For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நெஞ்சம் மறப்பதில்லை - 29: எம்.ஜி.ஆருக்கு முதல் பாட்டு... கவிஞர் வாலி பட்ட பாடு!

  |

  -பெரு துளசிபழனிவேல்

  ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனைப் புரிந்தவர் கவிஞர் வாலி. அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவை.
  எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என அனைத்து தலைமுறை கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதி இறக்கும்போது கூட பிஸியான பாடலாசிரியராகவே இருந்தவர் கவிஞர் வாலி.

  எம்.ஜி.ஆரின் படங்களுக்கு அதிகமாக பாடல்களை எழுதி புகழிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்த அவர், எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்கள், தத்துவப் பாடல்களை என்று எழுதி அவரது அரசியல் வாழ்க்கைக்கே உறுதுணையாக இருந்தார். தான் நடிக்கும் படங்களுக்கெல்லாம் வாலி பாடல்களை எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆரால் சிபாரிசு செய்யப்பட்டவர்.

  Nenjam Marappathillai 29

  இதே வாலிதான் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடல் எழுதப் போய், அந்தப்பாடலை ஒகே சொல்ல வைப்பதற்கும், படமாக்கப்படுவதற்கும் படாதபாடுபட்டுவிட்டார். எம்.ஜி.ஆருக்காக வாலியால் எழுதப்பட்ட அந்த முதல் பாடல் பெரும் சோதனைக்குள்ளானது. இந்த அனுபவங்களை அவர் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார்.

  கவிஞர் வாலிக்கு பாடல் எழுதுகின்ற முதல்வாய்ப்பு கெம்புராஜ் அர்ஸ் தயாரித்து இயக்கி நடித்த 'அழகர் மலைக்கள்ளன்' (1958) படம் மூலம் கிடைத்தது. நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் இந்த வாயப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப்படத்தில் நடிகர் கே.பாலாஜி 'சபாஷ் மீனா', மாலினி, வி.கோபாலகிருஷ்ணன், விஜயகுமாரி, ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு கோபாலம் என்பவர்தான் இசையமைப்பாளர். வாலி முதல் பாடலை இப்படி எழுதிக் கொடுத்தார்... 'நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒருநாள் உனதம்மா...'

  இந்தப் படத்திற்கு பிறகு சில படங்களில் பாடல் எழுத வாய்ப்புகளை தேடிப் பெற்றார் வாலி. ஆனாலும் வாலியும் ஒரு பாடலாசிரியர் என்ற அங்கீகாரம் சரியாக அமையவில்லை. போராட்டம் தொடர்ந்தது.

  ஒருநாள் அரசு பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பாடல் எழுதும் வாய்ப்பு தேடி வந்தது... ஓடிப் போய்ப் பார்த்தார் வாலி. அங்கே டைரக்டர் ப நீலகண்டன், இசையமைப்பாளர் டிஆர் பாப்பா ஆகியோர் இருந்தார்கள்.

  Nenjam Marappathillai 29

  "நீங்க நல்லா பாட்டு எழுதுவீங்கனு மா.லட்சுமணன் சிபாரிசு பண்ணார். அதனால்தான் உங்களை அழைத்திருக்கிறோம்," என்று சொன்னபடி வாலியை வரவேற்றார் டைரக்டர் ப.நீலகண்டன். மா.லட்சுமணனுக்கு மனதிற்குள் நன்றி சொன்னார் வாலி. ஏற்கனவே இசையமைப்பாளர் டிஆர் பாப்பா மீது கவிஞர் வாலிக்கு ஒரு மரியாதை உண்டு. இவருடைய இசையில் பல பாடல்கள் பிரபலமாகியிருக்கின்றன.

  "இந்தப் படத்தின் கதாசிரியர் யார் தெரியுமா? கதாநாயனாக நடிக்க போகிறவர் யார் தெரியுமா?," என்று கேள்விமேல் கேள்விகேட்டுக் கொண்டிருந்தார் டைரக்டர் ப.நீலகண்டன்.

  "தெரியாது சார்..." என்று மெல்ல தலையாட்டினார் கவிஞர் வாலி. ப.நீலகண்டன் தொடர்ந்தார்.

  இந்தப் படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணா, கதாநாயகன் எம்.ஜி.ஆர், இயக்குநர் நான்தான் ப.நீலகண்டன்," என்று சொல்லி முடித்ததும் கவிஞர் வாலிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி ஒரு பெரிய வாய்ப்பு வரும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. 'பேரறிஞர் அண்ணாவின் கதைக்கு, எம்.ஜி.ஆர். நாயகராக நடிக்கும் படத்திற்கு பிரபல இயக்குvர் ப.நீலகண்டன் இயக்கத்தில் நான் பாடல் எழுதுவேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை'. மனதிற்குள் துள்ளி குதித்தார்.

  Nenjam Marappathillai 29

  ப.நீலகண்டன் தொடர்ந்து, "இந்தப் படத்தின் பெயர் 'நல்லவன் வாழ்வான்', இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராஜ சுலோச்சனா நடிக்கிறாங்க. அவர்கள் இரண்டுபேரும் இணைந்து பாடும் டூயட் பாடலை எழுதத்தான் உங்களை கூப்பிட்டிக்கிறோம்," என்று பாடல் காட்சிக்கான சூழ்நிலையை விளக்கினார் ப.நீலகண்டன். வாலி எழுதிக் கொடுத்தார்.

  'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
  சிந்திய கண்ணீர் மாறியதாலே...'

