twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை- 9: எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாமல் வெற்றிக் கொடி நாட்டிய படம்!

    |

    -பெரு துளசிபழனிவேல்

    தமிழ் சினிமா உலகிற்கு தரமான படங்களை தயாரித்தளித்திருக்கும் நிறுவனம் ஏவிஎம். இதன் அதிபர் ஏவி மெய்யப்பன் அவர்களின் பெயரின் சுருக்கம்தான் 'ஏவிஎம்'!

    இந்த நிறுவனம் கருப்பு வெள்ளை காலத்தில் ‘சபாபதி' (1941), ‘நாம் இருவர்', ‘வேதாள உலகம்', ‘வாழ்க்கை', ‘ஓர்இரவு', ‘பராசக்தி', ‘அந்தநாள்', ‘களத்தூர் கண்ணம்மா', ‘குழந்தையும் தெய்வமும்', ‘ராமு', ‘மேஜர் சந்திரகாந்த்', என்று பல படங்களைத் தயாரித்து வெளியிட்டது.

    அப்பொழுது திரு.ஏவி.மெய்யப்பன் அவர்களைச் சந்திப்பவர்களெல்லாம் 'நீங்கள் ஏன் கலரில் படம் எடுக்கக் கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு ஏவி மெய்யப்பன் அவர்கள், "கலர் படம் எடுக்கணும்னா நல்ல கலர்புல்லான ஹீரோ வேண்டும். அதற்கு பொருத்தமான கதை வேண்டும். அதைச் சிறப்பாக எடுத்து தருகின்ற டைரக்டர் வேண்டும். இவைஅனைத்தும் ஒருங்கே அமைந்தால் தான் சிறப்பான கலர் படம் எடுக்க முடியும்," என்று சொன்னார்.

    Nenjam Marappathillai - 9

    அவர் வாக்கும் பலித்தது. அவருக்கேற்ற கலர்புல்லான ஹீரோவாக எம்.ஜி.ஆர். அமைந்தார். நல்ல கதையும், அதைச் சிறப்பாக எடுக்கக்கூடிய டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரும் அறிமுகமானார். அப்புறம் என்ன... ஏவிஎம் நிறுவனமும் கலம் படம் எடுக்கின்ற முயற்சியில் இறங்கியது.

    இதற்கு நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களும் ஏற்பாடுகள் செய்தார். அவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஏவி மெய்யப்பன் அவர்களின் புதல்வர் சரவணன் ஆகியோருக்கு பொதுவான நண்பராக இருந்தார். எம்.ஜி.ஆரைச் சந்தித்து கலர் படம் எடுப்பதற்கு பேசியவர் அசோகன்தான். ஏவிஎம் எடுக்கும் கலர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆரும் சம்மதித்தார் (தமிழில் முதல் கலர் படம் எடுத்த பெருமைக்குரியவரே எம்ஜிஆர்தான்.. அது தனி கதை) .

    இந்தச் செய்தியை தனது தந்தை மெய்யப்பன் அவர்களிடம் தெரிவித்தார் சரவணன். எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து கலர் படம் எடுப்பதற்கு ஏவி மெய்யப்பன் அவர்களும் முழுமனதோடு சம்மதித்தார்.

    எம்ஜிஆரைச் சந்திக்க டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரை அனுப்பி வைத்தார்கள்.

    இவர் ஏற்கனவே எம்.ஜி.ஆர். நடித்த ‘குமாரி' படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் பத்மனாபன் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆருடன் நெருங்கிய பழக்கம் இருந்ததால் இருவரும் சந்தித்து ‘குமாரி' காலத்து சம்பவங்களை பற்றி மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு கதையைச் சொன்னார். ஒரு பெரிய தொழிலதிபர் ஓய்வு எடுப்பதற்காக தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் தனது எஸ்டேட்டில் வந்து தங்குகிறார். அங்கு அழகான ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இருவருக்கும் ஏற்படும் காதலையும், ஊடலையும் வைத்துதான் இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது என்றார்.

    Nenjam Marappathillai - 9

    கதையைக் கேட்டஎம்.ஜி.ஆர், ‘‘திருலோக் இந்தக் கதைஎன்னுடையபடங்களின் ஃபார்முலாவில் எந்த வகையிலும் ஒத்துப் போகவில்லை. இது முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பு. இதைப் படமாக்கும் விதத்தில் தான் இதன் வெற்றி இருக்கிறது. நாங்களெல்லாம் பொம்மைகளாக இருக்கப் போகிறோம். ஆட்டுவிக்கப் போகிறவர் நீங்கள் தான். இதோ நான் தயார்," என்றார்.

    ஏவிஎம் சரவணன், நடிகர் அசோகன் ஆகிய இருவரின் முயற்சியால் எம்.ஜி.ஆர். நடிக்கவும், ஏவிஎம் அதை எடுக்கவும் ஒப்புக் கொண்டார்கள்.

    இந்தப் படத்தில் நடிப்பதற்காக 72 நாள் கால்ஷீட் கொடுத்து உதவினார் எம்.ஜி.ஆர்.

    இந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ.3.25 லட்சம். கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்ட சரோஜாதேவிக்கு 90 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

    இந்தப் படத்திற்கு ‘அன்பே வா' என்று அழகான பெயரைச் சூட்டினார்கள்.

    Nenjam Marappathillai - 9

    இது ஏவிஎமின் 50வது படமாகத் தயாரானது. இது ஏவிஎம் நிறுவனம் எடுக்கும் பெரிய பட்ஜெட் படம். திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து நுணுக்கமும் அறிந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் திருலோகச்சந்தர் கவனமாகவும், மிகுந்த ஈடுபாட்டுடணும் பணியாற்றினார்.

