செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே.. மாயக்குரலின் சொந்தக்காரி.. எஸ். ஜானகி பிறந்தநாள் இன்று!
சென்னை : நம் ஒவ்வொரு காலை பொழுதையும் புத்தம்புது காலையாக மாற்றிய ஜானகியம்மாவின் பிறந்தநாள் இன்று.
தென்னிந்திய இசை வரலாற்றில் மறுக்க முடியாத ஒரு அங்கம் நம் ஜானகியம்மா. எத்தனை சாதனைகள், விருதுகள், பாடல்கள் இதை கணக்கிடவே ஒரு நாள் போதாது. இவர் ஆந்திர மாநிலமான குண்டூர் பகுதியில் ஒரு கிராமத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஒன்பதாம் வயதில் மேடையேறி பாட ஆரம்பித்தார். ஒரு நாதஸ்வர வித்துவானிடம் அடிப்படை இசையை கற்றார்.

1959ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை திருமணம் செய்தார். அவர் ஜானகியம்மாவின் இசை வாழ்க்கைக்கு துணையாக நின்றார். 1957ல் விதியின் விளையாட்டு எனும் தமிழ் திரைப்படத்தில் தனது முதல் குரலை பதித்தார். தனது முதல் வருடத்திலேயே ஆறு மொழிகளில் பாடினார். இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.

தமிழ் இசையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார். நிச்சயம் இன்னும் பல வீடுகளில் இவரின் பாடல்கள்தான் எத்தனையோ நபர்களின் தனிமையை போக்கும் துன்பங்களை தீர்க்கும் மருந்தாக இருக்கிறது. மிக தெளிவான குரல் அழகான ராகங்களை தொடுக்கும் குரல் இதுதான் அனைத்து வயதினரையும் ஈர்க்க காரணம்.

இவர் பல தேசிய விருதுகள்,கலை மாமணி போன்ற 32 விருதுகள் வாங்கியுள்ளார். 2013ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை வாங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. இவர் பதினேழு மொழிகளுக்கும் மேல் 48,000 பாடல்கள் பாடியுள்ளார். இது இவரின் மிகப்பெரிய சாதனையாகும்.
தற்போது உள்ள பின்னணி பாடகர்கள் அனைவருக்கும் ஜானகியம்மா நிச்சயம் ஒரு முன்னோடிதான். இன்னும் பலரால் போற்றப்படும் ஜானகியம்மா கடைசியாக மைசூரில் 2017ஆம் ஆண்டு பாடினார். அவர் பிறந்தநாளான இன்று வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications











