For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'குயிலே கவிக்குயிலே....' காவியப் பாடல்கள் தந்த கவிஞர் பஞ்சு அருணாச்சலம்!

  By Shankar
  |

  அன்னக்கிளி திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் இசைவெள்ளத்தில் நனைந்துகொண்டிருந்த நேரம். அதையடுத்து ஒரே பறவைப் பெயர்களாகத் தமிழ்த் திரைப்படங்கள் தலைப்பைச் சூட்டிக்கொண்டு நின்றன - அன்னக்கிளி, சிட்டுக்குருவி, கவிக்குயில், பாலூட்டி வளர்த்த கிளி, செல்லக்கிளி, மாந்தோப்புக் கிளியே, உல்லாசப் பறவைகள் என.

  அன்னக்கிளி படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தாம் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் 'கவிக்குயில்' என்னும் படத்தைப் பஞ்சு அருணாசலம் எடுத்தார். கவிக்குயில் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "குயிலே கவிக்குயிலே..." எனும் பாடல் நம் தாய்மார்கள் பருவத்தில் நின்றபோது அவர்தம் மனத்தைக் கவ்வி மந்திரமாகிய பாடல்.

  இந்தப் பாடலை இயற்றியவர் படத்தின் முதலாளியாகிய பஞ்சு அருணாசலம் ஆவார். பஞ்சு அருணாசலம் கவிஞர் கண்ணதாசனோடு இரத்த உறவுடையவர். கண்ணதாசனும் முதன்மையாக ஒரு படமுதலாளிதான். அவரோடு ஆரம்பம் முதலே உதவியாளராகப் பணியாற்றினார் பஞ்சு அருணாசலம். காரைக்குடிச் செட்டியாராகிய பஞ்சு அருணாசலத்துக்குப் படத்தொழில் கைவரப் பெற்றதைப் போலவே கண்ணதாசனின் நிழல்பட்டுப் பாடலியற்றும் ஆற்றலும் நல்லுருவம் பெற்றது. இளையராஜாவை அறிமுகப்படுத்தியது அவரின் தலையாய பெருமை. இறுதிவரை அவரெடுத்த எல்லாப் படங்களுக்கும் ராஜாவே இசையமைத்தார்.

  Panju Arunachalam as a poet

  பிற்காலத்தில் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலம் யுவன் ஷங்கர் ராஜாவையும் திரையுலகுக்குள் கொணர்ந்தார். பஞ்சு அருணாசலம் தாம் தயாரிக்கும் எல்லாப் படங்களுக்கும் திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களின் பொறுப்பை ஏற்பார். ஆளவந்தான் படத்தின் திரைக்கதையைத் தம்மோடு கலந்தாலோசித்திருந்தால் அத்திரைப்படம் அப்படியொரு தோல்வியைத் தழுவியிருக்காது என்று பிற்காலத்தில் பத்திரிகைப் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் பஞ்சு அருணாசலம். அந்த அளவிற்குத் திரைக்கதை விற்பன்னர்.

  பஞ்சு அருணாசலம் திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல் கலங்கரை விளக்கம் படத்தில் இடம்பெற்ற 'பொன்னெழில் பூத்தது புதுவானில்... வெண்பனி தூவும் நிலவே நில்...' என்னும் பாடல்தான். கண்மணியே காதல் என்பது கற்பனையோ - காதலின் தீபம் ஒன்றை ஏற்றினாளே என் நெஞ்சில் - காதல் ஓவியம் பாடும் காவியம் - அன்னக்கிளி உன்னத் தேடுதே - என்னுயிர் நீதானே... - என ஏராளமான பாடல்கள் அவருடையவை.

  திகட்டல் இல்லாத சொற்களைக்கொண்டு வலிந்து புகுத்தாத மொழிநடையில் சரளமான பொருள் விரிவைத் தரும் கற்பனையோடு எழுதுவது பஞ்சு அருணாசலத்தின் பாணி. மெட்டோடு அத்துணை இலகுவாகப் பொருந்தும் சொற்றொடர்களை அமைப்பதில் நிபுணர். ஆகாத புருஷனும் வாழாத பொண்டாட்டியும் ஊர்கோலம் போவதைப் போல இருக்கின்றது இன்றைய மெட்டும் பாட்டும். மெட்டில் குழைந்து மேலெழும் பஞ்சு அருணாசலத்தின் வரிகள் காலங்கடந்தும் கேட்டாரைப் பிணிக்கும் தகைமை உடையன.
  'குயிலே... கவிக்குயிலே...' பாடல் கவிக்குயில் திரைப்படம் வெற்றிபெறாத போதும் எங்கும் ஒலித்த பாடல். அதற்கு அந்தப் பாடல் வரிகளின் தெளிந்த நீரோட்டமான அமைப்பே காரணம். இளையராஜாவை இசைஞானி என்று இந்தப் பாடல் பதிவான அன்றே அறிவித்திருக்க வேண்டும்.

  பழந் தமிழில் தூது இலக்கியம் என்ற சிற்றிலக்கிய வகை உண்டு. தம் நிலை, பாடு, வாதை, மகிழ்வைத் தம் மனத்துக்குகந்தோரிடம் எடுத்துரைத்து வா என்று 'என்நிலையைத் தன்னிலை எனக்கருதி மயங்கும்' பேதை அறிவுடைய மென்பொருளிடம் (கிளி, குயில், தென்றல்) முறையிடும் முறை அந்த இலக்கியத்தின் மையச்சரம். அத்தகைய தூது வகைத் திரைப்பாடலாகும் இது.
  குயிலிடம் தம் மணவாளனைச் சந்தித்து தம் நிலையை விளக்கிக் கூறி அழைத்து வா என்று அரற்றுகிற இளமங்கையின் மனக்குரல். 'குயிலே... யார் வருகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறாய்... அவர் வந்தாரா...வரவில்லையே... யாரை நினைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாய்... அந்தப் பாடலில் இழையும் உறவின் புரியாப்புதிரைப் பொருள்கூறி விளக்க அவர் வந்தாரா... இல்லையே...' என்பதுதான் பல்லவியில் மலரும் ஏக்கம். 'அதனால் குயிலே என்நிலை கூறி அவரை வரச்சொல்' என்று மன்றாடுவதுதான் அடுத்து வரப்போகிற சரணங்களின் சாரம்.

