»   »  நெஞ்சம் மறப்பதில்லை -10: கவிஞர் வாலி

நெஞ்சம் மறப்பதில்லை -10: கவிஞர் வாலி

Subscribe to Oneindia Tamil

-பெரு துளசிபழனிவேல்

கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.

சென்னையில் நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நட்பு கிடைத்தது. வி.கோபாலகிருஷ்ணன் மூலம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எதுவும் பலன் தராததால் துவண்டு போய் மறுபடியும் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே பயணமாக முடிவு செய்தார். அப்பொழுதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று காற்றினிலே கலந்து வந்து கவிஞர் வாலியின் காதில் நுழைந்தது மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து மீண்டும் போராடுவதற்கான நம்பிக்கையை வாலிக்கு கொடுத்தது.

Nenjam Marappathillai -10

அந்தப் பாடல் ‘மயக்கமாக கலலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'

சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்' படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது.

‘நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா' என்று பாடல் எழுதிக் கொடுத்தார். இந்தப்பாடலை ப.சுசிலா தனது இனிமையான குரலில் பாடி கொடுத்தார்.

எந்த கண்ணதாசன் பாடல் கேட்டு நம்பிக்கை பெற்று மறுபடியும் திரையுலகில் போராடி நுழைந்தாரோ அதே கண்ணதாசனுக்குப் போட்டியாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார் வாலி. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.

முக்தா சீனிவாசன் தனது ‘இதயத்தில் நீ' படத்தில் பாடல் எழுத அழைத்தார். கவிஞர் வாலியை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பாடல் எழுதும் ஆற்றலைப் பார்த்துவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டார். ‘இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்' என்று.

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது ‘கற்பகம்' படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதச் சொன்னார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் வெற்றிப் பெற்றது. ‘கற்பகம்' பெயரிலேயே ஸ்டுடியோவை வாங்கி நடத்தத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் பி.சுசிலாவே பாடினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்' படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை டைரக்டர் ப.நீலகண்டன்தான் பெற்றுத் தந்தார். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆரிடம அறிமுகப்படுத்தியதும் ப.நீலகண்டன்தான்.

எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சரவண பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி எழுதச் சொன்னார். ‘படகோட்டி' படத்தின் முழு கதையை வாலி கேட்டதால் அவரையே அந்தப் படத்திற்கு ஒரு பெயரை சூட்டச் சொன்னார்கள். அவரும ‘படகோட்டி' என்று பெயர் வைத்தார்.

இப்படி எம்.ஜி.ஆருக்கு 61 படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரின் பாராட்டுக்களை பெற்றார் கவிஞர் வாலி.

அதே போல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘அன்புக் கரங்கள்' படம் மூலம் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. சிவாஜிக்கு 60 படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் நிழற்படங்களிலும் ஒலித்தன. நிஜவாழ்க்கையிலும் அவை பிரதிபலித்தன.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததை எதிரொலித்தது. அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகும் அவரது மூன்றெழுத்து பெயரும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...' இந்தப் பாடல் வரிகளும் நிஜமாகின. சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றியது. அவரும் தனது ஆட்சியில் ஏழை எளியோரை வேதனைப்படாமல் பார்த்துக் கொண்டார்.

ஜெமினியின் ‘ஒளிவிளக்கு' படத்தில் கதைப்படி தீ விபத்துக்குள்ளான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி ஊர்மக்கள் பிரார்த்தனை செய்து பாடுவதுபோல் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் வாலி.
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'
இந்தப்பாடல் படத்தில் ஒலித்து பாராட்டுக்களை பெற்றது. இதேப் போன்று எம்.ஜி.ஆர் நிஜமாகவே உடல்நலம் சரியில்லாத போது அவர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் மக்கள் இந்தப்பாடலைப் பாடித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘தலைவன்' என்றொரு படம். நீண்ட காலமாகவே முடிக்கப்படாமல் கிடப்பிலிருந்த படம். எதனால் இந்தப்படம் எடுத்து முடிக்க தாமதமாகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியை அழைத்து, 'இந்தப்படம் தாமதமாவதற்கு நீங்கள்தான் காரணம்,' என்று கூறினார். வாலியும் 'நான் எப்படி காரணமாவேன்?' என்று கேட்டார்.

