»   »  தீபாவளி படங்கள் - திருப்திகர ஓப்பனிங்!

தீபாவளி படங்கள் - திருப்திகர ஓப்பனிங்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள விஜய்யின் அழகிய தமிழ் மகன், ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்ப் படங்களுடன் சேர்த்து இந்த முறை ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படமும் சென்னையில் திரையிடப்பட்டுள்ளது.

சென்னையில் அழகிய தமிழ் மகன் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ஓம் சாந்தி ஓம் 4 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் படத்துக்கு முதல் நாளிலேயே செமத்தியான ரசிகர் கூட்டம் கூடியது. சென்னை நகரில் மட்டுமல்லாது புறநகர்களிலும் கூட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் படத்தின் முடிவு ரசிகர்களுக்குத் திருப்தி தரவில்லையாம். இதனால் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றுமாறு விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஷாருக்கான் படத்திற்கும் செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளது. மொழி புரியாத பலரும் கூட ஓம் சாந்தி ஓமை ரசித்துப் பார்த்து வருகின்றனர்.

சூர்யா, ஆசின் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள வேல் படத்திற்கும் திருப்திகரமான வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போதைக்கு அந்தப் படத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது. சில தியேட்டர்களில் விஜய் படத்துக்குக் கிடைத்துள்ள அதே அளவிலான பிரமாண்ட வரவேற்பு சூர்யா படத்திற்கும் கிடைத்துள்ளதாம்.

தனுஷின் பொல்லாதவன், ஜீவனின் மச்சக்காரன் படத்திற்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், பி மற்றும் சி சென்டர்களில் விஜய், சூர்யா படம்தான் முதலிடத்தில் உள்ளன. தனுஷ் மற்றும் ஜீவன் படத்துக்கு இங்கு வரவேற்பு சற்று குறைவுதான்.

ராதிகா தயாரிக்க, சத்யராஜ், ராதிகா, சந்தியா, பிருத்விராஜ் நடித்துள்ள கண்ணாமூச்சி ஏனடா படம் ஏ சென்டர்களில் சிறப்பாக ஓடிக் கொண்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் சுமாரான வரவேற்பு காணப்படுகிறது.

ஆக்ரா படம் 6வது இடத்தில் உள்ளது. திங்கள்கிழமை முதல்தான் எந்தப் படத்திற்கு உண்மையான வரவேற்பு கிடைத்துள்ளது, எது முந்துகிறது, எது பிந்துகிறது, எது பம்முகிறது என்பது தெரிய வரும்.

Read more about: cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil