twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைக்கு யாரும் வாரிசாக முடியாது! - இளையராஜா

    By Chakra
    |

    Illaiayraja Birthday
    இசை எல்லாருக்கும் சொந்தமானது. யாரும் அதற்கு வாரிசாக முடியாது, என்றார் இசைஞானி இளையராஜா.

    ஜூன் 2ம் தேதியான நேற்று தனது 67வது பிறந்த நாளைக் கொண்டாடினார் இளையராஜா. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் அவர் பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

    இதனையொட்டி, திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடம் அமைந்துள்ள பிரசாத் ஸ்டுடியோவில் குவிந்தனர்.

    பிறந்த நாள் விழாவை ஃபெப்ஸி அமைப்பும், ஜி சிவாவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன், ஃபெப்ஸி ஜி சிவா, நடிகர்-ஒளிப்பதிவாளர் நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்று, இளையராஜாவை வாழ்த்தினர்.
    பின்னர் மூன்று ஆசிரமங்களைச் சேர்ந்த 1000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினார் இளையராஜா.

    ஃபெப்ஸி சார்பில் கொண்டுவரப்பட்ட கேக்கை வெட்டியவர், ராம நாராயணன், விசி குகநாதன் உள்ளிட்டோருக்கு ஊட்டினார்.

    இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா சார்பில் கேக் வரவழைக்கப்பட்டது. அதையும் வெட்டிய ராஜா, அனைவருக்கும் பரிமாறச் சொன்னார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், “உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது. ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது.

    அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறையும் பிறந்த நாள் விழா வேண்டாம் என்றேன். ஆனால் இந்த குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கவேண்டும் என்ற உங்களின் அன்புக்காக இந்த முறை கொண்டாடுகிறேன்.

    என்னிடம் எந்த பிறந்த நாள் செய்தியும் கிடையாது. இந்த நாளில், ஏராளமான குழந்தைகளுக்கு உணவு வழங்கியது மிகுந்த நிறைவாக உள்ளது…" என்றார்.

    பின்னர் அவரிடம், “உங்கள் இசை வாரிசு யார்?" என்று கேட்டனர்.

    சற்றும் யோசிக்காத ராஜா, 'நீங்கள்தான்' என்றார். பின்னர், “இந்த உலகம் ரொம்பப் பெரிசு. இதில் அனைவருக்குமே சம பங்குண்டு. இங்கே உரிமை கொண்டாட என்ன இருக்கிறது. எனக்கென்று இசை வாரிசுகள் யாருமில்லை. இசைக்கு யாரும் வாரிசாகவும் முடியாது. அவரவர் திறமையில் முன்னே வர வேண்டியதுதான்" என்றார்.

    பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பல பாடகர்கள், கவிஞர்கள் ராஜாவுக்கு வாழ்த்துக் கூறிச் சென்றவண்ணமிருந்தனர்.

    ராஜா பிறந்த நாளை கொண்டாடிய கேப்டன் டிவி:

    இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, தமிழ் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. ஆனால் விஜயகாந்தின் கேப்டன் டிவி மட்டும் காலை முதல் மாலை வரை இளையராஜா பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் அருமையான பாடல்களையும் தொடர்ந்து ஒளிபரப்பியது.

    மு.மேத்தா, கார்த்திக் ராஜா, பாடகர்கள் திப்பு ஹரிணி பேட்டிகள், ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், அவரது பேட்டி என தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X