ஆர்கே நடிக்கும் புலிவேஷம்... மீண்டும் ஒரு சின்னத்தம்பி!

இந்தப் படத்துக்கு புலிவேஷம் என பெயர் சூட்டியுள்ளார் வாசு. எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களின் ஹீரோ ஆர்கே நடிக்கும் இந்தப் படத்தில் நாயகிகளாக இரு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள்.
கன்னடத்தில் ஆப்தரக்ஷகா வெற்றி தந்த உற்சாகத்துடன், 'புலிவேஷம்' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பி வாசுவிடம், பேசினோம்.
அவர் கூறுகையில், "ஒரு படத்தின் வெற்றியை மூணு விதமா பார்க்கலாம். ஒரு படம் மக்களுக்கும் பிடிக்கணும். அடுத்து அந்தப் படத்தை உருவாக்கும் நமக்கும் அதில் திருப்தி இருக்கணும். மூணாவதா தயாரிப்பாளர்களையும் அந்தப் படம் சந்தோஷப்படுத்தணும். ஆப்தரக்ஷகா இந்த மூன்று விஷயங்களிலுமே ஜெயித்திருக்கிறது.
இந்தப் படம் எனக்கு முன் ஒரு சவாலாகவே நின்றது என்பதுதான் உண்மை. காரணம் ஆப்தமித்ராவின் பெரும் வெற்றி. அதிலும் விஷ்ணுவர்தன் மறைவுக்குப் பிறகு அவருடைய கடைசி படமாக அமைந்த இதனை வெற்றிப் படமாக்கித் தர வேண்டுமே என்ற எண்ணம்தான் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
இப்போது ஆப்தரக்ஷகாவை தமிழில் இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
ரஜினி படம் பார்த்தாரா?
படம் அவருக்குக் காண்பிக்கப்பட்டது. ரசித்துப் பார்த்தவர், இறுதிக் காட்சிகளில் நெகிழ்ந்து கண்கலங்கிவிட்டார். பாராட்டினார். இந்தப் படம் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து படம் பார்த்த வரைக்கும் தொடர்பு கொண்டு, படம் எப்படி வந்திருக்கிறது என்று அக்கறையுடன் ரஜினி சார் விசாரித்து வந்தார்.
இப்போது படத்துக்கு கிடைத்த வரவேற்பை அறிந்து, சமீபத்தில் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் ரஜினி.
புலிவேஷம் குறித்து...
எல்லா நடிகர்களோடும் சீனியர் ஜூனியர் என்ற பேதமில்லாமல் பணிபுரிந்து வருகிறேன். சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டு படங்கள் பண்ணிய பிறகு, தமிழில் இந்த புலிவேஷம் படத்தை இயக்கி வருகிறேன்.
புலிவேஷம் சாதாரண கதையல்ல. எனது சின்னத்தம்பி மாதிரி கதையம்சம் கொண்டது. கிராமத்திலும் நகரத்திலும் பயணிக்கிற ஒரு வெகுளி இளைஞனின் கதை இது.
அந்த இளைஞன் வாழ்க்கையை நகரம் எப்படி புரட்டிப் போடுகிறது? அன்புக்காகவும், தான் வைத்த பாசத்துக்காகவும் அந்த வெகுளி இளைஞன் எந்த லெவலுக்குப் போகிறான் என்பதை புலிவேஷம் காட்டப் போகிறது.
கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகளை தென்காசி அருகே படமாக்கியுள்ளோம். தனது ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்கும் ஆர்கே நாயகனாக நடிக்கிறார். அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய ஏற்றத்தைத் தரும்.
இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார் ..." என்றார் பி வாசு.


Click it and Unblock the Notifications











