twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை 18 - எம்.ஜி.ஆர்.- சிவாஜி படத்துக்கு ஒரு பாட்டால் வந்த பிரச்சினை!

    |

    -பெரு துளசிபழனிவேல்

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடிக்கட்டி பறந்த காலமது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்கள், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிக்கும் படங்கள் அனைத்துக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான்.

    இந்தஇரண்டு முன்னணி ஹீரோக்களுக்கும் பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான். ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களின் படங்களின் பாடல்களுக்கும் ட்யூன் போட்டு கொடுத்துதிருக்கிறார். பாடல் பதிவும் நடந்திருக்கிறது. எதற்காகவும் இந்த ஹீரோக்களுக்குள்ளும் 'ஈகோ' வந்துடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் எம்.எஸ்.வி.

    Nenjam Marappathillai 18

    சிவாஜி படத்திற்கு கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதுவார்.எம்.ஜி.ஆர்.படத்திற்கு கவிஞர் வாலி பாடல் எழுதுவார். இரண்டு கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கான பாடல் பதிவும் பிரச்சனையில்லாமல் நடத்திருக்கிறது.

    ஆனால் எப்போதுமே இரண்டு ஹீரோக்களின் படங்களுக்கும் பிரச்சனை இல்லாமல் கம்போஸிங், ரெகார்டிங் நடந்துவிடுமா என்ன?

    Nenjam Marappathillai 18

    ஒருநாள் சிக்கல் வந்தே விட்டது.

    எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனம் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து 'ஒளிவிளக்கு' படத்தை தயாரித்தது. ஜெமினி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் முதல்படம், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அது 100வது படம். அதனால் அந்தபடத்தின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.

    Nenjam Marappathillai 18

    பாடல் டியூன்கள் புதுசாக இருக்க வேண்டும் அனைவரையும் கவரும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று எம்.எஸ்.வியிடம் வலியுறுத்தி விட்டு போனது ஜெமினி நிறுவனம்.

    'ஒளிவிளக்கு' படத்திற்காகபாடல் சிச்சுவேஷனை எம்.எஸ்.வியிடம் சென்னார் எம்.ஜி.ஆர். நிஜத்திலும் திரையிலும் குடிப்பழக்கமில்லாத எம்ஜிஆர், ஒரு காட்சியில் குடிப்பது போல நடிப்பார்.

    "இதுவரையில் எந்தப் படத்திலும் நான் குடிப்பது போல் நடித்ததில்லை. இந்தப் படத்தில் குடித்துவிட்டு வருவதுபோல் நடிக்கிறேன். அப்பொழுது எனது மனசாட்சி என்னை குத்திக் காட்டி அறிவுரை சொல்கிறது. இதுதான் பாடலுக்கான சிச்சுவேஷன் இதற்குப் பொருத்தமான பாடல் வேண்டும். தத்துவப் பாடலாக இருக்க வேண்டும்," என்று சொல்லி விட்டு போய்விட்டார். இதை கவிஞர் வாலியிடம் எடுத்துச் சொல்லி இந்தப் பாடல் எம்.ஜி.ஆரின் இமேஜ் கெடாமல் எழுதப்பட வேண்டும் என்று சொன்னார் எம்.எஸ்.வி. அதற்கு ஏற்ற வகையில் டியூன் போட்டு கொடுத்து அதன்படி பாடலை எழுதும்படி வாலியிடம் வலியுறுத்தினார் எம்.எஸ்.வி.

    Nenjam Marappathillai 18

    எம்.எஸ்.வியிடம் ஒரு கொள்கை உண்டு. தன்னிடம் பாட்டு எழுதவருபவர்கள் யாராக இருந்தாலும் அந்தப்பாட்டின் வரிகள் முழுவதையும் தன்னிடம் தான் முதலில் படித்துக்காட்ட வேண்டும் அது இந்த டியூனுக்கு பொருந்தி வருகிறதா? இல்லையா?என்று பார்த்த பிறகுதான் மற்றவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும் எனபதில் பிடிவாதமாக இருப்பார்.

    'ஒளிவிளக்கு' படத்தின் சிச்சுவேஷனுக்கு ஏற்றவகையில் பாடலை எழுதியவுவடன் முதலில் எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் படித்துக் காட்டினார் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆரும் பாடலை ஒகே சொல்லி விட்டார்.

    எம்.எஸ்.விக்கு கோபம் வந்தது. "இந்தப் பாட்டை ஒகே பண்ண எம்.ஜி.ஆரிடமே போய் டியூனையும் ஒகே பண்ணிக்கோ," என்று கோபத்தில் சீறினார்.

    "எம்.ஜி.ஆர் அவர்கள் 'எழுதின பாட்டை வந்து படித்துக் காட்டுங்க' என்றுஅழைத்தார்.அதனால் தான் நேரில் போய் படித்துக் காட்டினேன் இது தப்பா? ஆமா... நீங்க போட்டிருக்கும் டியூனுக்கு பொருத்தமாகத்தானே பாடலை எழுதியிருக்கிறேன் பின்னே ஏன் கோபப்படறீங்க?," என்றார் கவிஞர் வாலி.

