இமயத்துடன் இணையும் சிகரம்!

பல சாதனை நடிகர்களை வடித்தெடுத்த கரங்களுக்குச் சொந்தக்காரர்களான பாரதிராஜாவும், கே.பாலச்சந்தரும் இதுவரை இணைந்து எதையும் படைத்ததில்லை. அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது.
இருவரும் இணைவது கேமராவுக்கு பின்னால் அல்ல, மாறாக முன்னால். அதாவது இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். தாமிரா என்ற புதுமுக இயக்குநர்தான், இந்த இரு இமயங்களையும் இயக்கும் பாக்கியம் பெற்றவர்.
தாமிரா, இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் இது என்றாலும் கூட பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டவர். அவரிடம் பல காலமாக உதவியாளராக இருந்தவர். வசனகர்த்தாவாக பாலச்சந்தரின் பல படங்களிலும், டிவி தொடர்களிலும் கருத்தாழம் மிக்க வசனங்களை எழுதிய அனுபவம் உடையவர்.
தாமிராவுக்கு, பாலச்சந்தரையும், பாரதிராஜாவையும் இணைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. இருவரையும் சந்தித்து கதையையும் கூறினார். கதையைக் கேட்டதுமே இருவரும் சட்டென்று நடிக்க ரெடி என்று கூறி விட்டார்களாம்.
தாமிரா இயக்கப் போகும் இந்தப் புதிய படத்தில் பாரதிராஜாவுக்கும், பாலச்சந்தருக்கும் முக்கியக் கேரக்டர்களைக் கொடுத்துள்ளாராம் தாமிரா. இப்படத்தைத் தயாரிக்க இரு பெரும் தயாரிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளாராம்.
விரைவில் முறைப்படியான அறிவிப்பும், நாயகன், நாயகி குறித்த இதர விவரங்களையும் தாமிரா வெளியிடவுள்ளார்.


Click it and Unblock the Notifications











