For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெஞ்சம் மறப்பதில்லை - 13: பஞ்சு அருணாசலம் என்ற மேதை!

|

- பெரு துளசிபழனிவேல்

திரையுலகம் எத்தனையோ மரணங்களைப் பார்த்துவிட்டது. எம்ஜிஆர், சிவாஜி எனும் பெரும் ஜாம்பவான்களை இழந்திருக்கிறது.

அண்மையில் திரையுலகின் பன்முகக் கலைஞரான பஞ்சு அருணாச்சலத்தை இழந்தது. பஞ்சு அருணாச்சலம் மறைவு உண்மையாகவே ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை மாதிரி சினிமாவை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இன்று யாரும் இருக்கிறார்களா தெரியவில்லை.

அப்போது ஏவிஎம் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 'முரட்டுக்காளை' படம் எடுக்கும் முடிவுக்கு வந்திருந்தார்கள். படத்துக்கு வில்லன் நடிகரை தேடினார்கள். டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரை வில்லனாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். அவருக்கு திடகாத்திரமான உடல், உயரமான தோற்றம் இருந்தது அதனால்தான் அவரை சிபாரிசு செய்தார்கள். அப்பொழுது சிலர் கராத்தே மணியை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பஞ்சு அருணாசலம்தான், "இவர்கள் எல்லோரையும் விட ஜெய்சங்கர் வில்லனாக நடித்தால் பொருத்தமாக இருக்கும்... புதுசாகவும் இருக்கும்," என்றார்.

Nenjam Marappathillai 13: Panchu Arunachalam

அப்பொழுது ஜெய்சங்கர் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து ஒதுங்கியிருந்த நேரம். ஆனாலும் நடிக்க ஒப்புக் கொண்டார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.

அதேபோல் ஏவிஎம் பேனரில் கமலஹாசன் நடித்த பக்கா கமர்ஷியல் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கலந்தாலோசித்த போது கமலஹாசனிடம் இருக்கும் ஆற்றல்களை கணக்கில் கொண்டு 'சகலகலா வல்லவன்' பெயரை வைத்தார் பஞ்சு அருணாசலம். அனைவரும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

'மிஸ்டர் பாரத்' படத்தில் வரும் சத்யராஜ் பேசும் 'என்னம்மா கண்ணு' என்ற பஞ்ச் டயலக் பஞ்சு அருணாசலம் சொல்லிதான் சேர்க்கப்பட்டது.

கமலஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை எடுத்து முடித்த பிறகு பஞ்சு அருணாசலத்திற்கு படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு அனைவரையும் கவரும் வகையில் வெற்றிக்கான சில மாற்றங்களைச் செய்து கொடுத்திருக்கிறார். தானே திரைக்கதை எழுதியிருந்தும், பஞ்சு சார் சொன்ன மாற்றங்களைச் செய்த பிறகுதான் கமல் ஹாஸனுக்கே திருப்தி கிடைத்ததாம்.

Nenjam Marappathillai 13: Panchu Arunachalam

ஹேராம் படத்தை 4 மணி நேரப் படமாக எடுத்து வைத்திருந்தாராம் கமல். அது பஞ்சு அருணாச்சலம் கைக்கு வந்த பிறகுதான் ஒரு முழுமையான படமாக, 3 மணி நேரத்துக்குள்ளான படமாக மாறியது.

இப்படி... ஒன்றா இரண்டா... ஏராளமான சம்பவங்களைச் சொல்லலாம்.

எல்லாவற்றுக்கும் சிகரம், அவர் அன்னக்கிளி மூலம் இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்தியது. எண்பதுகளில், தொன்னூறுகளில் பல படங்கள் ஓடக் காரணமே பஞ்சு அருணாச்சலமும் இளையராஜாவும்தான்.

பஞ்சு அருணாசலம் 22.03.1941 ஆம் ஆண்டு காரைக்குடியிலுள்ள சிறுகூடல் பட்டியில் பிறந்தார். பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசர் கண்ணதாசன் இருவரும் இவருக்கு சித்தப்பா முறை உறவானவர்கள்.

சென்னைக்கு வேலை தேடி வந்த போது தனது பெரிய சித்தப்பா ஏ.எல்.சீனிவாசன் அவர்களை முதன்முதலில் பார்த்திருக்கிறார். கதை எழுதுவேன், பாட்டு எழுதுவேன் வாய்ப்பு வாங்கி கொடுங்கள் என்று கேட்டாராம். அப்பொழுது ஏ.எல்.சீனிவாசன் பரணி ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். முதலில் அங்கு போய் வேலை செய்து பழகிகொள் அப்புறம் பார்க்கலாம் என்றார்.

அவரும் பரணி ஸ்டுடியோவில் பலமாதங்கள் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு சின்னசித்தப்பா கவியரசர் கண்ணதாசனிடம் வந்திருக்கிறார். பஞ்சு அருணாசலத்திடம் இருக்கும் எழுத்தாற்றலை புரிந்துக் கொண்ட கவியரசர், தான் நடத்திக் கொண்டிருந்த 'தென்றல்' பத்திரிகைக்கும் உதவியாளராக வைத்துக்கொண்டார்.

