எஸ்.பி. பாலசுப்ரமணியம் எனும் எனர்ஜி பூஸ்டர்.. அழியாத மகா கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
சென்னை: தமிழ் திரையிசை பாடல்களில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பங்கு எப்போதுமே மறக்க முடியாதது; மறுக்க முடியாதது. 16 மொழிகளில் மொத்தம் 50,000க்கும் மேற்பட்ட பாடல்கள்வரை பாடியிருக்கும் அவருக்கென்று பல தலைமுறையினர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் தன்னுடைய 74ஆவது வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க இன்று அவருக்கு 79ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா எத்தனையோ பாடகர்களை கண்டிருக்கிறது. அவர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்துவமானவர். ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட அவருக்கு சிறு வயதிலிருந்தே பாடல்கள் பாடுவதில் அலாதி பிரியம். அதன் காரணமாக முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்தார். காலம் செல்ல செல்ல 1966ஆம் ஆண்டு தெலுங்கு படமான ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா என்ற படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை நிரூபித்ததன் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவானது.
தமிழில் எஸ்பிபி: தெலுங்கு திரையுலகத்தில் தனது பாடல் பயணத்தை தொடங்கினாலும் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது என்றால் தமிழ் திரையுலகம்தான். முதலில் அவர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் தமிழ்ல் பாடல் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு சென்றார். ஆனால் அப்போது பாலுவுக்கு தமிழ் சரியாக வராததன் காரணமாக எம்.எஸ்.வி திருப்பி அனுப்பிவிட்டார். அதனையடுத்து முறையாக தமிழையும் கற்றுக்கொண்ட அவர் வரிசையாக பாடல்கள் பாடி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தமிழில் உருவாக்கினார்.

ராஜா, ரஹ்மான் கோட்டையில்: பாலசுப்ரமணியம் இளையராஜாவின் கோட்டையில் முக்கியமான தளபதியாக விளங்கினார். இரண்டு பேரும் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே பழக்கமானார்கள். ராஜா இசையமைத்த பல பாடல்களை தனது குரல் மூலம் அடுத்தக்கட்டத்துக்கு பாலசுப்ரமணியம் எடுத்து சென்றார். அதேபோல்தான் ஏ.ஆர்.ரஹ்மானிடமும் இருந்தார் பாலு. இப்படி ராஜா, ரஹ்மான் ஆகிய இரு பெரும் ஆளுமைகளுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார் அவர்.
என்ன ஸ்பெஷல்: பாடகர்களின் குரல் என்றாலே ஸ்பெஷல்தான். அதிலும் எஸ்பிபியின் குரல் என்றால் கூடுதல் ஸ்பெஷல். அவரால்தான் ஒரு ஆண் வெட்கப்படுவதை, சிரிப்பதை போகிற போக்கில் தனது குரலில் கொண்டு வந்து நிறுத்த முடியும். அதேபோல் ஒரு பாடலை பாடினால் அந்தப் பாடலின் மெட்டுக்கும், கதையின் தன்மைக்கும் தகுந்தவாறு தன்னுடைய குரலை மாற்றி மாற்றி கையாள்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரது குரலை கேட்டாலே நம்மையே அறியாமல் ஒரு எனர்ஜி, வைப் நமக்குள் தொற்றிக்கொள்ளும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு எனர்ஜி பூஸ்டராகவே ரசிகர்களுக்கு திகழ்ந்தார்.
ஈகோ இல்லாதவர்: அதேபோல் எந்தவித ஈகோவும் இல்லாமல் எல்லோரிடமும் பழகக்கூடியவர். அவர் ஜானகி அம்மாவிடம் குறும்புடன் நடந்துகொள்வதை பார்த்தால் ஒரு தாயிடம் மழலை விளையாடுவது போன்று பார்ப்பதற்கு அவ்வளவு ரசனையாக இருக்கும். ஜானகி அம்மாவிடம் மட்டுமின்றி மனோ, சித்ரா என பல பின்னணி பாடகர்கள், பாடகிகளிடம் ஒரு சகோதரனாக, தந்தையாக, நண்பனாக பழகியிருக்கிறார். இதன் காரணமாக அவர் மீது எக்கச்ச மரியாதையை பலரும் வைத்திருந்தார்கள்.
நடிப்பிலும் கிங்தான்: பொதுவாக பின்னணி பாடகர்கள் தன்னுடைய கம்ஃபோர்ட் ஸோனை விட்டு வெளியே வர யோசிப்பார்கள். ஆனால் பாலசுப்ரமணியம் அப்படி இல்லை. பாடுவது மட்டுமின்றி மற்ற துறைகளிலும் தன்னை நிரூபித்திருக்கிறார். காதலன், அவ்வை சண்முகி, உல்லாசம் என பல படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர் சிகரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி தனி கவனத்தை ஈர்த்தவர். பாடுவது, இசையமைப்பது, நடிப்பது என பல முகங்களை கொண்ட அவரை பலரும் பிரமிப்போடுதான் பார்ப்பார்கள்.
எப்போதும் அழிவில்லை: பாலசுப்ரமணியம் என்றாலே அவரது வாஞ்சையான பேச்சும், கவரக்கூடிய குரலும், சிரித்த முகமும்தான் எப்போதும் நியாபகத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். இன்னும் எத்தனை தலைமுறையினர் வந்தாலும் பாலசுப்ரமணியத்தின் குரல் ரசிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும் பாலசுப்ரமணியம் அடைந்த இடத்தை பிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதேபோல் பலரும் அவரைத்தான் தங்களது ஆதர்ச ஹீரோவாகவும் எடுத்துக்கொள்வார்கள். எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று அவர் பாடியதுபோலவே; அவரது தேகம்தான் மறைந்திருக்கிறதே அவரது குரலுக்கு அழிவு என்பது ஏது; அழிவில்லாத பனி குரலோனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