    'தைரியமாக சொல் நீ மனிதன்தானா?' என்ற பாட்டுக்காகதான் இருவருக்குள்ளும் மோதல் நடந்தது.

    எம்.எஸ்.வி. போட்ட டியூனுக்கு கவிஞர் வாலி பொருத்தமாகத்தான் பாடலை எழுதியிருந்தார். வார்த்தைகளும் அப்படியே பொருந்தி வந்தன. எம்.ஜி.ஆரும் பாடலை ஒகே பண்ணதும் சரிதான் என்பதை எம்.எஸ்.வி.உள்ளுக்குள் உணர்ந்தேதான் இருந்தார். ஆனால் அவருக்கு வேறு இக்கட்டான நிலை. அதற்காகத்தான் அந்த சண்டை.

    Nenjam Marappathillai 18

    எம்.ஜி.ஆருக்கு 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா' என்றுகவிஞர் வாலி பல்லவி எழுதியிருந்த அதே சமயத்தில் சிவாஜி நடித்து வந்த 'லட்சுமிக் கல்யாணம்' என்ற தனது சொந்தப் படத்துக்காக 'யாரடா மனிதன் அங்கே, கூட்டி வா அவனைஇங்கே...' என்று கவியரசர் கண்ணதாசன் ஒரு பல்லவி எழுதியிருந்தார். அந்தப் பாட்டுக்கும் எம்.எஸ்.வி.தான் டியூன் போட்டார் ஒலிப்பதிவும் நடந்து முடிந்தது.

    இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று அவரைத் தனியாகச் சந்தித்து இந்த இக்கட்டான நிலையை ஒளிவு மறைவு இன்றி எடுத்துச் சொன்னார் எம்.எஸ்.வி.

    "இரண்டு படத்தின் பாடல்வரிகளும் கிட்டதட்ட ஒன்னாயிருக்கு, நாளைக்கு படம் ரிலீசானதும் 'என்ன விசு நீ அங்கேயும் வேலை செய்யற இங்கேயும் வேலை செய்யற' எங்கிட்ட ஒரு வார்தத்தை சொல்லியிருக்கலாமேனு ன்னு நீங்கஎன்கிட்ட கேட்டிங்கன்னா... அதனாலதான்...," என்று இழுத்தார் எம்.எஸ்.வி.

    Nenjam Marappathillai 18

    "வாலியோட பல்லவியும் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த இக்கட்டாலதான் வேணாம்னு சொன்னேன்," என்று அதையும் வெளிப்படையாகச் சொன்னார் மெல்லிசை மன்னர்.

    கவியரசர் கண்ணதாசனுக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் மனக்கசப்பு இருந்து வந்த நேரம் அது.

    எம்.ஜி.ஆர்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, "விசு, நீ வேணும்னா கவிஞர் கிட்ட பேசிப்பாரு," என்றார்.

    எம்.எஸ்.வியும் கவிஞர் கண்ணதாசனிடம் போய் பேசினார். அவர் சத்தம் போட ஆரம்பித்தார்.

    "நான் வட்டிக்கு வாங்கி 'லட்சுமிக் கல்யாணம்' படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாட்டு சீனும் எடுத்து முடிச்சாச்சி.. இனிமாத்த முடியாது," என்று மறுத்து விட்டார்.

    மறுபடியும் எம்.ஜி.ஆரிடம் போய்நின்றார் விஸ்வநாதன். கண்ணதாசனின் கோபத்தை விளக்கிச் சொன்னார்.

    எம்.ஜி.ஆர், "விசு, கவிஞர் எழுதி ஒலிப்பதிவான அந்தப் பாடலை ரிகார்ட் பண்ணிக் கொண்டு வா, கேட்டுப் பார்க்கிறேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்," என்றார்.

    எம்.எஸ்.வி.யும் 'ஒளிவிளக்கு', 'லட்சுமிக் கல்யாணம்' படங்களின் பாடல்களான 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா' பாடலையும் 'யாரடா மனிதன் அங்கே கூட்டிவா அவனை இங்கே' பாடலையும் ரெக்கார்ட் பண்ணிக் கொண்டு வந்து எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காட்டினார்.

    இரண்டு பாடல்களையும் கேட்டஎம்.ஜி.ஆர். பதட்டப்படாமல், "விசு இரண்டு பாட்டுலேயும் 'மனிதன்' என்கிற வார்த்தை வருவதுதான் ஒற்றுமை. மற்றபடி வாலி எழுதின பாட்டு குடிகாரனைப் பார்த்து மனசாட்சி சொல்வது... கவிஞரின் பாட்டு பொதுவா ஒரு நல்ல மனிதனைத் தேடி அலைவது போன்ற சிச்சுவேஷன். இதனால் பாதிப்பு உனக்கும் வராது, எனக்கும் வராது... எதையும் மாத்த வேணாம்," என்று முடிவு சொன்னார்.

    பிரச்சனை தீர்ந்தது. இரண்டு பாடல்களுமே காலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன!

    (தொடரும்..)

    English summary
    The 18th chapter of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X