Nenjam Marappathillai 13: Panchu Arunachalam

1960ஆம் ஆண்டு 'நானும் மனிதன்தான்' படம் மூலம் முதன் முதலாக பாடல் எழுதிஅறிமுகமானார். 1962 ஆம் ஆண்டு வெளிவந்த 'சாரதா' படத்தில் அவர் எழுதி இடம் பெற்ற 'மணமகளே மருமகளே வாவா, உனது வலது காலை எடுத்து வைத்து வாவா' பாடல் அவரைப் பிரபலமாக்கியது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர் காலகட்டங்களில் பாடலாசிரியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன், முன்னணிக் கலைஞர்களாக வெற்றிவலம் வந்த போது இவரும் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவாக கொடி கட்டிப் பறந்தார்.

கமர்ஷியல் படங்களுக்கு இவர் அத்தாரிட்டியாக இருந்தார். ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களுக்கு இவருடைய ஐடியாக்கள் முக்கிய பங்கு வகித்தன.

ஜெய்சங்கர், முத்துராமன், சிவக்குமார், விஜயகாந்த் படங்களின் வெற்றிக்கும் இவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களான 'முரட்டுக்காளை', 'போக்கிரிராஜா', 'பாயும்புலி', 'சகலகலா வல்லவன்', 'மனிதன்', 'தூங்காதே தம்பி தூங்காதே', 'உயர்ந்த உள்ளம்', 'ராஜா சின்ன ரோஜா' போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

'ஆறிலிருந்து அறுபதுவரை', 'கல்யாணராமன்', 'எங்கேயோ கேட்ட குரல்', 'ஜப்பானில் கல்யாணராமன்', 'ஆனந்த ராகம்', 'மைக்கேல் மதனகாமராஜன்', 'வீரா', 'ராசுக்குட்டி', 'அலெக்சாண்டர்', 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'குருசிஷ்யன்', 'ரிஷி' போன்ற 40 க்கு மேற்பட்ட படங்களை சொந்தமாகப் படங்களைத் தயாரித்தார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த 'கவரிமான்', 'ஆளுக்கொரு ஆசை', 'காற்றினிலே வரும் கீதம்', 'சக்கைப்போடு போடு ராஜா', 'வாழநினைத்தால் வாழலாம்', 'காயத்ரி', 'உறவு சொல்ல ஒருவன்', 'உன்னைத்தான் தம்பி', 'கல்யாணமாம் கல்யாணம்', 'உங்கள் விருப்பம்', 'கடல்மீன்கள்', 'எங்கம்மா சபதம்', இது எப்படி இருக்கு', 'பிரியா', 'உறவாடும் நெஞ்சம்', 'பேர் சொல்ல ஒரு பிள்ளை', 'காலங்களில் அவள்வசந்தம்', 'அவர் எனக்கே சொந்தம்', 'தொட்டதெல்லாம் பொன்னாகும்', ருசிகண்ட பூனை', 'ஹலோ பார்ட்னர்', 'கழுகு', 'உல்லாசப் பறவைகள்', உள்பட 99 படங்களுக்கு திரைக்கதை, வசனமெழுதி வெற்றிக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் நடித்த சாரதா படத்தில் 'மணமகளே மருமகளே வாவா', புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த 'கலங்கரை விளக்கம்' படத்தில் 'பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண்பனிதுவிடும் நிலவேநில்', மு.க.முத்து நடித்த 'பூக்காரி' படத்தில் 'காதலின் பொன் வீதியில்,' 'அவர் எனக்கே சொந்தம்' படத்தில் 'தேவன் திருச்சபை மலர்களே', 'கவிக்குயில்' படத்தில் 'சின்னகண்ணன் அழைக்கிறான்', 'குயிலேகவிக்குயிலே', 'அன்னனக்கிளி' படத்தில் அனைத்துப் பாடல்களும், 'காயத்ரி' படத்தில் 'வாழ்வே மாயமாம்...', 'எங்கம்மா சபதம்' படத்தில் 'அன்புமேகமே இங்கு ஓடிவா', 'உறவாடும் நெஞ்சம்' படத்தில் 'ஒரு நாள்உன்னோடு ஒருநாள்', 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் 'காதலின் தீபம் ஒன்று', 'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தில் 'கண்மணியேகாதல் என்பது', 'காற்றினில் வரும் கீதம்' படத்தில் 'ஒரு வானவில்போலே', போன்ற 500க்கு மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்.

'மணமகளேவா', 'புதுபாட்டு', 'கலிகாலம்', 'தம்பி பொண்டாட்டி', போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது.இவர் தயாரித்த 'எங்கேயோ கேட்ட குரல்', 'ஆறிலிருந்து அறுபது வரை', போன்ற படங்களுக்கு விருதுகள் கிடைத்தது.சிறந்ததிரைக்கதை, வசனத்திற்காக பல விருதுகள் பெற்றியிருக்கிறார்.

கதாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர், விநியோகஸ்தர் இப்படி பஞ்சு அருணாச்சாலம் தொட்டுத் துலங்காத துறைகளே இல்லை சினிமாவில்.

56 வருடங்கள் இந்தத் திரைப்படத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞராக வெற்றிவலம் வந்த பெரும் மேதை, தன்னை ஒரு நாளும் பிரதானப்படுத்திக் கொண்டதே இல்லை. எளியோர்க்கு எளியோராய் வாழ்ந்து மறைந்தார்.

English summary
An article on late legend producer, director, lyricist, writer Panchu Arunachalam.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more