Society Paavangal.. பரிதாபங்கள் கோபி - சுதாகர் எப்போதும் அவசியமானவர்கள்.. ஒரு ராயல் சல்யூட்
சென்னை: பரிதாபங்கள் யூடியூப் சேனல் நடத்திவரும் கோபியும், சுதாகரும்தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஹெட்லைன்ஸாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் செய்த சம்பவம் அப்படி. அண்மையில் திருநெல்வேலியில் கவின் என்ற இளைஞரை சுர்ஜித் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்தார். அதனையடுத்து ஆதிக்க சாதியினர் தனது சாதியில் இருக்கும் இளைஞர்களை மூளை சலவை செய்து எப்படி கொலைகாரர்களாக மாற்றுகிறார்கள் என்பதை யாருக்கும், எதற்காகவும் அஞ்சாமல் தங்களது வீடியோ மூலம் வைத்து செய்துவிட்டார்கள்.
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காலம் இது. ஒரு யூடியூப் சேனல் வைத்து அதில் தனது திறமையை நிரூபித்தால் பிரபலமாகிவிடலாம் என்ற நிலை இருக்கிறது. அதனை பயன்படுத்தி பலரும் பலவிதமாக செயல்பட்டு பிரபல்யத்தை தேடிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில். வெகுசிலர் மட்டுமே சமூக அக்கறையுடன் இருக்கிறார்கள். அவர்களில் இருவர்தான் கோபியும், சுதாகரும்.
யார் இவர்கள்?: கோபியும், சுதாகரும் திருச்சியில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். அப்போதிருந்தே இரண்டு பேரும் சேர்ந்து ஸ்டாண்ட் அப் காமெடி செய்வது வழக்கம். காலேஜில் கிடைத்த வரவேற்பு அவர்களுக்கு தெம்பு கொடுக்க; அந்த தெம்புடன் சென்னைக்கு பஸ் ஏறினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உடனடியாக கிடைக்காமல்; அவமானங்கள் கிடைத்தன. அதனை கண்டு துவளாமல் தொடர்ந்து முயன்று மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் தங்களது காமெடி வீடியோக்களை பதிவேற்றி முன்னேற தொடங்கினார்கள்.
யாரு படம்னாலும் ஹீரோஸ்தான்: பிறகு பரிதாபங்கள் சேனலை தொடங்கினார்கள். இவர்களது காமெடி அனைவரையும் கவர்வதற்கு காரணம்; சமூகத்தில் நடக்கும் விஷயங்கள், வீட்டில் நடக்கும் விஷயங்கள் என அனைத்தையுமே அச்சு பிசாகமல் எதார்த்தத்துடன் வீடியோவில் வைப்பதுதான். அப்படி அவர்கள் செய்த ஏராளமான வீடியோக்கள் காலங்கடந்து நிற்கக்கூடியவை. தமிழ்நாட்டில் வடநாட்டினரின் வருகை அதிகரித்திருப்பது, இன்னும் சில வருடங்களில் மனிதர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என அஞ்சப்படும் ஏஐ என இப்போதைக்கு என்னவெல்லாம் நாம் பார்க்கிறோமோ அதெல்லாம் இவர்களது கச்சாப்பொருள்.

லட்டு மேட்டரை உடைத்த பரிதாபங்கள்: யூடியூப் சேனல் நடத்துபவர்கள் அரசியல் ரீதியான கொள்கைளை விமர்சிப்பது, அரசியல் தலைவர்களை இமிடேட் செய்வது, மதங்கள், சாதிகளை வைத்து நடக்கும் ஆதிக்க அடக்குமுறைகள், கொலைகள் ஆகியவைகளை பற்றி பெரிதாக பேசமாட்டார்கள். ஆனால் இவர்கள் அதில் விதி விலக்கு. திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டதை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள்.
அது பட்டித்தொட்டியெங்கும் பரவியது. ஆனால் தங்களுக்கு வந்த மிரட்டல் காரணமாக அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டார்கள். அவர்கள் டெலிட் செய்தாலும் அந்த அட்டெம்ப்ட்டை செய்ததற்காகவே அவர்களை கண்டிப்பாக மதிக்கத்தான் வேண்டும். ஏனெனில் இங்கு முதல் அடி எடுத்து வைப்பவர்களுக்குத்தான் மரியாதை என்பது இயற்கை வகுத்து வைத்திருக்கும் நியதி.