அதற்கு எம்.ஜி.ஆர். நீங்கள் எழுதி கொடுத்த பாடல் வரிகளை திரும்பவும் சொல்லிப்பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
‘நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருக்க...' இப்படி பாடல்வரிகளை எழுதி கொடுத்தால் எப்படி படம் முடியும் வெளியே வரும் என்றார் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியை அழைத்து ‘அடிமைப் பெண்' படத்தில் அம்முவை (ஜெயலலிதா) சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடச் சொல்லப் போகிறேன். அதற்கான ஒரு பாடலை எழுதுங்கள் என்றார். வாலியும் ‘அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். அதை செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடினார்.
ஒரு நாள் கவிஞர் வாலி எம்.ஜி.ஆரிடம், ‘அண்ணா நீங்கள் பின்னாளில் அவரைப் (ஜெயலலிதா) பாட வைக்கப் போறீங்க என்று தெரிந்ததான் அன்றே ஒரு பாடலை எழுதிவிட்டேன். அந்தப் பாடல்

‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன் தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் கோயில் இல்லாத இறைவன்''
இதை ‘அரசகட்டளை' படத்தில் செல்வி ஜெயலலிதாவே பாடி நடித்திருப்பார். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர் தன்னை மறந்து சிரித்துவிட்டார்.

அதே போன்று ‘அன்னமிட்டகை' படத்தில்
‘அன்னமிட்ட கை இது ஆக்கிவிட்ட கை'
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம்
வாழவைத்த அன்னமிட்ட கை'

என்று எழுதியிருந்தார் வாலி. இந்தப் பாடலின் கருத்துப்படி எம்.ஜி.ஆர். முதல்வரானதும் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டார். அவருடைய கை எத்தனையோ பேருக்கு அன்னமிட்ட கையாகத் திகழ்ந்தது.

‘பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' என்று ஒரு பாடலை எழுதினார் வாலி. எம்.ஜி.ஆர் புதிய கட்சி ஆரம்பித்ததும் நல்ல நல்ல பிள்ளைகள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். அவரை நாடாள வைத்தார்கள். ‘காவல்காரன்' படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது, கேட்டேன் தந்தாய் ஆசை மனது...' என்ற பாடலை எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அப்பொழுது எம்.ஜி.ஆர் குண்டடிப்படிருந்தார். அவர் உடல் நலம் பெற்று வந்து இந்தப் பாடல் காட்சியில் பாடி நடித்தார்.

நடிகர் பிரபு நடித்த ‘ராஜா கைய வெச்சா' என்ற படத்திற்கு ‘மழைவருது மழைவருது குடைகொண்டுவா மானே உன் மாராப்பிலே...' என்று கவிஞர் வாலி ஒரு பாடலை எழுதியிருந்தார். இந்தப் பாடலை படமாக்கும்போதெல்லாம் ஊட்டியில் மழைவந்து படப்பிடிப்பை தடைசெய்தது. இப்படி பதினாறாயிரம் பாடல்களுக்கு மேல் ஓய்வின்றி எழுதி சாதனைப் புரிந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு மட்டும் நான்காயிரம் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி. ரஜினி, கமல், அஜீத், விஜய் என்று எல்லா தலைமுறையினருக்கும் பாடல்கள் எழுதிய ஒரே பாடலாசிரியர் கவிஞர் வாலி மட்டும்தான். இவர் ஒரு முருக பக்தர் அதனால் தான் இவர் எழுதிய பாடல் வரிகளிளெல்லாம் சக்திப்பெற்று நிஜங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

பாடலாசிரியராக மட்டுமல்ல.. ஒரு எழுத்தாளராக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவர். நடிகராக அவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். பொய்க்கால் குதிரையில் நடித்ததோடு, கதை வசனத்தையும் எழுதினார். கமல் ஹாஸனுடன் சத்யா, ஹே ராம் படங்களில் நடித்தார்.

1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் கவிஞர் வாலி. சொந்தப் பெயர் ரங்கராஜன். இவருக்கு வாலி என்று புனைப்பெயர் வைத்தவர் பாபு என்ற பள்ளி நண்பர். தந்தை ஸ்ரீனிவாச அய்யங்கார், தாய் பொன்னம்மாள். தனது நாடகத்தில் நடிக்க வந்த ரமணதிலகம் என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 18.07.2013 அன்று கவிஞர் வாலி காலமானார். அவருக்கு பிறந்த ஒரேஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

- தொடரும்...

English summary
The 10th episode of Peru Thulasi Pazhanivel's Nenjam Marappathillai cinema series.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil