நாளை போக்கிரி விழா!
இளைய தளபதி விஜய்யின் போக்கிரி படத்தின் வெள்ளி விழா நாளை சென்னையில் கொண்டாடப்படுகிறது.
தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் போக்கிரி. தமிழில் அதே பெயரில் விஜய், ஆசின் நடிக்க ரீமேக் ஆனது. இங்கும் பெரும் வெற்றியை பெற்றது போக்கிரி.175 நாட்களைத் தாண்டி போக்கிரி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து போக்கிரி படத் தயாரிப்பாளர்கள் விழா எடுக்கின்றனர்.
நாளை மாலை 4.30 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் போக்கிரி விழா நடைபெறுகிறது. நடிகை சினேகா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
விழாவுக்கு கே.பாலச்சந்தர் தலைமை தாங்குகிறார். கலைஞானி கமல்ஹாசன் போக்கிரி படத்தில் நடித்த கலைஞர்களுக்கு கேடயம் வழங்கிப் பேசுகிறார்.
போக்கிரி பட இயக்குநர் பிரபுதேவா, நடிகர் சத்யராஜ் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
விழாவையொட்டி டான்ஸ் மாஸ்டர் கலாவின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முன்னணி நடிகைகளான நமீதா, மாளவிகா, கிரண், சாயாசிங், தேஜாஸ்ரீ ஆகியோர் அட்டகாச ஆட்டத்தைக் கொடுக்கவுள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் விஜய் நடித்த படங்களின் பாடல்கள் இசைக்கப்படவுள்ளன.
போக்கிரி வெற்றி விழாவை நடிகை சொர்ணமால்யாவும், லொள்ளு சபா சந்தானமும் தொகுத்து வழங்குகின்றனர்.
நிகழ்ச்சிக்கு வரும் விஜய் ரசிகர்களுக்காக செமையான பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











