twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்றைய 'டாப்' கதாநாயகிகளுடன் 'ஹாட் ட்ரிங்க்ஸ்' சாப்பிட்டவன் நான் - கவிஞர் வாலி கலகல பேட்டி

    By Shankar
    |

    Vaali and Kushboo
    வசந்த் தொலைக்காட்சியின் 'வாலி 1000′ என்ற சிறப்பு நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பல தலைமுறைகளைக் கடந்து சாதனை புரிந்து வரும் கவிஞர் வாலியை, அவருடன் பழகியவர்கள், பணியாற்றுபவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பேட்டி காண்கிறார்கள். கூடவே வாலியின் தேர்ந்தெடுத்த 1000 பாடல்களை சாதகப்பறவைகள் சங்கர் குழுவினர் பாடுகிறார்கள்.

    மருதுசங்கர் இயக்கும் இந்நிகழ்ச்சியின் நிர்வாகத் தயாரிப்பாளர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி. ஜனவரி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட் vs வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்காக ஏவி.எம் ஸ்டூடியோவில் கண்ணைக் கவரும் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துவருகிறது. பிரபலங்கள் ஏ.வி.எம் சரவணன், இயக்குனர்கள் எஸ்பி.முத்துராமன், மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, கார்டூனிஸ்ட் மதன், கதிர், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம்.

    இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

    வாலியின் அறிமுக உரைக்குப் பிறகு, கேள்வி பதில் ஆரம்பமானது.

    இந்த நிகழ்ச்சியில் எத்தனையோ பேருடன் சந்திப்பு இருப்பதாக சொன்னீர்கள். கலைஞரைச் சந்திப்பீர்களா…

    ரொம்ப அருமையான கேள்வி. 45 ஆண்டுகால நட்பு எனக்கும் கலைஞருக்கும். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அதேநேரம் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து நட்பு பாராட்டாதவன். இன்றைக்கும் கலைஞருடன் என் நெருக்கமான நட்பு தொடர்கிறது. நான் கூப்பிட்டால் கலைஞர் கட்டாயம் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்.

    ஆனால் இதுவரை இந்த நிகழ்ச்சியில் பல நடிகர், நடிகைகள், இலக்கியவாதிகள் என பலரும் என்னுடன் கலந்துரையாடினார்கள். ஆனால் இவர்கள் யாரையும் நான் நேரடியாக அழைக்கவில்லை. என் மீது உள்ள அன்பினால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்ததும் வந்தார்கள். ஆனால் நானே அழைக்க வேண்டிய சூழல் வந்தால், நிச்சயம் கூப்பிடுவேன்.

    'நினைவு நாடாக்கள் தொடரில் எழுதியதைப் போல இந்த வாலி 1000 நிகழ்ச்சியிலும் ஒளிவு மறைவில்லாமல் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

    நிச்சயமாக. அதைவிட 200 சதவீதம் ஒளிமறைவில்லாமல் பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறேன். அன்றைய முன்னணி கதாநாயகிகளுடன் அமர்ந்து நான் மது அருந்தியது உள்பட. ஆனா இப்ப அதெல்லாம் இல்ல.

    கண்ணதாசனுக்கும் எனக்குமான உறவு, எம்ஜிஆர், கலைஞர் என அரசியல் ஜாம்பவான்களுடன் இருந்த நெருக்கம், பிணக்கு என அனைத்தையும் சொல்லியிருக்கிறேன். எனக்கு இதில் தயக்கமில்லை. இனி என்ன இருக்கிறது ஒளித்து மறைக்க!

    அன்றைய கவிஞர்கள் அரசர்களை வாழ்த்தியது மட்டுமல்ல, குறைகளை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. ஆனால் பெரிய கவிஞரான உங்களால் அப்படிச் சொல்ல முடிந்ததா.. ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் ரங்கநாயகி என்று புகழ்ந்து கவிதை எழுதினீர்களே?

    இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டித்தான் அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். அதற்காக நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாதே…

    எம்ஜிஆரைப் பார்க்கும் வரை நான் சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தேன், அவரைப் பார்த்தபிறகு சோற்றில் கைவைக்கக் கூட நேரமில்லாமல் போய்விட்டது என நீங்கள் முன்பு சொன்னீர்களே….

    இல்லை. அது எம்ஜிஆருக்காக நான் சொல்லவில்லை. உண்மையில் எம்ஜிஆர்தான் என்னை வாழ வைத்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் படங்கள்தான் என்னை புகழில் உட்கார்த்தி வைத்தன. ஆனால் எம்எஸ் விஸ்வநாதன்தான் அதற்கும் காரணம். ஏனென்றால் நான் எம்ஜிஆருக்கு நல்லவன் வாழ்வான் படத்திலேயே பாடல் எழுதினேன். ஆனால் அவருக்கு என்னை நினைவில்லை. அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து எம்எஸ் விஸ்வநாதன்தான் எனக்கு எம்ஜிஆர் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். என் பாட்டைக் கேட்டு, உடனே எம்ஜிஆர் கூப்பிட்டார். என் வாழ்க்கை பிரகாசமானது. அதனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த வாக்கியத்தை நான் எம்எஸ் விஸ்வநாதனுக்குதான் சொன்னேன். இதை பின்னர் ரஜினி அவர்கள் தன் குரு பாலச்சந்தரைக் குறிப்பிட பயன்படுத்திக் கொள்ளட்டுமா என என்னைக் கேட்டு பயன்படுத்திக் கொண்டார்.

    கடற்கரையில்லாத பகுதியில், ஒரு நகர்ப் புற வாழ்க்கையை அனுபவித்த உங்களால், மீனவர் வாழ்க்கையை அத்தனை துல்லியமாக சொல்ல முடிந்தது எப்படி?

    வாழ்க்கையில் துன்பம் என்பதன் பரிமாணம் ஒருவருக்கொருவர் சற்று வித்தியாசப்படலாம். ஆனால் அடிப்படையில் கஷ்டம் ஒன்றுதானே. அடுத்தவர் கஷ்டத்தை உணரும் மனசிருந்தா போதும். அது வார்த்தைகளில் வெளிப்படும். எதையும் பார்க்காமல் கேட்காமல் படிக்காமல் இருந்தால் எந்தக் கவிஞனுக்கும் ஒன்றும் தெரியாமலே போய்விடும். அப்படி கேட்டும் படித்தும் எழுதியதுதான் 'தரைமேல் பிறக்க வைத்தான்…."!

    கண்ணதாசனுக்கும் உங்களுக்கும் தொழில் ரீதியாகப் போட்டியிருந்ததுண்டா?

    சினிமா என்பதே அணா பைசா கணக்குதானே. நானும் கண்ணதாசனும் சமகால கவிஞர்கள். ஒரு ஆண்டு நான் 45 படங்களுக்கு பாட்டெழுதினேன். அவர் 24 படங்களுக்குத்தான் எழுதியிருந்தார். அதற்காக அவரை விட நான் பெரிய கவிஞன் என்று எண்ணிக் கொள்ளவும் இல்லை. அவர் என்னை போட்டியாளன் என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. சொல்லப்போனால் எந்த சபையிலும் என்னை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. அதுதான் கண்ணதாசனின் பெருந்தன்மை!

    பல பாடல்கள் இன்றைக்கும் எது கண்ணதாசன் எழுதியது, எது வாலி எழுதியது என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறுகிறார்கள். இது உங்களை வருத்தப்பட வைத்திருக்கிறதா…

    இல்லை. தங்கத்தோடுதானே என்னை ஒப்பிட்டார்கள். தகரத்தோடு இல்லையே! கண்ணதாசன் பாடல்களுக்கு இணையாக என் பாடல்களைச் சொல்கிறார்கள் என்றால்… அதைவிட ஒரு பெருமை உண்டா. நண்பர்களே- உங்களில் பலர் கண்ணதாசன் உயிரோடு இருந்த காலத்தைப் பார்க்காதவர்கள். அந்த நாளில் இருந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

    கண்ணதாசனின் பாதிப்பு உங்கள் பாடல்களில் இருந்தது என்கிறீர்களா?

    பட்டுக்கோட்டைதான் எங்கள் இருவரையுமே பாதித்தவர். எனக்கு ஆரம்ப நாளிலிருந்தே பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளில் மயக்கம் அதிகம். ஆனால் பட்டுக்கோட்டை பாமரத் தமிழில் எழுதி மனதை ஆக்கிரமித்தார். பின்னாளில் கண்ணதாசன் அதை பக்குவமான தமிழில் தந்தார். அந்தத் தமிழை நானும் காதலித்தேன். அந்த பாதிப்பு நிச்சயம் என் பாடல்களில் இருக்கும். அப் கோர்ஸ், கண்ணதாசன் பாதிப்பு இல்லாதவர்கள் யார்?

    15000 பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள். இவற்றில் எந்தப் பாட்டிலாவது நீங்கள் முன்பு எழுதிய அதே வரியை அல்லது கருத்தை திரும்ப எடுத்தாண்டிருக்கிறீர்களா…

    ஒரு பாட்டில் அல்ல…. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பாடல்களில் அப்படி எடுத்தாண்டிருப்பேன்!

    தேசிய விருது பெற்ற ஒரேயொரு கிராமத்திலே, மகுடி போன்ற படங்களுக்குப் பின் நீங்கள் கதை வசனம் எழுதியதை நிறுத்திக் கொண்டீர்களே… ஏன்?

    இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல… கிட்டத்தட்ட 19 படங்களுக்கு நான் கதை வசனம் எழுதியிருக்கிறேன். நீங்கள் இந்த இரண்டைத்தான் சொல்கிறீர்கள்.

    இல்லை.. இந்தப் படங்களுக்குப் பிறகு எழுதவில்லையே என்று கேட்டேன்…

    ஆமா.. அதற்குப் பிறகு எழுதவில்லை. காரணம், நடிப்பு, தொடர்கள், வசனம் என என்ன எழுதினாலும், என்னை ஒரு கவிஞனாக அடையாளம் காண வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

    திமுக மீது மட்டும் உங்களுக்கென்ன தனி பாசம்…

    ஏன்னா… அது ஒண்ணுதான் தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கிற கட்சி. தமிழறிஞர்கள் சொல் சபையேறும் என்றால் அது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

    அப்படின்னா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் அப்படி நடக்கவில்லையா…

    உண்மைதான். அவரும் தமிழுக்கு அபார முக்கியத்துவம் கொடுத்தார். அவரும் நானும் 25 ஆண்டுகாலம் கட்டிப் புரண்டவர்கள். ஆனால் அவரும்கூட திமுகதான். மனதளவில் திமுகதான்.

    இன்றைய கவிஞர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன…

    அற்புதமாக எழுதுகிறார்கள். விகடனுக்காக முன்பு வாலி 80- என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தயாரித்தார்கள். அதில் இன்றைய கவிஞர்கள் அத்தனை பேரும் என்னுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    இன்றைய முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் உங்கள் வீட்டுக்கே வந்து காத்திருந்து பாடல் வாங்கிச் செல்கிறார்கள். இளையராஜா, ரஹ்மான் கூட வீட்டுக்கு வந்து பாடல் வாங்கியதாக கூறியிருந்தீர்கள்…

    உண்மைதான். அது அவர்கள் என் தமிழ் மீதும் என் மீதும் வைத்துள்ள அன்பின் அடையாளம். ஒருநாள் ரஹ்மான் என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்தார். என்னால் போக முடியவில்லை. மாலை 6 மணிக்கு வந்து வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டேன். வருகிறேன் என்றார். பின்னர் 6 மணிக்கு பழனிபாரதி வருவதாக சொல்லியிருந்ததால், இரவு 9 மணிக்கு மேல் வரமுடியுமா என்று கேட்டேன். அவரும் அப்படியே வந்தார். இரவு நோன்பைக்கூட என் வீட்டில்தான் முடித்தார். எனக்கு பழனிபாரதியும் முக்கியம், ரஹ்மானும் முக்கியம். அந்த இருவரும் என்மீது வைத்துள்ள அன்பு ஒன்றுதான். இளையராஜாவும் என் வீட்டுக்கே வந்து பாடல் வாங்கியதுண்டு. அதற்கு என் வயது மட்டுமல்ல, அதைத் தாண்டிய அன்புதான் காரணம்!

    இந்த நிகழ்ச்சியில் குஷ்பு உங்களை பேட்டி எடுத்ததாக சொன்னீர்கள்… இது உங்கள் விருப்பமா அல்லது தயாரிப்பாளர் விருப்பமா…

    எனக்கென்னய்யா விருப்பம் இதில். தயாரிப்பாளர் விருப்பம். அது ஒரு பக்கமிருக்கட்டும். குஷ்பு உண்மையிலேயே நல்ல ஞானம் உள்ளவர். ஆர்டி பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால், உஷா கன்னா, பப்பிலஹரி என பல இந்தி இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றிய தமிழ்க் கவிஞன் அநேகமாக நானாகத்தான் இருப்பேன். அந்த அனுபவங்களைத்தான் குஷ்பு மூலம் என்னிடம் கேட்க வைத்தார்கள். வாசகர்களுக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை இதில் சொல்லியிருக்கிறேன்.

    -இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    Vasanth TV is going to telecast an interesting programme titled Vaali 1000 from January. In this programme the top personalities of Kollywood have participate and chat with Vaali. Sadhaga Paravaigal, popular music orchestra of the City is going to perform 1000 selected songs of the poet in the programme.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X