ஊதா கலரு ரிப்பன் பாடலை நிராகரித்த பிரபல இயக்குநர்... யுகபாரதி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.
வழக்கமாக ஒரு இசையமைப்பாளரும் ஒரு பாடலாசிரியரும் இணைந்து வெற்றிப் பாடல்களை கொடுப்பதை தாண்டி, அவர்கள் பணிபுரியும் படங்களும் வெற்றி அடைவதில் முக்கிய பங்காற்றுவர். சில சமயங்களில் இந்தக் கூட்டணியில் இயக்குநர்களும் நடிகர்களுமே இணைந்து கொள்வார்கள்.
அந்த வகையில் இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதியின் கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உண்டு. சில படங்களில் ஓரிரு பாடல்களில் மட்டுமே கூட்டணி அமைத்திருந்தாலும், மொத்தமாக இவர்கள் இணைந்த படங்களின் பட்டியலும் நீளும்.
மனம் கொத்திப் பறவை, கும்கி, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தொடரி, கயல், சீம ராஜா என அவர்கள் கூட்டணியில் வந்த வெற்றி படங்களும் பாடல்களும் பல உள்ளன. இப்படங்களில் அனைத்து பாடல்களையும் யுகபாரதிதான் எழுதி இருப்பார்.

2 படம் 2 ஹீரோஸ்
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தை தயாரித்திருந்த மதன் அவர்கள் அதில் நடித்த விமல் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து தனித்தனியாக இரண்டு படங்களை தயாரித்தார். ஒன்று எழில் இயக்கத்தில் தேசிங்கு ராஜா இன்னொன்று பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இரண்டு படங்களுக்குமே இமான் தான் இசை யுகபாரதிதான் பாடல்கள்.

எழிலின் விமர்சனம்
வழக்கமாக இவர்கள் உருவாக்கும் பாடல்களை இயக்குநர் எழில் எந்த விதமான மாற்றங்களும் சொல்லாமல் அப்படியே எடுத்துக் கொள்வாராம். ஆனால் தேசிங்குராஜா திரைப்படத்திற்காக இசையமைக்கப்பட்ட ஊதா கலரு ரிப்பன் பாடலை கேட்ட எழில்,"உங்கள் கூட்டணியில் வரும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த எண்ணத்தை குறைக்கும் விதத்தில் ஏன் இவ்வாறு பாடல் உருவாக்குகிறீர்கள்" என்று சொல்லி அந்த பாடலை நிராகரித்துவிட்டாராம்.

பொன்ராமிற்கு கிடைத்த ஜாக்பாட்
அப்போது அதே கம்பெனிக்கு படம் இயக்கிக் கொண்டிருந்த பொன்ராமிற்கு இந்த பாடலை போட்டு காட்ட, அவருக்கு பிடித்துப் போய் தனது படத்தில் பயன்படுத்திக் கொண்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட வெற்றியின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது இந்தப் பாடல்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இருப்பினும் தேசிங்கு ராஜா பாடல்களுக்கும் நல்ல ரீச் கிடைத்தது.

இமான் - யுகபாரதி - சிவகார்த்திகேயன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான் சிவகார்த்திகேயனுக்கு முதல் பிளாக் பஸ்டர் ஹிட். நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் இமான் மற்றும் யுகபாரதியின் பங்களிப்பு மிக முக்கியமானது. சிவ கார்த்திகேயன் முதன் முதலில் பாடகராக அறிமுகமானதும் இவர்கள் கூட்டணியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