  ப.நீலகண்டனுக்கு வாலி எழுதிய பாடல் பிடித்துவிட்டது. அடுத்து படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணாவிடம் வாலியின் பாடல்போனது. அதைப் படித்துப் பார்த்த அண்ணா சிலவரிகளைக் குறிப்பிட்டு சொல்லி அவற்றை மாற்றாமல் அப்படியே பாடலாக்குங்கள் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி அனுப்பினார். அண்ணாவின் பாராட்டு பெற்றதில் கவிஞர் வாலிக்கு மகிழ்ச்சி. 'நல்லவன் வாழ்வான்' (1961) படத்தின் படப்பிடிப்பு சாரதாஸ் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிந்தது. எம்.ஜி.ஆர் - ராஜசுலோக்சானா நடித்துக் கொண்டிந்தார்கள். படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆர். பாடலை கேட்க சாரதாஸ் ஸ்டுடியோவின் ஏ.ஸி.அறைக்கு வந்தார். வாலியும், டி.ஆர்.பாப்பாவும் காத்திருந்தார்கள்.

  Nenjam Marappathillai 29

  எம்.ஜி.ஆரை ப.நீலகண்டன் அழைத்து வந்தார்.

  "இவர்தான் பாடலாசிரியர் வாலி" என்று எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

  உடனே எம்.ஜி.ஆரும் "நான்தான் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகர்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
  "பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லையே... என்னண்ணே?" என்றார் வாலி.

  "உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய டைரக்டர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே... அதனால்தான் என்ன அறிமுகப்படுத்திக் கொண்டேன்," என்றார் எம்.ஜி.ஆர்.

  டி.ஆர். பாப்பா பாடி காட்டினார். எம்.ஜி.ஆருக்கு பாடல் பிடித்துவிட்டது. வாலிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, கடவுளை வேண்டிக் கொண்டார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இந்தப் பாடல் ஒ.கே. ஆகிவிட வேண்டும் என்று. பாடலுக்கான ரிக்கார்டிங் வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாடலைக் கேட்டார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை. சிலமாற்றங்கள் செய்ய வேண்டும் என்றார். மாற்றங்கள் செய்ய வேண்டியதற்கான நேரம் போதுமானதாக இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் சாரதா ஸ்டுடியோவில் பாடல் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் இந்தப் பாடலை பாடவேண்டிய பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு உடல நலம் சரியில்லாமல் போனது. ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. வந்த இந்த பெரிய வாய்ப்புக்கு இப்படி சோதனைகள் வருகின்றதே என்று வாலிக்கு வேதனை அதிகமாகிவிட்டது.

  Nenjam Marappathillai 29

  பிறகு ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராஜனின் சாரீரம் உதவும்படியாக இல்லை என்று கூறி ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

  இறுதியில் இந்தப்பாட்டு ராசியில்லாத பாட்டு அதனால் மருதகாசியை வரவழைத்து வேறு பாட்டு எழுத வைத்து ஒலிப்பதிவு செய்வோம் என்று டைரக்டர் ப.நீலகண்டன் முடிவெடுத்தார். மருதகாசி வரவழைக்கப்பட்டார்.

  மருதகாசியும் வாலியின் பாடலை வாங்கி படித்தார். "இந்தப் பையன் நல்லாதான் பாடலை எழுதியிருக்கிறான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை. இந்தப் பாட்டையே வைத்துக் கொள்ளுங்கள்... பாப்புலராகும்," என்று சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு வழியில்லாமல் வாலியின் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்கு போனார்கள்.

  நியூட்டன் ஸ்டுடியோடிவில் பாடலை முழுவதுமாக படம் பிடிக்க பிரம்மாண்டமான செட் போட்டார்கள். ஒருமலை, வழியும் அருவி, அருவி வந்து விழும் தடாகம் என அழகான செட். எம்.ஜி.ஆர், ராஜசுலோச்சனா ஆடிப் பாடுவதுபோல நடன இயக்குநர் ஒத்திகைப் பார்த்தார்.

  முதல் ஷாட். எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு ஏற்ப வாயசைத்துக் கொண்டே கரையிலிருந்து தடாகத்திற்குள் இறங்கினார். கரை உடைந்து ஃப்ளோர் முழுவதும் வெள்ளக்காடாயிற்று. படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டது. வாலி துவண்டு போனார்.
  'இந்த பாடலுக்கே இத்தனை தடங்கள் என்றால் நம் எதிர்காலம் என்னாவது?'

  நல்லவேளை செட்டு சீர் செய்யப்பட்டு பாடல்காட்சியும் நல்லவிதமாக படமாக்க்கப்பட்டது. படத்திலும் இடம் பெற்றது. இந்தப்படம் சென்சாருக்குப் போனபோது இறுதியில் வரும் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாக இருப்பதாக சரணத்தில் உள்ள சிலவரிகளை சென்சார் வெட்டியது.
  இத்தனை வேதனை, சோதனைகளுக்குப் பிறகுதான் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் இடம் பெற்று படமும் வெளிவந்தது.

  'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தின் தலைப்பின் படி எத்தனை சோதனை, வேதனை வந்தாலும் 'நல்லவன் வாழ்வான்' என்பது வாலியின் வாழ்க்கையில் உண்மையானது.

  'நல்லவன் வாழ்வான்' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆருக்காக அதிகமான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் வாலிதான் என எம்ஜிஆர் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

  -தொடரும்.

  English summary
  Peru thulasi Palanivel's Nenjam Marappathillai movie series, 29th chapter
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X