பிரபு சாலமன் படத்தில் நடிக்கும் பிரபல அரசியல்வாதி.. அடுத்த மாசம் ஷூட்டிங்காம்!
சென்னை: பிரபல பேச்சாளரான நாஞ்சில் சம்பத் பிரபு சாலமன் படத்தில் கமிட்டாகியுள்ளார்.
பிரபல அரசியல்வாதி, பிரபல பேச்சாளர், நடிகர் என வலம் வருபவர் நாஞ்சில் சம்பத். சம்பத் என்ற பெயரை கொண்ட இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்.
ஊரின் பெயரை குறிக்கும் வகையில் நாஞ்சில் என பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார். மதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நாஞ்சில் சம்பத், தனது அனல் பறக்கும் பேச்சால் பெரும் பிரபலமானார்.

கணீர் குரலில் கட்டிப்போட்டு விடுவார்
அவரது பேச்சை கேட்பதற்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தூய தமிழில் கவித்துவமாகவும் கோர்வையாகவும் கணீர் குரலில் பேசி எவ்வளவு பெரிய கூட்டத்தையும் கட்டிப் போட்டு விடுவார் நாஞ்சில் சம்பத்.

இன்னோவா கார் கொடுத்த ஜெயலலிதா
2012ஆம் ஆண்டு மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு முக்கிய பதவி கொடுத்து கட்சியில் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா காரையும் கொடுத்து அழகு பார்த்தார்.

கட்சியில் இருந்து விலகல்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெரும் அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் இருந்தார் நாஞ்சில் சம்பத். விகே சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத். தமிழக அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

திமுகவுக்கு ஆதரவு
ஆனால் அடுத்த ஓரிரு நாட்களிலேயே மீண்டும் கட்சியில் இணைந்தார். பின்னர் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியதால் அதிருப்தியடைந்த நாஞ்சில் சம்பத், கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.

படங்களில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்
தொடர்ந்து திமுக ஆதரவாளராகவும் திமுக பேச்சாளராகவும் உள்ளார் நாஞ்சில் சம்பத். நாஞ்சில் சம்பத் எல்கேஜி மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். எல்கேஜி படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு அப்பாவாக அரசியல்வாதி கேரக்டரில் நடித்தார் நாஞ்சல் சம்பத்.

பிரபு சாலமன் படத்தில்
இதேபோல் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திலும் ஹீரோயின் ஷிரின் காஞ்ச்வாலாவுக்கு அப்பாவாக அரசியல்வாதியாக நடித்தார் நாஞ்சில் சம்பத். இந்நிலையில் நாஞ்சில் சம்பத் மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல இயக்குநரான பிரபு சாலமன் இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

மேடை நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்கிறார் நாஞ்சில் சம்பத். இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் நாஞ்சில் சம்பத். மேடை நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திலேயே தங்கியுள்ளார் நாஞ்சில் சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