    எம்.ஜி.ஆரின் வெற்றிப் படத்திற்கென்று சில இலக்கணங்கள் உண்டு. அதை டைரக்டர் திருலோகசந்தர் வரிசையாக பட்டியலிட்டுக் காட்டுகிறார்:

    "அவர் ஏழையாக, எளியவராக இருப்பார்.

    ஏழைகளின் கஷ்டங்களைப் புரிந்து அதைத் துடைத்தெடுக்கப் பாடுபடுவார்.

    விதவிதமாக முரடர்களைச் சந்திப்பார். அவர்களுடன் பயங்கரமாகச் சண்டைப் போடுவார். அவருக்கு நோய்வாய்ப்பட்ட அல்லது விதவையான புருஷனால் கைவிடப்பட்ட ஒரு தாய் இருப்பாள். அவள் சொல்லைத் தட்டமாட்டார். அல்லது கற்பழிக்கப்பட்ட தங்கைக்காகப் போராடுவார்.

    இவர் வெறுத்துச் செல்ல செல்ல பெண்கள்தான் அவரைத் தொடர்வார்கள்.

    அறத்துக்கு எதிரான எந்த விஷயமும் அவர் பாத்திரத்தில் இருக்காது. தன்னைப் படங்களில் பார்ப்பவருக்கு எந்த வகையிலும் எதிர்மறைச் சிந்தனை வரக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

    வில்லனைப் பழிவாங்க பல விதமான வேஷங்களைப் போடுவார்...

    -இப்படி பட்டியல் தொடரும்...

    ஆனால் ‘அன்பேவா'வில் இவை எதுவும் இல்லை. அவர் முதல் காட்சியிலேயே காட்டப்படுவார். பிறவிக் கோடீஸ்வரர், மேல்படிப்பிற்காக வெளிநாடெல்லாம் சென்று படித்தவர். விளையாட்டுகளில் பல பரிசுகளைத் தட்டிச் சென்றவர். ஆகாய விமானத்தில் வந்து இறங்குவார். அவருக்கு போடப்படும் மாலைகள் மலைபோல் குவிகிறது. அழகான ஆண்மையான புருஷன், குறும்புக்காரர், அவர் மனதுக்குப் பிடித்த அழகான பெண்ணைச் சந்திக்கிறார். தான் யார் என்று காட்டிக் கொள்ளாமல் அவளிடம் தன் மனதை இழக்கிறார். தொடர்ந்து காதலிக்கிறார்.

    Nenjam Marappathillai - 9

    இவரிடம் போராடக் கூடிய வில்லனே கிடையாது. சண்டைக் காட்சிகள், கிடையாது. இனிப்பு, சிரிப்பு, மகிழ்ச்சி கலந்த பலகாரம் ‘அன்பேவா'. ஏழைகள் யாரையும் அவர் இதில் காப்பாற்றிவிடவில்லை. நியாயம் கேட்கும் சீன்கள் கிடையாது. காதலியிடம் தோற்றுப் போவார். நடனங்கள் நிறைய உண்டு. பொதுவாக எந்தப் படத்திலும் எம்.ஜி.ஆர். மூவ்மெண்ட்டெல்லாம் கொடுத்து நடனமாட மாட்டார் என்று கூறுவார்கள்.

    அதற்காகதான் ‘அன்பேவா' படத்தில் எம்.ஜி.ஆரை மூவ்மெண்ட் கொடுத்து ‘புலியைப் பார் நடையிலே' என்ற பாடல் காட்சியில் அழகாக ஆடவைத்து அந்தக் காட்சியைப் படமாக்கினோம்," என்றார் டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர்.

    அந்தப் பாடல் கட்சியில் அவ்வளவு அற்புதமாக ஆடியதுபோல் எந்தப் படத்திலும் இப்பபடி ஒரு நடனத்தை ஆடியிருக்கமாட்டார் எம்.ஜி.ஆர். இதே போன்று சர்க்கஸில் இருந்த ஒரு குண்டு நடிகரை தலைக்குமேல் தூக்கி அதன்பிறகு கீழே போடுபோல் காட்சியைப் படமாக்க வேண்டும். இந்தக் காட்சியில் உண்மையிலேயே குண்டு நடிகரை அப்படியே தலைக்கு மேல் தூக்கி வைத்திருந்து கீழே போட்டார் எம்.ஜி.ஆர். படக் குழுவினர் அனைவரும் அதிர்ந்து போய்விட்டார்கள்.

    "ஏவிஎம்மின் ‘அன்பேவா' படத்தைப் பொறுத்தவரை அவருக்கு ஏற்றாற்போல் நாங்கள் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. எம்.ஜி.ஆரும் எந்த மாற்றத்தையும் செய்யச் சொல்லவில்லை. கதைப்படி, நாங்கள் கேட்டப்படியெல்லாம் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார் எம்ஜிஆர்," என்கிறார் ஏவிஎம் நிறுவன அதிபர்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன்.

    ‘அன்பேவா' படத்தின் 100வது நாள் வெற்றிவிழா சென்னை காசினோ தியேட்டரில் கொண்டாடப்பட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக கலர் இசைத் தட்டு வெளியிடப்பட்டதும் இந்தப் படத்துக்குத்தான்!

    -தொடரும்...

    English summary
    The 9th episode of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai cinema series. In this issue he writes about MGR's blockbuster movie Anbe Vaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X