இப்போதைய சம்பவம்: சூழல் இபடி இருக்க சமீபத்தில் கவின் என்ற பட்டியலின இளைஞர் தனது அக்காவை காதலித்ததால் அவரை சுர்ஜித் என்ற இளைஞர் வெட்டி ஆணவ படுகொலை செய்தார். தமிழ்நாடே கொந்தளித்தது. சாதி மறுப்பாளர்கள், அவர்கள் ஏறும் மேடைகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என அத்தனை பேரும் கொதித்தெழுவார்கள் என்று எதிர்பார்த்தால்; அவர்கள் சைலெண்ட் மோடுக்கு போய்விட்டார்கள். கோபியும், சுதாகரோ நாங்கள் இருக்கோம் என்று முன் வந்தார்கள்.
Society Paavangal: யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு சப்ஸ்க்ரைபர்கள்தான் கடவுள்கள். அவர்கள் இருந்தால்தான் வண்டி ஓடும். கோபியும் சுதாகரும் வெளியிட்ட சொசைட்டி பாவங்கள் ஆதிக்க சாதியினரின் அட்டூழியங்கள், அவர்களின் அறியாமை, வெட்டி பந்தா, சாதியில் இருக்கும் இளைஞர்களை மூளை சலவை செய்து கொலைகாரர்களாக மாற்றுவது என அத்தனையையும் அடித்து நொறுக்கியது. ஒவ்வொரு கேரக்டர், வசனம் என அத்தனையும் சம்மட்டி அடிதான். இந்த மரண அடி வீடியோவை அதே ஆதிக்க சாதி வெறி பிடித்தவர்களும் பார்த்திருப்பார்கள். அவர்கள் இவர்களுக்கு சப்ஸ்க்ரைபர்களாக இருந்து அன் சப்ஸ்க்ரைப் செய்யக்கூட வாய்ப்புண்டு.
அதேபோல் திருப்பதி லட்டு வீடியோவுக்கு வந்த மிரட்டல்களைவிடவும் இந்த வீடியோவுக்கு அதிகம் மிரட்டல்கள் வரும். ஏனெனில் அவர்கள் தொட்டிருப்பது கொடிய விஷ ஜந்துக்களின் இன்னொரு வெர்ஷனை. மீண்டும் கொத்துவதற்கு அவைகள் வரலாம். ஆனால் அதையெல்லாம் நினைத்து பயப்படாமல் துவைக்க துவைக்க அடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக அவர்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். ஒரு கலை என்பது சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடியது. தான் வாழும் வாழ்க்கை சொல்லிக்கொடுக்காத அனுபவத்தையும், விழிப்புணர்வையும் கலை கொடுக்கும்.

எப்போதும் அவசியமானவர்கள்: அதனை சரியாக புரிந்துகொண்டு செயல்படும் கலைஞர்கள் இப்போதெல்லாம் ரொம்பவே குறைந்து போய்விட்டார்கள். அதிலும் யூடியூப் போன்ற பெரிய தளத்தில் அப்படி இருப்பதெல்லாம் ரொம்பவே அரிதுதான். அந்த அரிதானவர்களில் இணைந்திருக்கிறார்கள் GOSU. இந்த வீடியோவை பார்த்து அனைவருக்கும் விழிப்புணர்வு வந்திருக்குமா என்றால் இல்லைதான். ஆனால் விழிப்புணர்வுக்கான, சமூக பொறுப்புக்கான முதல் அடியை எடுத்து வைக்க தொடங்குவார்கள்.
அதுமட்டுமின்றி இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களது நன்கொடையை அந்த சேனலுக்கு வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். தான் மட்டும் முன்னேறாமல், பக்குவப்படாமல் சமூகத்தில் சீரழிந்து கொண்டிருப்பவர்களையும் முன்னேற்றி, பக்குவப்பட வைப்பதுதான் உன்னத கலைஞர்களின் வேலை. அந்த கலைஞர்கள் எப்போதுமே இச்சமூகத்துக்கு அவசியப்படுவார்கள். அப்படித்தான் பரிதாபங்கள் கோபி, சுதாகரும் அவசியப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்டும், வாழ்த்துகளுடன் பூங்கொத்தும்..


Click it and Unblock the Notifications