  குயிலே கவிக்குயிலே
  யார் வரவைத் தேடுகிறாய்
  மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா ?
  குயிலே கவிக்குயிலே
  யாரை எண்ணிப் பாடுகிறாய்
  உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா ?

  'இளமை நடனமாடுகிற என் தேகம் என்னும் பழத்தோட்டத்தில் காய்கள் யாவும் பழுத்துவிட்டன... அந்தக் கனிவின் இனிமையையும் சுவையையும் உட்கொண்டு இன்பம் காண வேண்டிய என் உள்ளம் உறவேதுமின்றியே தனிமையில் ஆடுகிறது... கண்களாலும் நான் ஜாடை காட்டி அழைத்தேன்... நெஞ்சம் வாடையில் வாடுகிறது... அதனால் குயிலே... அவரை வரச்சொல்... இது முகந்திருப்பிக் கொள்ளாது... மோகனம் பாடும் பெண்மையடி... அதைச் சொல்' என்று முதல் சரணத்தில் ஒரு பெண்ணாகவே மாறி விட்டு விளாசுகிறார் பாடலாசிரியர்.

  இளமை சதிராடும் தோட்டம்
  காயும் கனியானதே
  இனிமை சுவை காணும் உள்ளம்
  தனிமை உறவாடுதே
  ஜாடை சொன்னது என் கண்களே
  வாடை கொண்டது என் நெஞ்சமே
  குயிலே அவரை வரச்சொல்லடி
  இது மோகனம் பாடிடும் பெண்மை
  அதைச் சொல்லடி

  'பருவச் செழிப்போடு இருக்கும் என் மனம் என்னும் மலர் காதல் பனியில் நனைந்தால் எப்படியெல்லாம் சிரிக்கும் தெரியுமா... எப்படியெல்லாம் நினைக்கும் தெரியுமா... மெல்லத் துள்ளும் என் அங்கத்தை அள்ளிக்கொள்ள இதுவே நேரம் இல்லையா... என் பிறப்புக்கே அர்த்தம் சொல்ல அவன் வரக்கூடாதா... நான் அப்படியொரு பருவச் செழிப்போடு மலர்ந்து பனியில் நனைந்து காதல் சுமையில் நடுங்குகிற யவ்வனமான முல்லைப் பூ என்று சொல்லடி' என்பது இரண்டாவது சரணம். இந்தச் சரணம் வேறொரு சந்தத்தில் இருக்கும்.

  பருவச் செழிப்பினிலே
  பனியில் நனைந்த மலர்
  சிரிக்கும் சிரிப்பென்னவோ
  நினைக்கும் நினைப்பென்னவோ
  மெல்ல மெல்ல
  அங்கம் எங்கும் துள்ள துள்ள
  அள்ளிக்கொள்ள
  என்னை வெல்ல இதுதானே நேரம்
  அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
  இது யவ்வனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி

  'வாழ்வில் மின்னல்போல் வந்தது யாரோ யாரோ' என்ற கதறல்தான் இந்தப் பாடல் நம்மை முழுதாகக் கட்டிப் போடப் பயன்பட்டக் கயிற்று வரி. ஒரு பாடலில் இவ்வாறு அமையும் பொன்வரிதான் அந்தப் பாடலையே ஜீவனுள்ளதாக்குகிறது. 'இந்தத் தேன்மலர் வாடுது என்று சொல்லேன்டி...' என்று மூன்றாம் சரணம் முடிகிறது.

  என்னை ஆட்கொண்ட ராகம்
  என்றும் ஒரு ராகமே
  இன்று நான்கொண்ட வேகம்
  என்றும் உனக்காகவே
  வாழ்வில் மின்னல் போல்வந்தது
  யாரோ யாரோ யார் கண்டது
  குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி
  ஒரு தேன்மலர் வாடுது என்று நீசொல்லடி

  நம் மனத்தைக் கொள்ளையடிக்கும் ஜானகியின் குரல் பாடலுக்கு உயிர். இப்பாடலுக்கு ஓடியாடிய யவ்வன ஸ்ரீதேவியின் கருப்புவெள்ளைத் தோற்றம் உள்ளபடியே ஒரு மௌனச்சோகத்தைக் காட்சிப்படுத்திவிட்டது.
  இந்தக் கட்டுரையைப் படித்துமுடித்தவுடன் சிரமம் பாராமல் இந்தக் காணொளி இணைப்பையும் பார்த்து கேட்டுவிட்டு அகல்க ! இதுகாறும் இந்தப் பாடல் உங்களுக்குப் புலப்பட்டதை விடவும் மேலதிகப் புலப்பாட்டை உங்களுக்குள் நிகழ்த்தும். அதை இழக்கக் கூடாதல்லவா ?

  என் 'பாட்டுத்திறம்' நூலிலுள்ள கட்டுரையின் ஒரு பகுதி.

  - கவிஞர் மகுடேசுவரன்

  English summary
  Poet Magudeswaran's tribute to late legend Panchu Aranachalam.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X