௌனமா. அதனால்தான் இசை ஜாம்பவான்களில் ஒருவரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்தப் பாடலின் ட்யூனை, 'அரிதாக பூக்கும் குறிஞ்சி பூ போன்றது' என்றார்.

அலையாய் எழுந்து, விழும் வித்யாசாகர்
அதேபோல் உயிரோடு உயிராக படத்தில் இடம்பெற்றிருக்கும் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது'பாடல். பாடலை நேரடியாக குரலின் மூலம் லோ பிட்ச்சில் மொலோடியாக ஆரம்பித்து நான்கு வரிகளை கடந்துவிட்டு 'இது எப்படி எப்படி நியாயம்' என்று ஹை பிட்ச்சில் சென்றிருப்பார். இதில் கவனிக்க வேண்டியது என்றால் லோ பிட்ச்சாக இருந்தாலும் சரி ஹை பிட்ச்சாக இருந்தாலும் சரி அதில் ஒரு மெலோடி மெல்லிய தென்றல் போல் தவழ்ந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி அந்தப் பாடல் முழுவதுக்கும் அதே பாட்டர்னில்தான் ட்யூன் அமைத்திருப்பார். இதில் ரசிக்க என்ன இருக்கிறது என நினைக்கலாம். கடலில் ஒரு அலை எழுவதையும், விழுவதையும் ரம்யத்தோடு ரசிக்கும் மனது வாய்க்கப்பெற்றவர்களுக்கு இந்தப் பாடல் நிச்சயம் அலாதி உணர்வை கொடுக்கக்கூடியது.
முக்கியமாக மொழி படத்தில் இருக்கும் செவ்வானம் சேலையை கட்டி பாடலையும், காற்றின் மொழி பாடலையும் கேட்டுப்பாருங்கள். அந்தப் பாடல் கொடுக்கும் உணர்வுகள் ஒரு கடலும், காடும், மலையும் கொடுக்கக்கூடிய உணர்வுகள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வித்யாசாகரின் பாடல்களை கேட்கும்போதெல்லாம் இயற்கையோடு லயித்துப்போன உணர்வு கிடைக்கும்.

மெலோடி கிங் என்றால் வித்யாசாகர்தான்
மெலோடியை தொடாத இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை. அதில்தான் அவர்களது பூரண திறமை வெளிவரும் என்பது இசையமைப்பில் இருக்கும் விதி. அந்த விதியின்படி வித்யாசாகர் அதில் ஒரு கிங். வித்யாசாகரின் மெலோடிக்குள் காதல், ஊடல், கூடல் என எல்லோரது மெலோடிக்குள் இருப்பவை இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஒன்று இருக்கும். அது என்னவென்றால் ஊற்றெடுக்கும் உற்சாகமும், ஆழமான அமைதியும். சுள்ளான் படத்தில் இடம்பெற்றிருக்கும் 'கவிதை இரவு இரவு கவிதை' பாடல் அவர் இசையமைத்திருக்கும் மிகச்சிறந்த மெலோடி பாடல்களில் ஒன்று. அந்தப் பாடல் முழுவதும் காதல், ஊடல், கூடல் என அனைத்தும் இருந்தாலும் அதையெல்லாம் மீறி அந்த ட்யூனில் ஒரு உற்சாகம் ஊற்றெடுக்கும், ஆழமான அமைதி ஒன்று உருவாகும்.

எனர்ஜி பூஸ்டர் வித்யாசாகர்
மெலோடிகளில் மட்டுமின்றி குத்துப்பாடல்கள், ஃபாஸ்ட் பீட் பாடல்கள் என அவைகளிலும் தனது முத்திரையை பலமாகவே பதித்திருப்பவர் வித்யாசாகர். வரிகளை மறைத்து வரும் குத்துப்பாடல்களும், ஃபாஸ்ட் பீட் பாடல்களும் அதிகம் இருக்கின்றன. ஆனால் வித்யாசாகரின் அந்த வகையான பாடல்கள் வரிகள் மறைக்கப்படாமல் பாடகரின் குரலையும், தனது வாத்தியங்களையும் வைத்து எனர்ஜி ஏற்றக்கூடியவை. கில்லி படத்தில் சூரத்தேங்கா அட்றா அட்றா பாடலும், அர்ஜுனரு வில்லு பாடலும் பாடல் ஆரம்பிக்கும்போது எந்த எனர்ஜியோடு தொடங்குகிறதோ அதே எனர்ஜியோடு வரிகளை சிதைக்காமல் பாடல் முழுவதும் பயணமாகும். இதுபோல் பல குத்துப்பாடல்களிலும், ஃபாஸ்ட் பீட் பாடல்களிலும் எனர்ஜி பூஸ்டராகவே தன்னை நிரூபித்திருக்கிறார் வித்யாசாகர்.

ஃபோக்கிலும் மெலோடி புகுத்திய வித்தைக்காரன்
பொதுவாக யார் ஃபோக் பாடல்களை இசையமைத்தாலும் அதில் மெலோடி அவ்வளவாக இருக்காது. ஆனால் வித்யாசாகர் அப்படி இல்லை. அவரது எந்த ஃபோக் பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு மெலோடி டச் இருக்கும். கொக்கரக்கொக்கரக்கோ பாடல் பக்கா ஃபோக் சாங். ஆனால் அந்தப் பாடலை புல்லாங்குழல் வைத்து மெலோடியோடு ஆரம்பித்திருப்பார். பாடலின் நடுவிலும் ஆங்காங்கே மெலோடி டச்சை வைத்திருப்பார். அதேபோல் அப்படி போடு அப்படி போடு பாடலும் முழுக்க முழுக்க ஃபோக் பாடல். அந்தப் பாடலின் இடையிலும் மெலோடி டச்சை வைத்திருப்பார். இப்படிஃபோக் பாடல்களின் இடையில் மெலோடி டச்களை வைக்கும் வித்தை அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்காது. அப்படிப்பட்ட வித்தைக்காரன் வித்யாசாகருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











